சென்னை: தென்மேற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகளில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதால், வட கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. இதையடுத்து செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களுக்கும் இன்று ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடையத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், அந்தமான் கடல் பகுதியில் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மேலும் வலுப்பெற்று தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி நிலை கொண்டுள்ளது. இதையடுத்து, தமிழகம், புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. மேலும் டெல்டா மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு முதல் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளது. இது வட தமிழக கடலோரப் பகுதிகளுக்கும் பரவி இன்று காலையில் அனேக இடங்களில் மழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியில் கன மழை முதல் மிக கனமழையும் பெய்யும். அதன் காரணமாக அந்த 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர், நாகப்பட்டினம், மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன மழை பெய்யும். அதன் தொடர்ச்சியாக வட தமிழக கடலோர தமிழகத்தில் அனேக இடங்களிலும், இதர தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய மழை 18ம் தேதியில் பெய்யும்.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், மாவட்டங்களிலும் கனமழை முதல் மிக கனமழையும் பெய்யும். ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யும். 19ம் தேதியில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. இதேநிலை 21ம் தேதி வரை நீடிக்கும். தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசும்.
The post வலுப்பெறுகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி செங்கை உள்பட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் appeared first on Dinakaran.