காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் போலீஸ் ஏற்படுத்தியுள்ள போக்குவரத்து மாற்றத்தால் வியாபாரம் பாதிக்கப்படுவதாகக்கூறி வியாபாரிகள் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டு, மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர். பட்டுக்கு பெயர்போன காஞ்சிபுரம் மாநகரில் வணிக நிறுவனங்கள், பட்டு ஜவுளி கடைகள் மிகுந்த பகுதியாக விளங்கக்கூடிய காஞ்சிபுரம் காந்தி சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், மாவட்ட போலீசார் அச்சாலையை மூன்று பிரிவுகளாக பிரித்து நடவடிக்கை மேற்கொண்டனர். இதனால், தங்கள் வியாபாரம் பெரிதும் பாதிப்பதாகக்கூறி வியாபாரிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுகுறித்து, ஏற்கனவே மாவட்ட போலீஸ் எஸ்பியை சந்தித்து மனு அளித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், காந்திரோடு அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில், காஞ்சிபுரம் காந்தி சாலையில் மனித சங்கிலி போராட்டம் நேற்று நடைபெற்றது.
இதில், வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள், வியாபாரிகள், பட்டு ஜவுளி கடை உரிமையாளர்கள், பட்டு ஜவுளி கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் என சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, போக்குவரத்து மாற்றத்தினை மறுசீரமைப்பு செய்து வியாபாரிகள் பாதிக்காத வண்ணம் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என கோஷங்களை எழுப்பி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையெடுத்து வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் தசரதசா, செயலாளர் எஸ்.கே.பி.கோபிநாத், பொருளாளர் சீனிவாசன், துணை மேயர் குமரகுருநாதன், சாலையோர வியாபாரிகள் சங்க நிர்வாகி மூர்த்தி உள்ளிட்ட வியாபாரிகள், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் மாவட்ட கலெக்டரை சந்தித்து, தங்களது கோரிக்கை மனு அளித்தனர்.
The post போக்குவரத்து மாற்றத்தால் வியாபாரம் பாதிப்பு : கலெக்டரிடம், வியாபாரிகள் மனு appeared first on Dinakaran.