×

தாவரவியல் பூங்கா புதுப்பிக்கும் பணி தீவிரம்: ரூ1.16 கோடி செலவில் புதிய பெட்டிகளுடன் பேட்டரிக்கு மாறிய சிறுவர் ரயில்: ஜனவரி முதல் வாரத்தில் முடிக்க திட்டம்

புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் பேட்டரியில் இயங்கக்கூடிய புதிய சிறுவர் ரயில் நிறுவும் பணி நடந்து வருகிறது. இதற்காக புதிய வண்ணமயமான பெட்டிகள் வந்திறங்கியுள்ளது. பிரபல ஆங்கிலப்படமான லைப் ஆப் பை திரைப்படத்தில் இடம்பெற்ற புதுச்சேரியின் 197 ஆண்டுகள் பழமையான தாவரவியல் பூங்கா, சுமார் ₹10 கோடி செலவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இது பார்வையாளர்களை கவரும் வகையில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வசீகரிக்கும் தோற்றத்துடன் மாற்றமடைந்து வருகிறது. சிறுவர்களை மகிழ்வித்து வந்த 40 ஆண்டுகள் பழமையான ஜாய் ரயிலை ₹1.16 கோடி செலவில் நவீன பேட்டரியில் இயங்கும் ரயிலாக மாற்றப்பட்டுள்ளது. அதற்கேற்ப புதிய ரயில் பாதையும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த பழைய ரயில் ஒரு புராதான பொருளாகப் பாதுகாக்கப்பட்டு மக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட இருக்கிறது.

புதிய ரயிலுக்கு ஏற்ப மேம்படுத்தப்பட்ட புதிய ஷெட் ஒன்றும் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக ரயிலின் பெட்டிகள் ஏற்கனவே வந்துவிட்டன, விரைவில் இன்ஜின் இணைக்கப்பட இருக்கிறது. எனவே பேட்டரியில் இயங்கக்கூடிய ரயில் சவாரிகள் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சிறுவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தும். மே 1826ம் ஆண்டு பிரெஞ்சு ஆட்சியின் போது நிறுவப்பட்டது, 12.13 ஹெக்டேர் தோட்டம், முதலில் ஜார்டின் டு ரோய் (ராஜா தோட்டம்) என்றே அழைக்கப்பட்டது. இது குடும்பங்கள், பள்ளி குழந்தைகள் மற்றும் மாணவர்களை ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கிறது. தாவரவியல் பூங்கா மறுசீரமைப்பு திட்டத்தில் நுழைவு வளைவை மீட்டெடுப்பது, அழகான லில்லி குளத்துக்கு புத்துயிர் அளிப்பது மற்றும் இசை நீரூற்றை மீட்டெடுப்பது, செயலிழந்த மற்ற ஐந்து நீரூற்றுகளை சரிசெய்து மீண்டும் இயக்குதல் ஆகிய பணிகளும் அடங்கும்.

ஆம்பி தியேட்டர், பசுமை இல்ல குடில், நடந்து செல்லும் பாதைகள், ஜாக்கிங் டிராக்குகள் மற்றும் புதிய உபகரணங்களுடன் குழந்தைகள் விளையாடும் பகுதி, மேம்படுத்தப்பட்ட அடையாள பலகைகள், மர இனங்கள் பற்றிய அறிவிப்பு பலகைகள் மற்றும் செல்பி பாயிண்ட் ஆகியவையும் புதுப்பித்தலின் ஒரு பகுதியாக இருக்கிறது. ஜப்பானிய தோட்டத்தை புதுப்பித்தல், புல்வெளிகள் மற்றும் புதர்களை நடவு செய்வதில் விவசாயத்துறை கவனம் செலுத்தி வருகிறது. ஹட்கோ நிதியுதவியுடன் கட்டப்பட்ட தற்போதுள்ள உணவகம், புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சீகல்ஸ் மூலம் மீண்டும் திறக்கப்பட்டு நிர்வகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்களின் போக்குவரத்து வசதிக்கு நான்கு மின்சார வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. போக்குவரத்து மற்றும் தடையில்லா மின்சாரம் ₹35 லட்சம் செலவில் டீசல் ஜெனரேட்டர்கள் நிறுவப்பட்டுள்ளன.

பொதுமக்களின் வசதிக்காக தோட்டத்தை சுற்றியிருந்த ஏழு கழிவறைகளும் புதுப்பிக்கப்பட்டுள்ளன. புதுப்பிக்கப்பட்ட தாவரவியல் பூங்கா, புதுச்சேரியின் முக்கிய பொழுதுபோக்கு மற்றும் கல்வி மையமாக மாறும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும் 50 சதவீதக்கும் அதிகமான பணியிடங்கள் தாவரவியல் பூங்காவில் காலியாக உள்ளது. தற்போதுள்ள 190 பணியாளர்களால் தோட்டத்தை பராமரிப்பது கடினமான பணியாக இருக்கிறது. பணியிடங்கள் வழக்கமான அடிப்படையில் நிரப்பப்படும் வரை ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்களை ஈடுபடுத்த துறையானது முயற்சித்து வருகிறது. ஜனவரி முதல்வாரத்தில் அனைத்து பணிகளும் நிறைவடைந்து மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என எதிர்பார்க்கிறோம் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

The post தாவரவியல் பூங்கா புதுப்பிக்கும் பணி தீவிரம்: ரூ1.16 கோடி செலவில் புதிய பெட்டிகளுடன் பேட்டரிக்கு மாறிய சிறுவர் ரயில்: ஜனவரி முதல் வாரத்தில் முடிக்க திட்டம் appeared first on Dinakaran.

Tags : Botanical Garden ,Pondicherry Botanical Garden ,Botanical Garden of ,Pondicherry ,Dinakaran ,
× RELATED சுற்றுலா பயணிகளை கவரும் சூரியகாந்தி மலர்கள்