அடிக்கொரு லிங்கம் அமைந்த அருள் நகரம் எனும் சிறப்பு பெற்றது மட்டுமல்ல; திருவண்ணாமலையின் மற்றொரு சிறப்பு, இங்கு அமைந்துள்ள எண்ணற்ற தீர்த்தங்களே ஆகும். திருக்கோயில்களை உருவாக்கிய நம் முன்னோர்கள், அதோடு இணைத்து குளங்களையும் (தீர்த்தங்கள்) உருவாக்கினார்கள். திருக்கோயில் ஆவணங்களின் அடிப்படையில், கிரிவலப்பாதை பகுதியில் மட்டும் 365 தீர்த்தங்கள் இருந்ததாக அறிய முடிகிறது. அந்த நாட்களில், கிரிவலம் வரும் சாதுக்கள், ஆன்மிகத்தில் பயணிக்கும் தீவிர சாதகர்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தீர்த்தத்தில் நீராடுவார்கள். அப்படி நீராடிவிட்டு அந்தந்த தீர்த்தக் குளத்தின் கரையில் அமர்ந்து மலையை நோக்கி தியானிப்பார்கள். மீண்டும் அடுத்தநாள் அடுத்த தீர்த்தத்தில் நீராடிவிட்டு மலையை நோக்கி தியானிப்பார்கள். இம்மாதிரி ஒரு வருடம் முழுவதும் கிரிவலம் வருவார்கள். இதை சமஸ்கிருதத்தில் சம்வஸ்தர (ஒரு வருடம்) பிரதட்சணம் என்று அந்நாட்களில் அழைத்தார்கள். அதாவது ஒரு முறை வலம் வருவதற்கு ஒரு வருடம் எடுத்துக்கொள்வார்கள். இது ஆன்மிகம் சார்ந்த உள் அனுபவத்தை அளிக்கும். புனித நீராடுதல் மட்டுமின்றி, நிலத்தடி நீர் சேமிப்பின் அவசியமும் அதற்கு முக்கிய காரணம். எனவே, கோயில்களும், குளங்களும் இரண்டற இணைந்திருக்கின்றன.
அண்ணாமலையார் கோயில் உட்பிராகாரம், வெளிப் பிராகாரம், கிரிவலப் பாதை என்று காணும் இடமெல்லாம் தீர்த்தங்கள் அமைந்திருக்கின்றன. இதுதவிர மலையைச் சுற்றியுள்ள கிரிவலப் பாதையிலுள்ள அஷ்ட லிங்கங்களின் அருகிலும் ஒவ்வொரு தீர்த்தம் அமைந்துள்ளது. அந்தந்த லிங்கங்களின் பெயரிலேயே தீர்த்தங்கள் அமைந்துள்ளன. திருக்கோயில் 5ம் பிராகாரத்தில் சிவகங்கை தீர்த்தமும், 4ம் பிராகாரத்தில் பிரம்ம தீர்த்தமும் அமைந்திருக்கிறது. இந்த தீர்த்தங்களில் சுவாமி தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். பாதுகாப்பு காரணங்களால், பக்தர்கள் நீராட அனுமதியில்லை. இரண்டு தீர்த்தங்களிலும் மழைக் காலங்களில் உபரி நீர் வெளியேற, நிலத்தடியில் வடிகால் வசதி அமைத்திருப்பது கட்டுமானக் கலையின் தனித்துவமாகும்.திருக்கோயில் ராஜகோபுரத்திற்கு எதிரே சக்கரை தீரத்தம் அமைந்துள்ளது. திருமால் வராக அவதாரம் எடுத்தபோது நீராடிய திருக்குளம் என்கின்றனர். அஷ்ட லிங்கங்களில் முதலாம் லிங்கமாக அருள்பாலிக்கும் இந்திரன் வழிபட்ட இந்திர தீர்த்தமும் சிறப்பு பெற்றது. இந்திரன் நீராடி இறைவனை வணங்கிய தீர்த்தமாகும்.
நகரின் மையப்பகுதியில் ஐயங் குளத் தெருவில் அமைந்துள்ள ஐயங்குளம் தீர்த்தம், பரப்பளவில் மிகப் பெரியது. ஆண்டுதோறும் தீபத்திருவிழா தெப்ப உற்சவம் இங்கு நடக்கிறது. கி.பி. 15ம் நூற்றாண்டில் அமைந்தது. குளத்தின் மையத்தில் நந்தி காட்சியளிப்பது பேரழகு. குளத்தின் கரையில் திருக்காட்சி மண்டபமும், அருணகிரிநாதர் திருக்கோயிலும் அமைந்திருக்கிறது. கிரிவலப்பாதையில் அமைந்திருக்கும் அக்னி தீர்த்தம், அக்னி பகவான் நீராடிய தீர்த்தமாகும். அதற்கடுத்து அமைந்திருப்பது சிங்கமுக தீர்த்தம். அஷ்ட லிங்க சந்நதிகளுடன் தொடர்புடைய தீர்த்தங்களில், எம தீர்த்தம், நிருதி தீர்த்தம், வருண தீர்த்தம், வாயு தீர்த்தம், குபேர தீர்த்தம், ஈசான்ய தீர்த்தம் ஆகியவை தற்போது பயன்பாட்டில் உள்ளன. தைப் பூசம் தீர்த்தவாரி ஈசான்ய குளத்தில் நடைபெறுவது வழக்கம்.உத்தராயண புண்ணிய கால பிரம்மோற்சவத்தின் நிறைவாக தீர்த்தவாரி நடைபெறும் தாமரைக் குளம் மிகவும் பிரசித்தி பெற்றது. திருவண்ணாமலை – தண்டராம்பட்டு சாலையில் இக்குளம் அமைந்திருக்கிறது.
மூர்த்தி தலம் தீர்த்தம் முறையாய்த் தொடங்கினார்க்கு ஓர்
வார்த்தை சொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே
– என்பது தாயுமானவ சுவாமிகள் வாக்காகும்.
இந்த இரண்டு வரிகளுக்குள் எவ்வளவு பெரிய கருத்து பாருங்கள். ஒருவருக்கு கடவுளைப்பற்றியோ அல்லது தத்துவங்கள் குறித்தோ எதுவுமே தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை. மெல்ல கோயில்களுக்கு சென்றுகொண்டிருந்தாலே போதும். அங்குள்ள இறையுருவச் சிலைகளையும், கோயில் தீர்த்தம் எனப்படும் திருக்குளத்திலுள்ள நீரை அருந்தியோ அல்லது தெளித்துக்கொண்டு வந்துவிட்டால் கூட போதுமானது. காலக்கிரமத்தில் சரியான பக்குவம் ஏற்பட்டு குரு கிடைப்பார் என்கிறார். அதிலும் ஓர் வார்த்தை சொல்ல சற்குருவும் வாய்க்கும் பராபரமே என்று உறுதி கூறுகின்றார். அப்பேர்ப்பட்ட புனிதத் தன்மை வாய்ந்ததுதான் நம்முடைய தல தீர்த்தங்கள். கோயிலின் தீர்த்தங்கள் எப்படி இப்பேர்ப்பட்ட தன்மையைப் பெறுகின்றன? இதற்குப்பின்னால் இருக்கும் விஷயங்கள் மிகவும் சூட்சுமமானவை ஆகும். ஒவ்வொரு கோயில் தீர்த்தத்திற்கும் ஒரு பெயர் இருக்கும். அது அந்தந்த கோயிலின் புராணத்திலேயே இருக்கும். ஒரு நீர் நிறைந்த குளமானது தீர்த்தம் எனும் புண்ணிய புஷ்கரணியாக மாறும் மாயம் எப்படி நடக்கின்றது? இதற்கு நம் சமய மரபில் சில விஷயங்கள் கூறப்படுகின்றன.ஞானம் பெற்ற ஞானியானவனின் கண்ணோட்டத்தில் சகலமும் பிரம்மமயம். அவன் எதைத் தொடுகின்றானோ அதுவும் தனிப் பெருஞ் சக்தியாக மாறிவிடும். அது கட்டையாக இருந்தாலும் சரி, கல்லாக இருந்தாலும் சரிதான். அது தனித்துவம் பெற்றுவிடும். அதுபோல ஏதோ ஒரு காலத்தில் ஒரு ஞானியானவர் ஒரு குளத்தில் இறங்கி நீராடினால் உடனே அந்த நீரானது தன்னுள் பெருஞ் சக்தியைச் சேகரித்து வைத்துக் கொள்கின்றது. இது நம் அறிவிற்கும், புலன்களுக்கும் கட்புலனாகாத விஷயமாகும். அந்தக்கணமே அந்த நீரானது தீர்த்தமென்று தனிப் பெருஞ் சக்தியோடு விளங்கத் தொடங்குகிறது. இனி அது வெறும் தீர்த்தம் மட்டுமல்ல; ஆத்ம தீர்த்தம் என்கிற உயர்நிலையை அடைகின்றது.
The post தீர்த்தங்கள் நிறைந்த திருநகரம் appeared first on Dinakaran.