×

‘சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா’ நிகழ்ச்சி ஜனவரி 13ம் தேதி தொடக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் கலை பண்பாட்டு துறையின் சார்பில் நடைபெறும் ‘சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா 2025’-ம் ஆண்டுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. பிறகு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக கலை பண்பாட்டு துறையின் சார்பில் ‘சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா’ கடந்த ஆண்டு நடத்தியதைவிட இன்னும் சிறப்பாக நடத்த வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார்.

அதற்கான சிறந்த கலைஞர்களை 7 மண்டலங்களாக தேர்வு செய்து அந்த 7 மண்டலங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர்களை மாநில அளவில் அவர்களுக்கு பயிற்சியும் வழங்கி, புதிய முறைகளை புகுத்தி திருவிழாவை சிறப்பாக நடத்த இந்த ஒருங்கிணைப்பு கூட்டம் துவங்க இருக்கிறது. ஜனவரி 13ம் தேதி ‘சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா 2025’ நிகழ்ச்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைப்பார். அதற்கு பிறகு 18 இடங்களில், 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை மாலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை நிகழ்ச்சி நடத்தப்பட இருக்கிறது.

சென்னையில் பல்வேறு இடங்களிலும், சென்னையை ஒட்டியிருக்கின்ற மாவட்டங்கள் மட்டுமல்லாமல் மதுரை, கோவை, திருநெல்வேலி போன்ற பல்வேறு பகுதிகளிலும் நிகழ்ச்சியை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது. குறிப்பாக, எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, சைதாப்பேட்டையில் உள்ள மாந்தோப்பு அரசு பள்ளி வளாகம், நடேசன் நகர், தி.நகர் பகுதியிலும்,

அண்ணாநகரில் உள்ள டவர் பூங்கா, கோயம்பேட்டில் உள்ள ஜெய்நகர் பூங்கா, கே.கே.நகரில் உள்ள சிவன் பூங்கா, வளசரவாக்கத்தில் உள்ள லேமேக் பள்ளி வளாகம், பழனியப்பா நகர், கொளத்தூர் மாநகராட்சி திடல், ராபின்சன் விளையாட்டு திடல், முரசொலிமாறன் மேம்பால பூங்கா, பாரத சாரணர், சாரணியர், திருவல்லிக்கேணி, அம்பத்தூர் எஸ்.வி. விளையாட்டு திடல், நுங்கம்பாக்கம் மாநகராட்சி விளையாட்டு திடல், எழும்பூர் அரசு அருங்காட்சியகம் போன்ற இடங்களில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது.

அதுபோல மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்துவதற்காக முயற்சிகள் எடுத்துக் கொண்டிருக்கிறோம். பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் நடைபெறக்கூடிய இந்த நிகழ்ச்சியில் சுமார் 1500 கலைஞர்கள் பல்வேறு குழுக்களாக பிரிக்கப்பட்டு அதில் கலந்து கொள்கிறார்கள். அதற்கான பயிற்சியும், புதிய முறைகளை புகுத்துவதற்கான முயற்சியும் நடைபெற்று வருகிறது.

எனவே, கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில், நம்முடைய தமிழர் திருநாளை முன்னிட்டு ‘சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா 2025’ நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். இதில் சுற்றுலா துறை செயலாளர் சந்திரமோகன், கலை பண்பாட்டு துறை இயக்குநர் காந்தி, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற உறுப்பினர் செயலாளர் விஜயா தாயன்பன், ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலை துணைவேந்தர் சவுமியா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post ‘சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா’ நிகழ்ச்சி ஜனவரி 13ம் தேதி தொடக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Chennai ,Department of Art and Culture ,Tamil Development and ,Information Minister ,M.P. Saminathan ,Chennai Secretariat ,
× RELATED அரசியல் ரீதியாகவும் தனிப்பட்ட...