கொல்கத்தா: உலக நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியர்கள் இன்னும் அதிகம் உழைக்க வேண்டியுள்ளது என இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் நடைபெற்ற இந்திய வர்த்தக சம்மேளனத்தின் நூற்றாண்டு தொடக்க விழாவில் இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி கலந்துகொண்டார். கொல்கத்தாவின் கலாச்சார செழுமையை எடுத்துக்காட்டிய நாராயண மூர்த்தி, ரவீந்திரநாத் தாகூர் மற்றும் அமர்த்தியா சென் போன்ற பிரபலங்களை மேற்கோள் காட்டி, கொல்கத்தாவை இந்தியாவில் மிகவும் பண்பட்ட இடம் என்று புகழ்ந்தார்.
4,000 ஆண்டுகால கலாச்சார பாரம்பரியத்தை நவீன முதலாளித்துவ நடைமுறைகளுடன் உலகிற்கு முன்மாதிரியாக அமைக்க இந்தியாவை ஊக்குவித்தார். ஏற்கனவே மக்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என இன்ஃபோசிஸ் நிறுவனர் பேசியது ஏற்கனவே சர்ச்சையான நிலையில், மீண்டும் அதற்கு ஆதரவாக பேசினார். அப்போது பேசிய அவர், தற்போது வரை 80 கோடி இந்தியர்கள் ரேஷன் கடைகளால் பயனடைகின்றனர். அப்படியென்றால் 80 கோடி மக்கள் வறுமையில் உள்ளனர். நாம் கடினமாக உழைக்காவிட்டால் வேறு யார் உழைப்பார்கள்?.
தொழில்முனைவில் அரசுக்கு எந்த பங்கும் இல்லை, தொழில்முனைவோர்தான் நாட்டில் வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறார்கள். அதன் மூலம் முதலீடுகளை பெருக்கி வரி செலுத்துகிறார்கள். முதலாளித்துவம் கொள்கையை பின்பற்றும் நாடுகளில் சாலைகள், உட்கட்டமைப்புகள் சிறப்பாக இருக்கும், இந்தியா போன்ற ஏழை நாட்டில் முதலாளித்துவம் கொள்கைக்கான அடித்தளம் இல்லை. நாம் தொழில்முனைவில் முன்னேற வேண்டும் என்றால் இக்கொள்கையை தழுவ வேண்டும். மக்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என பேசியுள்ளார்.
The post உலக நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியர்கள் இன்னும் அதிகம் உழைக்க வேண்டியுள்ளது: இன்ஃபோசிஸ் நிறுவனர் பேச்சு appeared first on Dinakaran.