ஸ்ரீரங்கத்திலிருந்து திருவானைக்காவல் கோயிலுக்கு சீர்வரிசை: மேலதாளங்கள் முழங்க ஊர்வலமாக சென்றது

திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கத்தில் இருந்து திருவானைக்காவல் கோயிலுக்கு திருப்பாவாடை நிகழ்ச்சிக்கு சீர்வரிசை மேலதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து சென்று வழங்கப்பட்டது. திருச்சி ஸ்ரீரங்கத்தில் இருந்து திருவானைக்கோவில் ஜம்புகேஷ்வரர், அகிலாண்டேஷ்வரி கோயிலுக்கும் இடையே கடந்த 150 வருடங்களுக்கு முன் மார்கழி மாத முதல்நாள் நடக்கும் திருப்பாவாடை நிகழ்ச்சிக்கு சீர் வரிசை பொருட்கள் வழங்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் காலப்போக்கில் அந்த வழக்கம் கைவிடப்பட்டது. தொன்றுதொட்டு வந்த இந்த பாரம்பரிய சீர் வழங்கும் வழக்கத்தை துவங்க இந்த இரு கோயில்கள் சார்பில் சீர் வரிசை வழங்கும் வழக்கம் மீண்டும் தொடங்கியுள்ளது. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் தொடங்கும் முந்தைய நாள் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இருந்து சீர்வரிசை பொருட்கள் திருவானைக்காவல் அகிலாண்டேஷ்வரி, ஜம்புகேஷ்வரர் கோயிலுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இதைத்தொடர்ந்து நேற்று டிச.15ம் தேதி நேற்று ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இருந்து திருவானைக்கோயில் அகிலாண்டேஷ்வரி, ஜம்புகேஷ்வரருக்கு வஸ்திரங்கள், பூக்கள், மாலைகள், அலங்கார பொருட்கள் மற்றும் நிவேதனப்பொருட்கள் உட்பட பல்வேறு மங்களபொருட்கள் அடங்கிய சீர்வரிசையை மண்டல இணை ஆணையர் கல்யாணி, ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் மாரியப்பன், கோயில் உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன், கோயில் மூத்த அர்ச்சகர் சுந்தர் பட்டர் மற்றும் கோவில் நிர்வாகிள் உட்பட ஏராளமானோர் மேல, தாளங்கள் முழங்க ஊர்வலமாக திருவானைக்காவல் அகிலாண்டேஷ்வரி, ஜம்புகேஷ்வரர் கோயிலுக்கு வழங்க கொண்டு வந்தனர்.

இதை திருவானைக்காவல் கோயில் கொடிமரம் முன் வைத்து திருவானைக்காவல் கோயில் உதவி ஆணையர் சுரேஷ், அத்யாயன பட்டர் வாசுதேவன் மற்றும் அர்ச்சகர்கள் பெற்றுக்கொண்டனர். ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து பெறப்பட்ட இந்த மங்களப்பொருட்கள் அம்பாள் மற்றும் சுவாமிக்கு இன்று மார்கழி 1ம் தேதி காலை நடக்கும் முதல் கால தீபாராதணை மற்றும் பூஜையில் சமர்ப்பிக்கப்படும். இது தங்கை அகிலாண்டேஷ்வரிக்கு, ஸ்ரீரங்கநாதர் வழங்கும் சீர் வரிசையாக கருதப்படுகிறது. திருச்சியின் மிக முக்கிய கோயில்களான இந்த இரு கோயில்களின் இடையே வழங்கப்படும் இந்த சீர்வரிசை நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

The post ஸ்ரீரங்கத்திலிருந்து திருவானைக்காவல் கோயிலுக்கு சீர்வரிசை: மேலதாளங்கள் முழங்க ஊர்வலமாக சென்றது appeared first on Dinakaran.

Related Stories: