முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறப்பான ஆட்சி அதிமுகவின் கண்துடைப்பு கண்டன கதைகளை மக்கள் துளியும் நம்ப போவதில்லை

* எடப்பாடியின் துரோகத்தையும் மறக்கப்போவது இல்லை – திமுக கடும் கண்டனம்

சென்னை: தமிழ்நாட்டு மக்களின் நலனே முக்கியம் என முதல்வரின் தலைமையிலே சிறப்பாக நடந்துவரும் திராவிட மாடல் ஆட்சி மீது அள்ளிவிடும் அதிமுகவின் கண்துடைப்பு கண்டன கதைகளைத் தமிழ்நாட்டு மக்கள் துளியும் நம்பப் போவதல்லை; எடப்பாடியின் துரோகத்தையும் மறக்கப்போவது இல்லை என்று திமுக கூறியுள்ளது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று வெளியிட்ட அறிக்கை:

நேற்று நடைபெற்ற அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலே நல்லாட்சி வழங்கிவரும் திராவிட மாடல் ஆட்சியின் மீது சில கண்டனத் தீர்மானங்களை நிறைவேற்றி அதன்மூலம் களங்கம் சுமத்திடலாம் எனக் கற்பனைக் கோட்டை கட்டியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்வரால் உடனடியாக நிவாரணம் அறிவிக்கப்பட்டு தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

அதோடு மழைக்காலத்திற்கு முன்பாகவே கடந்த 12.6.2024ல் முதல்வரின் உத்தரவின் பேரில் நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறைக்கு உட்பட்ட ஏரி, குளம், கண்மாய்களில் குடிமராமத்துப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு ஏரி, குளம், கண்மாய்கள் தூர்வாரப்பட்டு ஆழப்படுத்தியதன் விளைவாகத்தான் பெஞ்சல் புயல் பெருமழையின் போதும், அதன் பின் அடுத்தடுத்து அதி கனமழை பெய்த போதும் ஏரி, குளங்களில் நீர் தக்க வகையில் தேங்கி மழை நீர் வீணாவது தடுக்கப்பட்டுள்ளது.

டங்ஸ்டன் சுரங்கத்துக்கான அனுமதியைக் கொடுக்க காரணமே அடிமை அதிமுக ஆட்சிதான். இஸ்லாமிய சமூக மக்களை அவதூறாக பேசிய நீதிபதிக்கு ஆதரவாக செயல்பட்டு சிறுபான்மை மக்களுக்கு துரோகம் செய்துவரும் அடிமை அதிமுக, இன்று இஸ்லாமிய சிறைக்கைதிகள் விடுவிப்பு பற்றி பேசுவது வேடிக்கை. தற்போதும் கூட மறைமுகமாக மதவாத பாஜகவோடு கள்ள உறவில் கைகோத்து இருக்கும் பழனிசாமி, ஒன்றிய அரசின் மக்கள் விரோத செயலை கண்டித்து ஒரு வார்த்தை கூட உச்சரிக்கவில்லை; தீர்மானங்களில் கூட பாஜவுக்கு வலிக்காத வகையில் வலியுறுத்தல் தான்.

ஆனால் சிறப்பாகச் செயல்பட்டுவரும் தமிழ்நாடு அரசுக்குக் கண்டனமாம். இப்படி கபட வேடம் பூண்டிருக்கும் பழனிசாமி என்றுமே சிறுபான்மை மக்களின் அரணாக நிற்கும் திராவிட மாடல் ஆட்சியை குறை கூறினால் மக்கள் நம்பிவிடுவார்களா என்ன? நிர்வாகத்திறனற்ற பத்தாண்டுகால அதிமுக ஆட்சியில் நசிவுற்ற அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்கள் திராவிட மாடல் விடியல் ஆட்சியில் மேம்பட்டிருக்கின்றன.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியதன் மூலமும், முதல்வரே துபாய், சிங்கப்பூர், ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு நேரடியாகச் சென்று முதலீடுகளைத் திரட்டியதன் விளைவாகவும் தமிழ்நாட்டில் பெரும் நிறுவனங்கள் தொழில் தொடங்கி அதன் மூலம் வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. அதன் காரணமாக இந்தியாவிலேயே அதிக வேலையாப்பினை உருவாக்கி வளர்ச்சிப்பாதையில் முன்னணியில் இருக்கும் மாநிலமாகத் தமிழ்நாடு உயர்ந்துள்ளது.

அதோடு முதல்வர் பெண்கள் முன்னேற்றத்திற்காக மேற்கொண்ட சீரிய நடவடிக்கைகளால் இன்று பெண்கள் வேலைக்கு செல்லும் விகிதத்திலும், சுயசார்பு நிலையிலும் தமிழ்நாடுதான் இந்தியாவிலேயே முதலாவதாக உள்ளது. அடிமை அதிமுக ஆட்சியில் இருள் சூழ்ந்து கிடந்த தமிழ்நாடு திராவிட மாடல் நல்லாட்சியில் ஒளி வீசுயபடி வளர்ந்துவருகிறது. தமிழ்நாட்டு மக்களின் நலனே முக்கியம் என முதல்வரின் தலைமையிலே சிறப்பாக நடந்துவரும் திராவிட மாடல் ஆட்சி மீது அள்ளிவிடும் அதிமுகவின் கண்துடைப்பு கண்டனக்கதைகளைத் தமிழ்நாட்டு மக்கள் துளியும் நம்ப போவதல்லை; கட்டுக்கதை பழனிசாமியின் துரோகத்தையும் மறக்கப்போவது இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறப்பான ஆட்சி அதிமுகவின் கண்துடைப்பு கண்டன கதைகளை மக்கள் துளியும் நம்ப போவதில்லை appeared first on Dinakaran.

Related Stories: