×

கடைக்கண்ணால் கேட்டதை அளிக்கும் காமாட்சி

காமதாயிநீ

நாம் இதற்கு முந்தைய நாமங்களான ஸுதா ஸாகர மத்யஸ்தா என்கிற நாமத்தில் அந்த ஸுதா ஸாகரம் என்கிற ஸ்தானத்தையும், அந்த ஸுதா ஸாகரம் எப்படி நமக்கு பிரத்யட்சமாக காஞ்சிபுரம் என்கிற தலம் இருக்கிறது என்றும் பார்த்தோம். அந்த காஞ்சிபுரத்திற்கு மத்தியில் அம்பிகை இருக்கிறாள் என்பதையும் பார்த்தோம். இந்த காஞ்சிபுரத்தில் அருள்பவளே காமாட்சி என்பதையும் சென்ற நாமத்தில் பார்த்தோம்.

இப்போது இந்த நாமமானது அம்பிகையினுடைய பிரபாவம் எப்படியிருக்கிறது என்பதை இந்த நாமம் சொல்கிறது. காமாட்சி என்கிற சப்தத்திற்கு அர்த்தம் பார்க்கும்போது, தன்னுடைய கண் பார்வையினால் அம்பிகை என்னென்ன செய்கிறாள் என்று பார்த்தோம். அதில் குறிப்பாக காமாட்சி என்பதற்கு மூன்று விதமான அர்த்தங்கள் உள்ளதைப் பார்த்தோம். தன்னுடைய பக்தர்களின் ஆசைகளை நிறைவேற்றி வைக்கிறாள். மன்மதனை கட்டுப்படுத்துகிறாள். காமேஸ்வரனாகிய பகவானின் திருப்திக்காக விருப்பத்திற்காக சகலத்தையும் செய்கிறாள் என்று பார்த்தோம்.

அப்படிப்பட்ட அம்பிகையானவள் காமதாயினியாக இருக்கிறாள். காமாக்ஷி என்பதில் காம – அக்ஷி, தன்னுடைய கடைக்கண் பார்வையிலேயே அனைத்தையும் செய்கிறாள். ஆனால், இங்கு கடைக்கண் பார்வையிலேயே எல்லாமும் நடந்தால்கூட, நாம் ஒரு பெரிய இடத்திற்குப்போய், அது குருவிடமோ, மகான்களிடமோ… நாம் ஏதேனும் கேட்கும்போது அந்த சந்நதி கடாட்சத்தாலேயே நமக்கு எல்லாமுமே நடந்து விடுகிறது. அதாவது சூட்சுமமாக நடந்து விடுகிறது. இப்படியாக மகான்களின் சங்கல்பத்தினாலேயும், கடாட்சத்தினாலேயும் நடந்தால் கூட அவர்கள் கையில் ஏதாவது ஒன்றை கொடுக்க வேண்டும். ஏதாவது ஒன்றை பிரசாதிக்க வேண்டுமென்றுதான் எதிர்பார்க்கிறோம்.

எல்லா காலத்திலேயும், எல்லா இடங்களிலும் மகான்களை தரிசித்திருப்பார்கள். அவர்களின் பார்வையே கூட போதுமானது. இந்தப் பார்வையே போதுமென்று சொல்வதற்கு எத்தனையோ சரித்திரம் இருக்கிறது. அவர்களின் பார்வையானது நோயை நீக்கியிருக்கிறது. அந்தப் பார்வையானது நல்லதை செய்திருக்கிறது. ஏன், ஞானத்தையே கொடுத்திருக்கிறது. ஒரேயொரு பார்வையினால் ஞானமே அடைந்திருக்கிறார்கள். அப்படியெல்லாம் இருந்தால்கூட, அந்த மகான்களின் கையினால் ஏதேனும் ஒரு பிரசாதம் வாங்கினால் எவ்வளவு சந்தோஷப்படுவோம்.

இன்றைக்கும் யோகியோ அல்லது பாபாவின் கைகளால் அளித்த காசு என்றும், கைகளால் அளித்த விபூதி என்று இன்றைக்கும் அந்த குடும்பங்கள் தலைமுறை தலைமுறையாக அதை பாதுகாத்துக் கொண்டு வருகிறார்கள். இப்போது அவர்கள் கையினால் ஒரு பழமோ அல்லது பூக்களோ எது அளித்தாலுமே அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது. அதிலும் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்கிறது. ஏனெனில், நாம் நேராக அருளை ஒரு ஸ்தூல பொருளோடு அவர்களின் ஸ்பரிசத்தோடு சேர்த்தே பெற்றுக் கொள்கிறோம் என்கிற நிறைவு வருகிறது. ஏனெனில், நாம் எல்லாவற்றையுமே இந்த ஸ்தூல பிரபஞ்சத்தில் பார்த்துக் கேட்டு பெற்று பழக்கப்பட்டு விட்டோம். அவர்களின் கடாட்சமானது என்ன செய்கிறது என்கிற சூட்சுமத்தை உணர முடியாது. பார்க்க முடியாது. அதனால்தான் ஸ்தூலமாக ஏதேனும் கிடைத்தால் இன்னும் ஒரு பலபடிகள் மேலே சென்று சந்தோஷப்படுகிறோம்.

அதேபோல் இங்கு காமாட்சியாக கடாட்சம் செய்து விடுகிறாள். எல்லாமுமே நடந்து விடுகின்றது. அது சூட்சுமமாக நடப்பதால் இந்த ஜீவனால் அதை உணர முடியவில்லை. அப்படி உணர முடியாதபோது அம்பிகை என்ன செய்கிறாளெனில், ‘‘உன்னால் அதை உணரமுடியாது. நீ முயற்சிசெய்துதான் உணர வேண்டுமென்று அம்பிகை சொல்லவில்லை’’.

அம்பிகை தாயாக இருப்பதால், கருணையோடு தனக்கான ஸ்தானத்தில் இருந்து இறங்கி வந்து, ‘‘நான் கடாட்சத்தினாலேயே எல்லாவற்றையும் செய்து விடுகிறேனப்பா. ஆனாலும், அதை உணர முடியவில்லையானாலும் பரவாயில்லை. இந்தா…’’ என்று சொல்லி எல்லா விஷயத்தையும் ஸ்தூலமாகவே கையில் கொண்டு வந்து கொடுப்பதானால், அவளுக்கு காமதாயினி என்று பெயர். தாயினி என்றால் தருபவள். காம தாயினி என்றால் நாம் என்னென்னவெல்லாம் வேண்டுகிறோமோ அதையெல்லாம் சூட்சுமமாகவும் நிறைவேற்றி, ஸ்தூலமாகவும் நேரடியாக கொடுக்கிறாள். அதனால், காமதாயினி.

இப்போது இந்த காம தாயினி என்கிற நாமத்தை சொல்லிக் கேட்டால், நாம் வேண்டக் கூடிய எல்லாவற்றையும் சூட்சுமமாக நிறைவேற்றி, ஸ்தூலமாகவும் கொடுப்பாள். வேண்டுவதையெல்லாம் தருபவளாக… வேண்டக் கூடியதையெல்லாம் தருபவளாக அம்பிகை இருக்கிறாள் என்பது இந்த நாமத்தினுடைய வெளிப்படையான அர்த்தம்.

இந்த நாமத்தின் பலனும் இதுதான். நாம் கேட்கக் கூடியதை எல்லாவற்றையும் தரக்கூடியவளாக இருக்கிறாள். ஒரு தாயிடம் உரிமையோடு கேட்டால் எப்படியெல்லாம் தருவாளோ அப்படியெல்லாம் தருவாள். இது ஒரு பக்கம் இருக்கிறது. இது ஒரு பக்கம். காம என்கிற சப்தத்திற்கு இதற்கு முந்தைய நாமாவில் மூன்று விதமான அர்த்தங்களை பார்த்தோம். அதையும் இங்கு கொஞ்சம் நினைவில் கொள்ள வேண்டும். காம என்றால் ஆசை என்று அர்த்தம். இங்கு காம தாயினி என்றால் நாம் கேட்கின்ற அனைத்தையும் அருள்பவளென்று பார்த்தோம்.

இப்போது அதற்கடுத்து காம என்கிற சப்தத்திற்கு மன்மதன் என்று பார்த்தோம். இப்போது காமதாயினி என்கிற நாமத்திற்கு மன்மதன் என்கிற பதத்தைக் கொண்டு என்ன அர்த்தம் வருகின்றது என்பதையும் பார்க்க வேண்டும். வேண்டக் கூடிய, ஆசைப்படக் கூடிய எல்லாவற்றையும் அவள் கொடுக்கிறாள். பொதுவாக இந்த ஆசைகளையெல்லாம் செயல்படுத்தக் கூடியவனாக இருக்கக் கூடியவன் மன்மதன். இவள் ஆசைப்படுவதை எல்லாவற்றையும் கொடுக்கிறாள். எப்போது கொடுக்கிறாளெனில், நாம் சாதாரணமாக இருக்கும்போது இல்லை. நாம் பக்தர்களாகி அவளிடம் சென்று கேட்க வேண்டும். அவளிடம் சென்று கேட்கும்போது நமக்கு கொடுக்கிறாள்.

நமக்கு அம்பிகைபற்றிய நினைவே இல்லாதபோது, நாமே நம்முடைய விஷயங்களை பார்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கும்போதும் பார்த்துக் கொண்டேதான் இருக்கிறாள். நம்முடைய அம்மாவாயிற்றே… என்று கேட்கும்போது எல்லாவற்றையும் கொடுக்கிறாள். அப்படி கொடுக்கும்போது நம்மையும் அறியாமல் இன்னொரு விஷயமும் செய்கிறாள். இந்த ஆசைகளையெல்லாம் செயல்படுத்தக் கூடியவன் மன்மதனல்லவா… அந்த மன்மதனை சிவன் என்ன செய்கிறார். ஞானத்தினால் எரித்து விடுகிறார். அப்படி எரித்தவுடன் அப்படி மன்மதனுக்கு மீண்டும் உயிர் கொடுக்கிறார்.

எதன் மூலமாக உயிர் கொடுக்கிறாரெனில், அம்பாளினுடைய கடாட்சத்தின் மூலமாகத்தான் மன்மதனுக்கு உயிர் கொடுக்கிறார். அப்போது இந்த ஆசைகளையெல்லாம் செயல்படுத்தக் கூடிய மன்மதனை, ஆசை ரூபமாக இருந்த மன்மதனை பகவான் ஞானத்தால் எரித்ததற்குப் பிறகு, அவனை ஞான மன்மதனாக மாற்றி அவனுக்கு மீண்டும் உயிர் கொடுத்தாள் அல்லவா… அதுமட்டுமல்லாது உயிர் கொடுத்து பஞ்சதசாக்ஷரி மந்திரத்திற்கே ரிஷியாக்கினாள் அல்லவா… கர்ம மன்மதனாக ஆசையை செயல்படுத்துபவனாக இருந்தவனை மாற்றி, ஞான மன்மதனாக மாற்றியதால் அவளுக்கு காம தாயினி என்று பெயர்.

இதற்கடுத்து காம என்கிற சப்தத்திற்கு மூன்றாவதாக காமேஸ்வரன் என்று பொருளுண்டு. அப்படிப் பார்க்கும்போது காம தாயினி என்பதில், தாயம் என்றால் சொத்து என்று அர்த்தம். சமஸ்கிருதத்தில் தாயம் என்றால் சொத்து என்று அர்த்தம். நாம் சாதாரணமாக பேசும்போது கூட இதனால் எனக்கென்ன ஆதாயம் என்று கேட்போம். என்ன கிடைக்கும். என்ன சொத்து கிடைக்கும் என்று கேட்போம். உறவுமுறைகளை சொல்லும்போது கூட தாயாதிகள் என்று சொல்கிறோம். பங்காளிகள் என்று சொல்கிறோம் அல்லவா. எனவே, சொத்துகளில் பங்கு உள்ளவர்கள். எனவே, தாயம் என்றால் சொத்து என்று அர்த்தம்.

இங்கு காம தாயினி என்று சொல்லும்போது என்ன அர்த்தமெனில், காமனாகிய காமேஸ்வரனை… யார் தனக்கு சொத்தாக உடையவளோ அவள் காமதாயினி. சரி, ஈஸ்வரனை வந்து அவள் தன்னுடைய சொத்தாக மட்டுமா வைத்திருக்கிறாள் எனில், நாம்போய் அவள் முன்னால் நிற்கும்போது காமேஸ்வரனாகிய தன்னுடைய சொத்தையே நமக்கு கொடுத்து விடுகிறாள். இதற்கு என்ன அர்த்தமெனில், நம்முடைய ஆத்ம சொரூபத்தை நமக்கு காண்பித்துக் கொடுக்கிறாள். நம்முடைய ஆத்ம சொரூபத்தை காண்பித்துக் கொடுக்கும்போது அவள் காமதாயினியாக இருக்கிறாள்.

இப்போது, அம்பிகைக்கு காமேஸ்வரன் சொத்து. காமேஸ்வரனாகிய பகவானுக்கு யார் சொத்து. காமேஸ்வரியாகிய அம்பாள் சொத்து. இப்போது காமேஸ்வரியான அம்பாள் தன்னுடைய சொத்தான காமேஸ்வரனை கொடுத்தால், அவருடைய சொத்தான காமேஸ்வரியும் நமக்குக் கிடைக்கும். அப்போது இங்கு என்ன அர்த்தமெனில், நம்முடைய சித்சக்தியாக இருக்கக்கூடிய அம்பாள்… அந்த சித்சக்தியினுடைய பிரபாவனத்தினால் நமக்கு காமேஸ்வரனான ஆத்ம சொரூபத்தை காண்பித்துக் கொடுக்கிறாள். அந்த ஆத்ம சொரூபத்தை காண்பித்துக் கொடுக்கும்போது நம்முடைய சித்சக்தியின் பிரபாவம் நமக்குத் தெரிகிறது. இங்கு என்ன நடக்கிறதெனில், காமேஸ்வரன் காமேஸ்வரி என்பது வேறு கிடையாது. சிவசக்தி ஐக்கிய சொரூபமே நம்முடைய ஆத்மா என்று காண்பித்துக் கொடுப்பதுதான் அம்பிகை செய்யக் கூடிய மிக உயர்ந்த விஷயம்.

அந்த ஆத்ம ஞானத்தையே தன்னையே கொடுக்கிறாள். அதனால்தான் நாம் இதற்கு முந்தைய நாமாவில் பார்த்தோம். சுந்தர காமாட்சி என்று பார்க்கும்போது, கேட்டதெல்லாம் கொடுத்தால் போதாது என்று சொல்லி, தன்னையே கொடுத்து ஆத்ம சொரூபத்தை நமக்கு உணர்த்துவதால், காமதாயினி.

மீண்டும் ஒருமுறை பார்ப்போமா!

முதலில் நம்முடைய ஆசைகளையெல்லாம் சொல்லி அவள் நிறைவேற்றி வைக்கிறாள். அதனால், காமதாயினி. மன்மதனுக்கே மீண்டும் உயிர்கொடுத்து அந்த மன்மதனையே ஞானமாக்கினாள் அதனால் காமதாயினி. இங்கு ஒரு விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும். கேட்பதையெல்லாம் கொடுக்கிறாள். என்று சொல்கிறோம் அல்லவா. எதுவரையிலும் கொடுப்பாள் எனில், எப்போது கொடுப்பவளும் பெற்றுக் கொள்பவனும் வேறு இல்லை என்கிற ஞானம் வருகிற வரையிலும் நமக்கு கொடுத்துக் கொண்டே இருப்பாள்.

கொடுப்பதும் அவளே, பெற்றுக்கொள்பவளும் அவளே என்கிற உயர்ந்த அந்த ஆத்ம ஞானம் வருகின்றதோ… அல்லது அந்த ஆத்ம ஞானம் என்கிற காமேஸ்வரனை நமக்கு கொடுக்கிறாளோ அதுவரையிலும் அவள் கொடுத்துக் கொண்டே இருப்பாள். கடைசியாக காமேஸ்வரனை கொடுக்கிறபோது, கொடுக்கிறவள்… வாங்குகிறவள்… கொடுத்தல்… என்கிற த்ரிபுடி (பேதங்கள்) இல்லாமல் போய்விடுகிறது. அப்பேற்பட்ட உயர்ந்த நிலையை பிரசாதிப்பதால் அவள் காமதாயினியாக இருக்கிறாள்.

(சுழலும்)

The post கடைக்கண்ணால் கேட்டதை அளிக்கும் காமாட்சி appeared first on Dinakaran.

Tags : Sudha ,Sakara ,Matyasta ,Suda Saccharam ,Suda Saqarah ,Kanchipuram ,Kanjipura ,
× RELATED ஞானத்தின் சிகரமான அம்பிகை