திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே சாய்பாபா கோயிலில் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டிருந்த சிலை, பீடம் மற்றும் மரக்கதவுகள் ஆகியவற்றை திருடிச் சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் ஊராட்சி தலைவர் கோவர்த்தனம் புகார் செய்ததை தொடர்ந்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். திருவள்ளூர் அடுத்த சேலை ஊராட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்கள் அனைவரும் இணைந்து பொது இடத்தில் சாய்பாபா கோயிலை அமைத்து அங்கு சாய்பாபா சிலை மற்றும் பீடம் ஏற்படுத்தி குடமுழுக்கு விழாவும் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து பொதுமக்கள் வழிபாடும் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் திடீரென நேற்று 15ம் தேதி மாலையில் சாய்பாபா கோயில் அருகே வசித்து வரும் சரஸ்வதி என்பவர் உதவியுடன் அந்தக் கோயிலிலிருந்த சிலை, பீடம் மற்றும் மரக்கதவுகளை, நீலகண்டன் மனைவி விஜயா, கண்ணன் மனைவி ராணி, ராமன் மனைவி பாரதி, செல்வம் மனைவி சுமதி உள்ளிட்டோர் எடுத்துச் சென்று அவரது சொந்த இடத்தில் வைத்துள்ளனர். இதனைக் கண்ட அக்கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த ஊராட்சி மன்றத் தலைவர் கோவர்த்தனம், அந்தக் கோயிலுக்கு சென்று பார்த்த போது சாய்பாபா சிலை, பீடம் மற்றும் மரக்கதவுகளை இடித்து எடுத்துச் சென்றது தெரியவந்தது. மேலும் அருகில் உள்ள சரஸ்வதி என்பவரின் சொந்த இடத்தில் வைத்திருந்ததும் தெரியவந்தது.
எனவே பொதுமக்களுக்கு தெரியாமல் சாய்பாபா கோயிலை இடித்து சிலை உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்ற சரஸ்வதி உள்ளிட்ட பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சேலை ஊராட்சி மன்றத் தலைவர் கோவர்த்தனம் திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சாய்பாபா கோயிலை இடித்து சிலை உள்ளிட்டவைகளை திருடிச் சென்ற சம்பவம் கிராம மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post சாய்பாபா கோயிலில் சிலை, பீடம், கதவுகள் திருட்டு appeared first on Dinakaran.