×

வடக்கு கோபுரத்தை கட்டிய அம்மணி அம்மாள்

ஞான தபோதனரை வாவென்று அழைக்கும் அண்ணாமலையால் ஈர்க்கப்பட்ட சித்தர்களும், ஞானிகளும் ஏராளம். அவர்களுள் குறிப்பிடத்தக்க சிறப்புக்குரியவர் அம்மணி அம்மன் எனும் பெண் துறவி.ஆட்சி, அதிகாரம், படை, பணம், பலம் என எதுவும் இல்லாத ஒரு எளிய குடும்பத்தில் பிறந்த பெண் சிவனடியாரான அவர், அண்ணாமலையார் திருக்கோயிலின் 171 அடி உயர வடக்கு கோபுரத்தை நிர்மாணித்தவர். அவரது வரலாறு இன்றைக்கும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.மன்னர்கள் பலர் முயன்றும், நிறைவேற்ற முடியாமல், கைவிடப்பட்டிருந்த அந்த கோபுரத்தை சிவனுடைய அருளாலும், திருநீறு பெட்டி துணையுடனும் ஒற்றைப் பெண்மணியாகக் கட்டுவித்து சாதனை படைத்தவர் அம்மணி அம்மாள்.

சங்க காலத்தில் நன்னன் நாடு என்றழைக்கப்பட்ட செங்கத்துக்கு அருகே, 10 கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது சென்னசமுத்திரம் எனும் சிற்றூர். அங்கு, 1735ம் ஆண்டு அவதரித்தவர் அம்மணி அம்மாள். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் அருள்மொழி. இளம் வயதிலேயே இல்வாழ்வின் மீது பற்றின்றி, சிவ பக்தி நிறைந்தவராகத் திகழ்ந்தார். அறநெறியில் வளர்ந்தார்.பருவம் எய்திய பிறகும், பக்திப்பெருக்கு குறையவில்லை. எப்போதும், ‘சிவாயநம’ எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்தவராகவே வலம் வந்தார். அதனால், பெற்றோர் கவலையடைந்தனர். திருமணம் செய்து வைத்தால், எல்லாம் சரியாகிவிடும் என சராசரி பெற்றோர் போல அவர்களும் கருதினர். அதற்கேற்ப, உறவுக்கார முறைப்பையனை மணமகனாக முடிவு செய்தனர்.

தகவல் அறிந்த அம்மணி அம்மாள் அதிர்ச்சியடைந்தார். இப்பிறவி, சிவத்தொண்டுக்காகவே எனும் உறுதியோடு இருந்தார். பெற்றோரின் வேண்டுகோளை ஏற்க மறுத்தார். ஆனாலும், பெற்றோர் தங்கள் நிலையில் பிடிவாதமாகவே இருந்தனர். அதனால், தனது வீட்டுக்கு அருகேயிருந்த ஒரு குளத்தில் குதித்து தன் இன்னுயிரை மாய்த்துக்கொள்ள அம்மணி அம்மாள் முயன்றார். ஆனால், பிறவியின் பெரும் பயன் நிறைவேறாமல், அவர் உயிர் போகுமா என்ன? அதிசயம் நிகழ்ந்தது. மூன்று தினங்கள் கழித்து, குளத்தில் இருந்து உயிருடன் எழுந்து வந்தார் அம்மணி அம்மாள். குளத்தின் மண்ணை எடுத்து அவர் பிறருக்குக் கொடுக்க, அது அவல்பொரியாக மாறியது! ஊரே வியந்தது. தங்கள் வழிபாட்டுக்குரிய சென்னியம்மனே மறுவுருவாக வந்திருக்கிறார் என்று நெஞ்சாரக் கருதி அம்மணி அம்மாளை வணங்கினர்.

அதன்பின், சிவத்தொண்டில் தீவிரமாக ஈடுபட்டார் அம்மணி அம்மாள். சென்னசமுத்திரம் அருகே, மலையடிவாரத்தில் வன விலங்குகளின் தாகம் தீர்க்க குளம் அமைத்தார். தினமும் மலர்களைப் பறித்து, திருவண்ணாமலையில் குடியிருக்கும் அண்ணாமலையாருக்கு சூடக் கொடுத்தார். ஒருகட்டத்தில், சென்ன சமுத்திரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு வந்து இங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டார்.

பெண் சித்தராக வலம் வந்த அவருக்கு, அண்ணாமலையார் திருக்கோயிலின் வடக்கு கோபுரம் முழுமைபெறாமல் முடங்கியிருப்பது கவலையை அளித்தது. ஆனாலும், அவரிடம் பொருள் இல்லை. கையில் இருந்ததோ ஒரு சிறிய திருநீறு பெட்டி மட்டும்தான். எனவே, சிவபக்தர்களிடம் பொருள் சேகரித்து, கோபுரத் திருப்பணியை மேற்கொள்ள எண்ணினார்.எனவே, திருவண்ணாமலை பகுதியில் இருந்த ஒரு குறுநில மன்னனிடம் உதவி கேட்டுச் செல்ல, அவனிடமிருந்து அம்மையாருக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. அதோடு, மிகக் கொடுமையாக, மன்னனின் கடைநிலை காவலாளி ஒருவன், அம்மணி அம்மாள் வைத்திருந்த திருநீறு பெட்டியில் மேலும் கொஞ்சம் திருநீறைப் போட்டு, ‘இதை வைத்துக்கொண்டு கோபுரத்தைக் கட்டிமுடி’ என உதாசீனப்படுத்தி அனுப்பிவிட்டான்.

ஆனாலும், தன் உறுதியில் இருந்து தளரவேயில்லை அம்மணி அம்மாள். மனம் கசிந்து சிவபெருமானிடம் கண்ணீருடன் வேண்டினார். அன்று இரவு, அவரது கனவில் உதித்த இறைவன், ‘கோபுர திருப்பணியை நிறைவேற்றவே உன்னை அழைத்தேன், திருநீறே உனக்கு போதும்’ என்று வாக்கு அருளினார். அவ்வளவுதான், அடுத்தடுத்து அதிசயங்கள் நிகழத் தொடங்கின. அம்மையார் அளித்த திருநீறு, பலரது நோய்களைத் தீர்த்தது, மனக் கவலைகளை மாற்றியது, வறுமையை விலக்கியது. எனவே, மக்களிடையே அவரது புகழ் பரவியது. வடக்கு கோபுரத்தை நிர்மாணிக்க பலரும் பொருள் கொடுத்தனர். திருநீறையே ஊதியமெனக் கருதி, கோபுர கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டனர் பலர்.
ஒருசமயம், அம்மணி அம்மாள் ஒரு செல்வந்தரிடம் சென்று கோயில் கோபுரம் கட்ட பொருளுதவி கேட்டார். அவரோ, தன்னிடம் பொருளேதும் இல்லை என பொய் உரைத்தார், கைவிரித்தார். ஒரு நொடியும் தாமதிக்காத அம்மணி அம்மாள், செல்வந்தரின் சட்டைப் பை முதல் வீட்டின் இரும்புப் பெட்டி வரை, அவர் வைத்திருக்கும் பொருள், பணம் ஆகியவற்றை துல்லியமாகப் பட்டியலிட்டுச் சொன்னார்! செல்வந்தர் பேரதிர்ச்சிக்குள்ளானார். அதெப்படி அம்மையாரால் அத்தனை விவரமாகச் சொல்ல முடிந்தது?

உடனே, இவர் சாதாரண பெண் அல்ல, இறைவனின் சித்தம் நிறைவேற்ற வந்த சித்தர் என உணர்ந்தார். செல்வத்தை வாரி வழங்கினார். அவர்போல, பலரும் பொருளுதவி அளித்தனர். வடக்கு கோபுரம் 7ம் நிலை வரை படிப்படியாக உயர்ந்தது. ஆனாலும் முழுமையடைய மேலும் பொருள் தேவைப்பட்டது. எனவே, அம்மையார் மைசூர் மகாராஜாவைச் சென்று பார்த்தார். அவரது எளிய தோற்றத்தைக் கண்ட அரண்மனைக் காவலன் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை.தனது ‘லகிமா சக்தி’யைப் பயன்படுத்தி, அரண்மனைக்குள் சென்றார் அம்மணி அம்மாள். அனுமதியின்றி வந்த அம்மணி அம்மாளைக் கண்ட மைசூர் மகாராஜா, காவலனை அழைத்து, ‘எப்படி அனுமதித்தாய்?’ எனக் கடிந்து கொண்டார். ‘நான் அனுமதிக்கவில்லை. அரண்மனை வாயிலில் அம்மையார் அமர்ந்திருக்கிறார். சந்தேகம் இருந்தால் நேரில் வந்து பாருங்கள்’ என்றார் காவலன். அதேபோல அம்மையார் வாயிலில் அமர்ந்திருப்பதைப் பார்த்து செயலிழந்தார் மகாராஜா.

இச்சம்பவம் மூலம் சிவனின் அருள்பெற்ற பெண் சித்தர் என்பதை மீண்டும் ஒருமுறை உலகுக்கு உணர்த்தினார் அம்மணி அம்மாள். அவரை வழிபட்ட மகாராஜா, பட்டுச் ேசலையும், பட்டத்து யானை மீது பொன்னும் பொருளும் வாரி வழங்கி, திருவண்ணாமலைக்கு வழியனுப்பி வைத்தார். திருக்கோயில் வடக்கு கோபுரம் 11 நிலைகளுடன் 171 அடி உயரத்தைத் தொட்டது. கோபுரத்தின் மீது 13 கலசங்கள் நிறுவப்பட்டு, அம்மணி அம்மாள் திருக்கரத்தால் குடமுழுக்கும் நிறைவேறியது. இவரது திருப்பணியை மெச்சும் வகையில், இக்கோபுரம் இன்றைக்கும் ‘அம்மணி அம்மன் கோபுரம்’ என்றே அழைக்கப்படுகிறது. அம்மணி அம்மன் கோபுர நுழைவாயில் விசாலமாகவும், அலங்காரம் மிகுந்தும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிஷ்டான பகுதியை மிகவும் உயரத்தில் உறுதியாகக் கட்டியிருக்கிறார்கள். சுதைப் பகுதி, கூடு போன்ற அமைப்புடன் திடமாக உள்ளது.

சால பஞ்சரம், நடன மாதர்கள், அஷ்டதிக் பாலகர்கள், வீரபத்திரன், விநாயகர் ஆகியோரின் கற்சிற்பங்கள் கோபுரத்துக்கு அழகு சேர்க்கின்றன. 17ம் நூற்றாண்டிலேயே இத்தகைய பிரமாண்டமான கோபுரத்தை பெண் துறவியான அம்மணி அம்மாள் முன்னின்று உருவாக்கியிருப்பது வரலாற்றுச் சிறப்புக்குரியது.திருக்கோயில் வடக்கு கோபுர திருப்பணியை நிறைவேற்றியதன் மூலம், தனது பிறவியின் பெரும்பயனை அடைந்த அம்மணி அம்மாள், திருவண்ணாமலை ஈசான்ய பகுதியில் அஷ்ட லிங்கங்களில் ஒன்றான ஈசான்ய லிங்கம் சந்நதி எதிரில், தைப்பூச தினத்தன்று ஜீவசமாதி அடைந்தார். அம்மணி அம்மாள் பயன்படுத்திய திருநீறு பெட்டி, மோதிரம், ஐம்பொன் கலசம், ஆரத்தித் தட்டு, மைசூர் மகாராஜா அளித்த பட்டுச் சேலை ஆகியவை, அவர் பிறந்த சென்னசமுத்திரம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் இன்றைக்கும் வழிபடு பொருட்களாகப் போற்றப்படுகின்றன.

 

The post வடக்கு கோபுரத்தை கட்டிய அம்மணி அம்மாள் appeared first on Dinakaran.

Tags : Ammani Ammal ,Annamalai ,Gnana Tapodhana ,Vaav ,Ammani Amman ,Shiva ,
× RELATED அண்ணாமலையாருக்கு அரோகரா…