காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு பாலாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி; குளித்து மகிழும் குடும்பங்கள்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு பாலாற்றில் பல மாதங்களுக்குப்பிறகு மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேநேரத்தில், பாலாற்றில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் குடும்பம், குடும்பமாக வந்து குளித்து செல்கின்றனர். ஆந்திர மாநிலத்தில் இருந்து வாணியம்பாடி அருகே தமிழக எல்லைக்குள் நுழையும் பாலாற்றில் கடந்த 2021ம் ஆண்டு முதல் தொடர்ந்து நீர்வரத்து இருந்தது. 2022ம் ஆண்டில் மே மாதத்திலும் பாலாற்றில் நீர் ஓடியதால் சுற்றுவட்டார பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்திருந்தனர். கடந்த 90 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பாலாற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழை மற்றும் வடகிழக்கு பருவமழையால் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பாலாற்றில் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

தொடர்ந்து 2023ம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் பாலாற்றில் நீர்வரத்து படிப்படியாக குறைந்து, ஏப்ரல் மாதத்தில் பாலாறு வறண்டது. இந்நிலையில், மே மாதத்தில் பாலாறு பாயும் பகுதிகளான வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் பாலாறு நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த கோடை மழையால் மே மாதம் சில நாட்கள் பாலாற்றில் நீரோட்டம் இருந்தது. இதனைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை போதுமான அளவு இல்லாததால் பாலாற்றில் நீர்வரத்து இல்லாமல் வறண்டது. இந்த, ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கி போதிய மழை இல்லையென்றாலும், பெஞ்சல் புயல் தாக்கம் மற்றும் அதைத்தொடர் சில தினங்களாக பெய்த மழையால் பாலாற்றில் நீரோட்டம் சற்று அதிகரித்துள்ளது. இதனால், சுற்றுவட்டார பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு பாலாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி; குளித்து மகிழும் குடும்பங்கள் appeared first on Dinakaran.

Related Stories: