வளசரவாக்கம்: பனிப்பொழிவு மற்றும் வரத்து குறைவால் கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. கோயம்பேடு மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா மற்றும் ஓசூர் பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு வருகிறது. இந்நிலையில், கடும் பனிப்பொழிவு மற்றும் வரத்து குறைவால் மல்லி, ஜாதி மல்லி, முல்லை, கனகாம்பரம் ஆகிய பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, ஒரு கிலோ மல்லி ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.2,500க்கும், ஐஸ் மல்லி ரூ.2,000ல் இருந்து ரூ.2,400க்கும், ஜாதி மல்லி மற்றும் முல்லை ரூ.600ல் இருந்து ரூ.800க்கும், கனகாம்பரம் ரூ.500ல் இருந்து ரூ.800க்கும், அரளி பூ ரூ.400ல் இருந்து ரூ.500க்கும், சாமந்தி ரூ.140ல் இருந்து ரூ.170க்கும், சம்பங்கி ரூ.120ல் இருந்து ரூ.230க்கும், பன்னீர் ரோஸ் ரூ.120ல் இருந்து ரூ.200க்கும், சாக்லேட் ரோஸ் ரூ.250ல் இருந்து ரூ.280க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து கோயம்பேடு பூ மார்க்கெட் துணை தலைவர் முத்துராஜ் கூறுகையில், ‘‘பனி பெய்து வருவதால் அனைத்து பூக்களின் விலை உயர்ந்துள்ளது. மார்கழி பிறந்து உள்ளதாலும் ஐயப்பன் பூஜை நடைபெற்று வருவதாலும் பூக்களை வாங்குவதற்கு சென்னை, புறநகர் பகுதிகளில் இருந்து சில்லறை வியாபாரிகள், பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர். இந்த அடுத்த மாதம் வரை நீடிக்கும்’’ என்றார்.
The post பனிப்பொழிவு, வரத்து குறைவால் கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை கடும் உயர்வு appeared first on Dinakaran.