மாவட்டத்தில் 25 ஆண்டுக்கு பின் கேரள பயணிகளால் மீண்டும் ஊடுருவும் பிளாஸ்டிக் பைகள்: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?


ஊட்டி: நீலகிரி மாவட்டத்த்தில் ஊட்டிக்கு வரும் கேரள சுற்றுலா பயணிகள் 25 ஆண்டுக்கு முன்பே தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பைகளை கொண்டு வருவது அதிகரித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தின் சுற்றுசூழலை பாதுகாக்கும் நோக்கில் கடந்த 25 ஆண்டுக்கு முன்பே கேரி பேக் எனப்படும் ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் கேரி பைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த 2019ம் ஆண்டு முதல் பிளாஸ்டிக் கப்புகள், ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் டம்ளர்கள், பிளாஸ்டிக் கரண்டிகள், கத்திகள், முள் கரண்டிகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல், காகித கப்புகள், காகித டம்ளர்கள், பிளாஸ்டிக் தட்டுகள் உட்பட 19 வகையாக பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

இதுதவிர ஒரு லிட்டர் பிளாஸ்டிக் பாட்டிலை பயன்படுத்துபவர்கள் அவற்றை பயன்படுத்தி விட்டு பொது இடங்கள், வனங்களில் வீசி எறிகின்றனர். இதனால் சுற்றுசூழல் கடுமையாக பாதிக்கிறது. இதனை கருத்தில் கொண்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள், வணிக வளாகங்களில் 1 லிட்டர் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள், உணவு பொருட்களை பயன்படுத்த, விற்பனை செய்ய தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பிளாஸ்டிக் தடை குறித்து ஆய்வுகள் செய்யப்பட்டு அபராதங்கள் விதிக்கப்படுகின்றன. மாவட்டத்திற்குள் நுழைவும் அனைத்து வாகனங்களிலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளனவா என்பது குறித்து சோதனை சாவடிகளில் சோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ள வயநாடு, மலப்புரம், கோழிக்கோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கேரள சுற்றுலா பயணிகள் அதிகளவில் தனியார் ஆம்னி பஸ்கள் மூலம் ஊட்டிக்கு சுற்றுலா வருகின்றனர். இவர்கள் கூடலூர் வழியாக ஊட்டி வருகின்றனர். இவர்கள் வருகையின் போது ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில்களை பண்டல் பண்டல்களாக கொண்டு வருகின்றனர். இதுதவிர 25 ஆண்டுகளுக்கு முன்பே தடை விதிக்கப்பட்டு தற்போது நீலகிரியில் முற்றிலும் பயன்பாட்டில் இல்லாத பிளாஸ்டிக் கேரி பைகளையும் தங்களுடன் எடுத்து வருகின்றனர். பஸ்சில் பயணிக்கும் போது வாந்தி எடுக்கும் நபர்கள், பிளாஸ்டிக் கேரி பையில் எடுத்து அதனை வனத்திற்குள் வீசி விடுகின்றனர்.

குறிப்பாக சூட்டிங்மட்டம் பகுதியை பார்வையிட வரும் கேரள ஆம்னி பஸ்களை மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவு படி பகல்கோடுமந்து சூழல் மேம்பாட்டு குழுவினர் ஆய்வு செய்த போது பிளாஸ்டிக் பொருட்கள் கேரள சுற்றுலா பயணிகள் மூலம் நீலகிரிக்குள் வருவது தெரியவந்துள்ளது. எல்லையோர சோதனை சாவடிகளில் அண்டை மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வர கூடிய தனியார் ஆம்னி பஸ்களை முறையாக சோதனை செய்யாததால் தான், இவ்வாறு பிளாஸ்டிக் அதிகளவு நீலகிரிக்குள் ஊடுருவுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே எல்லைகளில் சோதனையை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தபபட்டுள்ளது.

The post மாவட்டத்தில் 25 ஆண்டுக்கு பின் கேரள பயணிகளால் மீண்டும் ஊடுருவும் பிளாஸ்டிக் பைகள்: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? appeared first on Dinakaran.

Related Stories: