ஞானியர்கள் விரும்பும் பூமியாக எப்போதும் திருவண்ணாமலை இருந்திருக்கிறது. அதனாலேயே, ‘‘ஆண்டி பெருத்த மலை அண்ணாமலை’’ என்பார்கள். ஏனெனில், வாழ்வைக் குறித்த கேள்வியுள்ளோர் அனைவரையும் திருவண்ணாமலை ஈர்த்திருக்கிறது. குரு என்கிற வார்த்தையின் முழுப் பொருளையும் நீங்கள் அருணாசலத்தில் காணலாம். ஏனெனில், எத்தனை எத்தனை மகான்களின் திருவடி பதிந்த புண்ணிய பூமி இது. இந்தியாவிற்கு ஆன்மிக பூமி என்கிற பெயர் கிடைப்பதற்கு அடிப்படையாக இருந்த முக்கியமான தலங்களில் திருவண்ணாமலையும் ஒன்றாகும். அருணை மலையின் ஞானச் சாரலில் எண்ணற்ற மகான்கள் புராண காலத்திலிருந்து வசித்து வந்துள்ளனர். அடுக்கி வைக்கப்பட்ட அழகழகான அகல் விளக்குகள்போல ஞானியரின் வரிசையைக் காண்போம் வாருங்கள்.
கௌதம மகரிஷி
‘‘கௌதமர் போற்றும் கருணை மா மலையே
கடைக்கணித் தாள்வாய் அருணாசலா’’ என்று ரமண பகவான் தனது அட்சரமண மாலை என்கிற நூலில் குறிப்பிடுகின்றார். அதாவது, கௌதம மகரிஷியால் போற்றப்பட்ட பெருங் கருணை கொண்ட மாமலையானே, எனக்கு உன் அருளைத் தந்து ஆண்டருள் அருணாசலா என்கிறார். பகவான் ரமண மகரிஷிகள், ஆச்சரியமாக இங்கு கௌதமரைப்பற்றி குறிப்பிடுகிறார். ஏனென்று சற்று ஆராய்ந்தால், அங்கும் நமக்கு ஆச்சரியமான விஷயங்கள் கிடைக்கின்றன. கௌதமர் என்பவர் சப்த ரிஷிகளுள் ஒருவராவார். இவரே திருவண்ணாமலை தலத்தின் தல ரிஷியும் ஆவார். பிரமாண்ட புராணத்திலுள்ள அருணாசல மகாத்மியத்தில் கௌதமரே இந்த தலத்தின் ரிஷியாக சொல்லப்படு கின்றது. காஞ்சிபுரத்திலிருந்து அருணாசல கிரி வலத்தை மேற்கொண்டு அருணாசலத்தோடு ஐக்கியமாவதற்காக அம்பாள் வந்ததையும், அம்பாளை கௌதம மகரிஷி வரவேற்று கிரிவலம் வந்ததையும் பிரமாண்ட புராணமே விவரிக்கின்றது. கௌதமர் திருவண்ணாமலை க்ஷேத்ரத்தின் தல ரிஷி மட்டுமல்லர், பகவான் ரமணரின் அவதாரத் தலமான திருச்சுழிக்கும் அவரே தல மகரிஷியாவார். இதிலிருந்து பண்டைய காலந்தொட்டே இந்த இரு தலங்களுக்கிடையே தெய்வீகத் தொடர்பு இருந்து வந்திருப்பது புலப்படும். எனவே, பகவான், ‘‘வந்தே குரு பரம்பராம்…’’ என்கிற சொல்லுக்கேற்ப அருணாசலத்திலும் ஒரு குரு பரம்பரையைக் காட்டுகின்றார். இன்று திருவண்ணாமலையின் அடிவாரத்தில் உள்ள பச்சையம்மன் கோயில்தான் ஆதியில் கௌதம மகரிஷியின் ஆசிரமமாக இருந்தது. அருணாசல மகாத்மியத்தில் மிக விரிவாக அம்பாளும் கௌதமரும் சந்திக்கும் விஷயம் விளக்கப்படுகின்றது. ஏனெனில், பகவான் கௌதமரும் பார்வதியும் அமைத்துக் கொடுத்த அந்த ராஜ பாதையில் தாமும் நடப்பதாகவும், நீங்களும் நடக்க வேண்டுமென்றும் இந்தப் பாடலில் ரமண பகவான் கூறுகிறார்.
இடைக்காட்டுச் சித்தர்
காலங்களைக் கடந்து நிற்கும் 18 சித்தர்களில் முதலிடம் பெற்றவர் இடைக்காட்டுச் சித்தர். அண்ணாமலை அருள் வேண்டி, திருவண்ணாமலை நாடி வந்தவர். எனவே, இவருக்கு திருவண்ணாமலைச் சித்தர் எனும் பெயரும் உண்டு. போளூர் அடுத்த இடையன்திட்டு எனும் குக்கிராமத்தில் பிறந்தவர். கிரிவல மலையின் தெற்கே, அல்லிச் சுனை உள்ளது. அதனருகே இடைக்காடர் தவமிருந்தார். மலை அடிவாரத்தில் இடைக்காடர் சந்நதியும் உண்டு.
ஈசான்ய ஞானதேசிகர்
புலியுடன் விளையாடும் புனிதர் எனும் பெயர் இவருக்கு உண்டு. வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அண்ணாமலையின் அருள்நாடி அக்னி நகரில் தவமிருந்தவர். வேட்டவலம் அடுத்த பாகத்துமலையிலும், திருவண்ணாமலை ஈசான்ய குளத்தின் தென்கரையிலும் தவமிருந்தார். அப்போது, அவருக்கு புலிகள் காவல் புரிந்தன. ஈசான்ய மயானம் அருகே இன்றளவும் ஈசான்ய தேசிகர் மடாலயம் உள்ளது. 1829 மார்கழியில் முன் குறித்தபடி ஜீவசமாதி அடைந்தார்.
குரு நமச்சிவாயர்
அண்ணாமலையின் அருள்பெற்று, எண்ணற்ற சித்துக்களை நிகழ்த்தியவர். கந்தாஸ்ரமம் அருகேஉள்ள குகையிலும், மலை உச்சியில் உள்ள வழுக்குப் பாறையிலும் தவமிருந்தவர். மலையில் வாழும் மிருகங்களும் பட்சிகளும் இவருக்கு காவலாகவும், ஏவலர்களாகவும் இருந்தன. குகை நமச்சிவாயரின் சீடர். குருமீது கொண்ட அதீத பக்தியால், குரு நமச்சிவாயம் என பெயர் பெற்றவர்.
குகை நமச்சிவாயர்
பதினான்காம் நூற்றாண்டில் சைலத்தில் தோன்றியவர் குகை நமச்சிவாயர். அவரது குரு சிவானந்த தேசிகர். அண்ணாமலையாரே கனவில் தோன்றி திருவண்ணாமலை வா என அழைத்த மகான். அஷ்டலிங்க பூஜை செய்தவர். சிவயோக சமாதி நிலையில் தவம் புரிந்தவர். அக்னி மலையடிவார குகையில் தவமிருந்ததால், குகை நமச்சிவாயர் எனவும் அழைக்கப்பட்டார். திருவருணை தனி வெண்பா என்று பாடியவர். இவர் கைப்பட எழுதிய ஓலைச்சுவடிகள் இன்றளவும் பாதுகாக்கப்படுகிறது. கார்த்திகை தீப பிரம்மோற்சவத்துக்கு முதல் நாள் ஜீவசமாதி அடைந்தார்.
அருணகிரி நாதர்
முக்தி நகரத்து மண்ணின் மைந்தன். திருப்புகழ் அருளிய முருகப் பித்தன். 13ம் நூற்றாண்டில் தோன்றியவர். அவரது தாய் முத்தம்மை வழிபட்ட விநாயகர் கோயில், தற்போது முத்தம்மை விநாயகர் கோயில் என்றே இன்றளவும் அழைக்கப்படுகிறது. முருக தரிசனம் வேண்டி அண்ணாமலையார் கோயில் கோபுரத்தில் இருந்து விழுந்து உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றபோது, இறைவனால் தடுத்தாட் கொள்ளப்பட்டவர். முத்து என பாடு என முருகன் அருள்தர, ‘முத்தைத்தரு’ என பாமாலை பொழிந்தவர்.
ரமணமகரிஷி
உலகமே உற்றுநோக்கும் உன்னத மகரிஷி. 1879ம் வருடம், டிசம்பர் 30ம் தேதியன்று மதுரைக்கு அருகே யுள்ள திருச்சுழியில் அவதரித்தவர். தந்தையார் பெயர் சுந்தரமய்யர், தாயார் அழகம்மை. வேங்கடராமன் என்பதே பெற்றோர் இட்ட பெயராகும். பிறகு பதினாறு வயதாக இருக்கும்போது மதுரையில் ஞானானுபவம் பெற்று பிறகு திருவண்ணாமலையை அடைந்தார். அண்ணாமலையார் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள பாதாள லிங்கத்தில் தவமிருந்தார். பின்னர், சேஷாத்ரி சுவாமிகள், ‘‘இவர் பெரிய ஞான புருஷர்’’ ( என்று உலகிற்கு அடையாளம் காட்டினார். காவ்ய கண்ட முனிவர் என்பவர் இவரை ரமண மகரிஷி என்று அழைத்தார். அந்தப் பெயரே நிலைத்தும் விட்டது. இன்றளவும் உலகின் மகத்தான ஞான குருக்களில் ஒருவராக விளங்குகிறார். பகவான் ரமணரின் அவதார நோக்கத்தை உற்று நோக்க நமக்கு கிடைப்பது ஒரேயொரு பதில்தான். அதாவது பகவான் தமது வாழ்வு முழுவதும் ஒரேயொரு உபதேசத்தைக் கூறிக் கொண்டேயிருந்தார். அதுதான் ‘நான் யார்?’ எனும் ஆத்ம விசாரம். அதாவது தன்னை அறிவது. ஏன் நான் யார்? என்பதை அறிய வேண்டும் என்கிற கேள்விக்கான பதிலைத்தான் விதம்விதமாக பல பாடல்களிலும், உபதேச நூல்கள் மூலமாகவும் உணர்த்தியபடி இருந்தார். இவை எல்லாவற்றிற்கும் மேலாக மௌன உபதேசத்தின் மூலமாக ஆலமரத்தின் கீழ் விளங்கும் தட்சிணாமூர்த்தமாக அமர்ந்தும் பிரம்மத்தை போதித்தார். மலை மீது ரமணர் தவமிருந்த இடம் விருபாட்சி குகை. அங்குதான் அட்சரமணமாலை உதயமானது. இவரது அருள்மொழிகள் 23 அயல்நாட்டு மொழிகளில் நுல்களாக உள்ளன.
சேஷாத்ரி சுவாமிகள்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த வழூர் அகரம் என்கிற ஊரில், வரதராஜன் – மரகதம்பாள் தம்பதியினருக்கு மகனாக 1870-ம் வருடம், ஜனவரி 22-ம் தேதி பிறந்தார். பின்னர், காஞ்சிபுரத்தில் வளர்ந்தவர். தாய் தந்தையின் மறைவுக்குப் பிறகு, திருவண்ணா மலையை அடைந்தார். இவரை ‘‘தங்கக் கை சேஷாத்ரி’’ என்று அழைப்பார்கள். ஏனெனில், இவர் பித்தர்போல நடந்து கொள்வார். அப்போது கடைகளுக்குள் நுழைந்து பொருட்களை வாரி வீசிச் செல்வார். அன்றிலிருந்து அங்கு வியாபாரம் செழிக்கும். இதுபோன்று நிறைய லீலைகளை இவர் நிகழ்த்தியுள்ளார். அருணாசலேஸ்வரர் கோயிலில் உள்ள பாதாள லிங்கத்தில் பகவான் ரமண மகரிஷி தவமிருந்தபோது அவரைக் கண்டுபிடித்தார். ஆஹா… பெரிய ஞானப் பொக்கிஷமாயிற்றே இவர் என்று உலகிற்கு அடையாளம் காட்டினார். ரமணரும், சேஷாத்ரி சுவாமிகளும் அண்ணன் தம்பிபோல இருந்தார்கள் என்று சொல்வார்கள். அதனாலேயே ரமணருக்கு ஆரம்பத்தில் சின்ன சேஷாத்ரி என்கிற பெயரும் இருந்ததாம். இன்றும் இவரது ஜீவ சமாதி ரமணாஸ்ரமத்திற்கு அடுத்ததாக அமைந்துள்ளது.
இசக்கி சாமியார்
அருணாசல கிரிவலத்தை 1008 முறை அங்கப் பிரதட்சணமாகவே வந்தவர், இசக்கி சாமியார். நெல்லை மாவட்டம், வைகுண்டம் அடுத்த விட்டலாபுரம் எனும் சிற்றூரில் தோன்றியவர். 1930ம் ஆண்டு திருவண்ணாமலைக்கு தீபம் தரிசிக்க வந்தார். அப்போது, இறைவனால் ஆட்கொள்ளப்பட்டார். இல்லறத்தில் இருந்து துறவறம் பூண்டவர். இவர் வழங்கும் திருநீறு பிரசாதம் பிரசித்தி பெற்றது. பஞ்சமுகசாமி என இவரை பக்தர்கள் அழைத்தனர். இவரது மகா சமாதி, பஞ்சமுக தரிசனம் செய்யும் இடத்தில் அமைந்துள்ளது.
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார் என்பதைவிட, விசிறி சாமியார் என்றால் அனைவருக்கும் தெரியும். ஏனெனில், எப்போதும் கையில் விசிறியும் தேங்காய் சிரட்டையும் வைத்துக் கொண்டிருப்பார். வாரணாசிக்கு அருகில் உள்ள நர்தாரா கிராமத்தில் டிசம்பர் 1, 1918-ல் பிறந்தார். தந்தையார் பெயர் ராம்தத் குன்வர். தாயார் பெயர் குஸும்தேவி. இளம் வயதிலேயே ஞான வேட்கை கொண்டு பகவான் ரமண மகரிஷிகளை தரிசித்தார். பின்னர், புதுச்சேரியில் உள்ள அரவிந்தரையும் தரிசித்தார். இறுதியாக கேரளாவிலுள்ள கஞ்சன்காடு எனும் ஊரிலுள்ள பப்பா ராமதாஸை தரிசித்து அவரிடம் ‘‘ஓம் ராம் ஜெயராம் ஜெயஜெய ராம்’’ என்கிற உபதேசத்தைப் பெற்று ஞானம் பெற்றார். பின்னர், 1959ம் வருடத்தில் திருவண்ணாமலையைச் சுற்றியுள்ள ஊர்களில் தன்னை ஒரு பிச்சைக்காரன் என்று அழைத்துக்கொண்டு உள்ளுக்குள் ஞான புருஷராக சுற்றி வந்தார். மெல்ல மெல்ல இவரின் மகத்துவம் தெரியத் தொடங்கியது. 1970க்குப் பிறகு நிரந்தரமாக திருவண்ணாமலையிலேயே வாசம் செய்தார். 20.2.2001 அதிகாலை முக்தியடைந்தார். இவர் பல காலம் தங்கியிருந்த இல்லம், தேரடி வீதியில் பெரிய தேர் நிலைக்கு பின்புறமுள்ள சந்நதி தெருவில் அமைந்துள்ளது. ரமணாஸ்ரமத்திற்கு அருகேயே சற்று தொலைவே யோகி ராம்சுரத்குமார் அவர்களின் ஆஸ்ரமம் அமைந்துள்ளது. உலகெங்கும் இவருக்கு பக்தர்கள் நிறைந்துள்ளனர்.
அம்மணி அம்மாள்
அண்ணாமலையார் கோயிலின் நவ கோபுரங்களில் ஒன்றான வடக்கு கோபுரத் திருப்பணிக்கு சொந்தக்காரர். அதனால், அந்த கோபுரத்துக்கு அம்மணி அம்மன் கோபுரம் என்றே பெயர் நிலைத்தது. திருப்பணியில் பங்கேற்றவர்களுக்கு விபூதியை ஊதியமாகக் கொடுத்தார். அதுவே பணமாக மாறியது. திருவண்ணாமலை அருகேயுள்ள சென்னசமுத்திரத்தில் 1753ம் ஆண்டு பிறந்தார். 1785ம் ஆண்டு ஈசான்ய குளக் கரையில் ஜீவசமாதியானார்.
தெய்வசிகாமணி தேசிகர்
சைவ நெறி பரப்புவதற்காக திருவண்ணாமலை ஆதீனத்தை தோற்றுவித்தவர். 1310 முதல் 1680ம் ஆண்டு வரை திருவண்ணாமலை ஆதீனம் திருவண்ணாமலையில்தான் இருந்தது. 16 ஆதீனகர்த்தர்கள் இங்கிருந்துதான் சிவத்தொண்டு செய்தனர். அதன்பிறகு, பிரான்மலைக்கும், குன்றக்குடிக்கும் மாறியது. ஆதி குரு முதல்வரான தெய்வசிகாமணி தேசிகர் 1250ம் ஆண்டு தோன்றினார். 1325ம் ஆண்டு ஜீவ சமாதி அடைந்தார். இவரது ஜீவசமாதி இன்றளவும் திருவன்ணாமலையில் வழிபாட்டு ஸ்தலமாக உள்ளது.
விருபாட்சி முனிவர்
திருவண்ணாமலை மலைமீது அமைந்துள்ள விருபாட்சி குகை என்பது இவர் வாழ்ந்த குகையே ஆகும். ஒருமுறை சீடர்களை நோக்கி நாளை நீங்கள் இங்கு வந்து பாருங்கள் என்ற விருபாட்சி முனிவர் மறுநாள் அப்படியே விபூதியாக மாறியிருந்தார். இன்றும் விருபாட்சி குகையில் விபூதிதான் இருக்கும். அங்கு தீபம் எரியும். இந்தக் குகையில்தான் ரமண மகரிஷி கிட்டத்தட்ட பதினாறு வருடங்கள் தங்கியிருந்தார். நிறைய பக்தர்கள் அவரை இங்கு தரிசித்திருக்கின்றனர். பிறகுதான் இப்போது இருக்கும் ரமணாஸ்ரமத்திற்கு ரமணர் வந்தார். அதுவரை விருபாட்சி குகை, கந்தாஸ்ரமம் என்று மலைமீதுதான் பெரும்பாலும் பகவான் ரமணர் இருந்தார். விபூதி லிங்க தரிசனத்தை இன்றும் விருபாட்சி குகையில் தரிசிக்கலாம்.
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமி
தீவிரமான முருகபக்தர். ஆறெழுத்து அலங்காரம் எனும் நூலை எழுதியவர். அண்ணாமலையார் கோயிலில் அமைந்துள்ள கம்பத்திளையனார் சந்நதியே நற்கதி என எந்நாளும் வணங்கியவர். முக்தி தரும் திருநகரில், முருகனின் பெருமையைப் பாடி முக்தி அடைந்தவர். இவர் தியானித்த இடம் மலைமீது கந்தாஸ்ரமம் அருகே அமைந்துள்ளது.
கண்ணாடி சாமியார்
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர். அண்ணாமலை அருள்நாடி அருணையில் தவமிருந்தார். சித்துக்களில் வல்லவர். கண்ணாடி போன்ற தோற்றமுடைய பஸ்பங்களைக் கொடுத்து எல்லாவித நோய்களையும் தீர்த்தவர். அதனால், கண்ணாடி சாமியார் என்று பக்தர்களால் அழைக்கப்பட்டார். இவரது ஜீவசமாதியை சேஷாத்ரி ஆஸ்ரமத்தில் நுழைந்ததும் தரிசிக்கலாம்.
சடைச்சி அம்மாள்
மகான் ரமணர் காலத்தில் வாழ்ந்தவர். பெண் துறவி. மலைக் குகைகளில் கடும் தவமிருந்தவர். அருள்தரும் அண்ணாமலையே மெய் என்பதை வலியுறுத்தியவர். தன் உயரத்துக்கு நிகரான, நீண்ட சடையுடன் காட்சி யளித்தவர். எனவே, சடைச்சி அம்மாள் என்றே இவரை அழைத்தனர். இவரது ஜீவசமாதி சேஷாத்ரி ஆஸ்ரமத்தின் பின்புறம் அமைந்திருக்கிறது.
சடைசாமிகள்
ரமணர் காலத்தில் வாழ்ந்த மகான். கேரள மாநிலத்தில் பிறந்து, திருவண்ணாமலையில் முக்தி பெற்றவர். மலையில் முலைப்பால் தீர்த்தம் அருகே அடிமுடிசாமி எனப்படும் அம்மையப்பன் கோயில் குகையில் தவமிருந்தார். தலைகீழாகத் தொங்கியபடி மெய்வருத்தி தவமிருந்தவர். சாஸ்திரங்களில் புலமை பெற்றவர். இவரது ஜீவசமாதி, சேஷாத்ரி சுவாமி களின் ஆஸ்ரமத்திற்குள் அமைந்துள்ளது.
சைவ எல்லப்ப நாவலர்
அருணாசலேஸ்வரனின் அருளால் தமிழ் வளம் பெற்றவர். அதன்மூலம் சைவநெறி பரப்பியவர். அருணாசல புராணத்தை தமிழில் அருளியவர். திருவண்ணாமலையில் சைவம் வளர்த்த மொழி
யாளர்களில் குறிப்பிடத்தக்க மகான் இவர்.
பாணி பத்தர்
குகை நமச்சிவாயர் காலத்தில் வாழ்ந்த மகான். இடைவிடாது மலைவலம் வருவதை தனது பிறவிப் பயன் எனக் கருதியவர். திருவண்ணாமலை குமர கோயில் அருகேயுள்ள மரத்தடியிலும், மலையிலும் தவமிருந்தார். குளத்தில் தண்ணீரை கைகளால் ஏந்தியதும் அது பாத்திரமாக மாறும். அன்றைய பொழுது முடிந்ததும் அதை வீசியெறிந்துவிடுவார்.
திண்ணை சுவாமிகள்
இவர் ரமணர் வாழ்ந்த காலத்தில் ரமணரை தரிசிக்க வந்தவர். இவரின் பூர்வாசிரமப் பெயர் ராமசாமி ஆகும். அந்தக் காலத்திலேயே ஆராய்ச்சிப் படிப்புகளையெல்லாம் படித்து பெரும் பொறுப்பில் இருந்தவர். தான் வகித்து வந்த வேலையில் இவருக்கு வரவேண்டிய பதவி உயர்வை அளிக்காமல் ஏமாற்றி விட்டனர். அதனால் மனமுடைந்த நிலையில் ரமண பகவானை தரிசித்து தன்னுடைய குறைகளைச் சொன்னபோது, ரமணர் இவரைப் பார்த்து ‘‘இரு’’ என்று ஒரு வார்த்தை கூறினார். அன்றிலிருந்து ஒரு திண்ணையே வாசமென இருந்தார். அந்த இரு என்கிற வார்த்தை இவரை என்னவோ செய்தது. கிட்டத்தட்ட ரமணர் வாழ்ந்த காலத்திலிருந்து, தான் சித்தி யடைந்த 2003ம் வருடம் வரை திருவண்ணாமலையிலேயே வசித்தார். அதிலும் ஆச்சரியமாக திண்ணையிலேயே வாழ்ந்தார். யோகி ராம் சுரத்குமார் ஆஸ்ரமத்திற்கு செல்லும் வழியிலேயே இவரது ஜீவ சமாதி அமைந்துள்ளது. இவரின் ஜீவசமாதிக்கு அடுத்ததாக சாது ஓம் சுவாமி களின் சமாதியும் அமைந்துள்ளது.
The post ஆண்டி பெருத்த அண்ணாமலை! appeared first on Dinakaran.