×

பெரு வெள்ளம், வயநாடு நிலச்சரிவு மீட்பு பணிகளில் இந்திய விமானப்படை விமானங்கள் : ரூ.113 கோடி பணம் செலுத்த கேரளாவுக்கு ஒன்றிய அரசு உத்தரவு!!

டெல்லி : வயநாடு நிலச்சரிவின் போது, இந்திய விமானப்படை நடத்திய மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு பணம் செலுத்த கோரி ஒன்றிய அரசு கடிதம் எழுதி உள்ளதாக கேரள அரசு குற்றம் சாட்டியுள்ளது. திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கேரள நிதியமைச்சர் கே.என்.பாலகோபால், வயநாடு நிலச்சரிவின் போது இந்திய விமானப்படையை மீட்பு பணிக்கு பயன்படுத்தியதற்காக பணத்தை வழங்குமாறு ஒன்றிய அரசு கடிதம் அனுப்பி உள்ளதாக கூறினார். கடந்த நவம்பர் 2ம் தேதி கேரள தலைமைச் செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் மீட்பு நடவடிக்கைகளுக்கு விமானங்களை பயன்படுத்தியதற்கான தொகையினை செலுத்துமாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018ல் வெள்ள மீட்பு நடவடிக்கைக்காக ரூ.100 கோடியும் வயநாடு நிலச்சரிவின் போது விமானப்படை விமானங்களை பயன்படுத்தியதற்கு ரூ. 13 கோடியும் உடனடியாக செலுத்துமாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கேரள அமைச்சர் கூறியுள்ளார். ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை அடுத்தடுத்த பேரழிவுகளால் கேரளாவுக்கு ஏற்பட்டுள்ள காயங்களில் உப்பு தடவியது போல் வேதனை தருவதாக அவர் விமர்சனம் செய்துள்ளார். ஆளும் பாஜக அரசு, பேரிடர் நிவாரணத்திற்காக மாநிலத்திற்கு உறுதி அளித்த நிதியை கூட வழங்கவில்லை என கூறிய கேரள அமைச்சர், இது கேரள மக்களை கேலி செய்வது போல் உள்ளது என்றும் குற்றம் சாட்டினார். இந்த விவகாரத்தில் கேரளாவைச் சேர்ந்த ஒன்றிய இணை அமைச்சர் சுரேஷ் கோபி, வி முரளிதரன் உள்ளிட்ட பாஜக தலைவர்களின் நிலைப்பாடு என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

The post பெரு வெள்ளம், வயநாடு நிலச்சரிவு மீட்பு பணிகளில் இந்திய விமானப்படை விமானங்கள் : ரூ.113 கோடி பணம் செலுத்த கேரளாவுக்கு ஒன்றிய அரசு உத்தரவு!! appeared first on Dinakaran.

Tags : Indian Air Force ,EU Government ,Kerala ,Delhi ,Wayanadu landslide ,Kerala government ,Thiruvananthapuram ,Finance Minister ,K. N. Balagopal ,Wayanadu ,
× RELATED ஒன்றிய அரசுக்கு கேரள நிதி அமைச்சர் கண்டனம்