தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன் எம்எல்ஏ காலமானார்: முதல்வர் மு.க.ஸ்டாலின், சோனியா, ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல், சென்னையில் இன்று உடல் தகனம்

சென்னை: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ்.இளங்கோவன் உடல்நலக்குறைவால் நேற்று காலை மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல்காந்தி மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ்.இளங்கோவன் (76), காய்ச்சல், சளி தொந்தரவு காரணமாக கடந்த மாதம் 13ம் தேதி சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நுரையீரல் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. கடந்த மாதம் 28ம்தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை விவரங்களை கேட்டறிந்ததோடு, ஈவிகேஎஸ்.இளங்கோவனின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர். பின்னர் சில நாட்களில் உடல்நிலையில் மெல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவு முதல் மீண்டும் திடீர் பின்னடைவு ஏற்பட்டது. மூச்சு திணறல் அதிகரித்தது. , தீவிர கண்காணிப்பில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

நேற்று காலையில் உடல்நிலையில் மேலும் பின்னடைவு ஏற்பட்டது. காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் நேற்று காலை மருத்துவமனைக்கு நேரில் சென்று டாக்டர்களிடம் நிலைமையை கேட்டறிந்தனர். இந்நிலையில், டாக்டர்களின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்த நிலையில், நேற்று காலை 10.12 மணிக்கு ஈவிகேஎஸ்.இளங்கோவன் மரணமடைந்ததாக மியாட் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.

இதையடுத்து, மருத்துவமனை நடவடிக்கைகள் அனைத்தும் முடிந்து இளங்கோவனின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து, மறைந்த ஈவிகேஎஸ். இளங்கோவன் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக சென்னை நந்தம்பாக்கம் அருகே உள்ள மணப்பாக்கம் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அப்போது, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஈவிகேஎஸ்.இளங்கோவன் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அவருடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, கோ.வி.செழியன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து, மத்திய சென்னை எம்பி தயாநிதி மாறன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, அசன் மவுலானா எம்எல்ஏ, தமிழக எம்.பி.க்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள், தி.க. தலைவர் கி.வீரமணி, தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து, இன்று மாலை அவரது உடலுக்கு இறுதி சடங்குகள் நடக்கிறது. பிற்பகல் 2 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, அதை தொடர்ந்து, முகலிவாக்கம் எல் அண்டு டி காலனியில் உள்ள மின்மயானத்தில் மாலை 4 மணிக்கு அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அவரது குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.

ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல்காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, பிரியங்கா காந்தி, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, பாஜ மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் மற்றும் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவை தொடர்ந்து காங்கிரஸ் அலுவலகங்களில் கட்சி கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. தொடர்ந்து, மணப்பாக்கத்தில் வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் ஈவிகேஎஸ்.இளங்கோவன் உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அமைச்சர் செந்தில்பாலாஜி, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தங்கபாலு, திருநாவுக்கரசர், கிருஷ்ணசாமி, நாசே ராமச்சந்திரன், மாநில துணை தலைவர்கள் கோபண்ணா, சொர்ணா சேதுராமன், மாநில பொதுச் செயலாளர்கள் ரங்கபாஷ்யம், தளபதி பாஸ்கர், டி.செல்வம்,

மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவ ராஜசேகரன், முத்தழகன், டில்லி பாபு, ஏ.ஜி.சிதம்பரம், ஆர்டிஐ பிரிவு துணை தலைவர் மயிலை தரணி மற்றும் நிர்வாகிகள் வி.ஆர்.சிவராமன், குலாம் மொய்தீன், சிவ ராமகிருஷ்ணன், எம்.ஆர்.ஏழுமலை, பாலமுருகன், சூளை ராமலிங்கம், பிராங்களின் பிரகாஷ், ஐயம் பெருமாள், சுதா பிரசாத், தமிழ்செல்வன், கனி பாண்டியன், ஒன்றிய குழு தலைவர் படப்பை மனோகரன், காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கோல்டு பிரகாஷ், பாஜ சார்பில் நடிகை குஷ்பு, மண்பாண்ட தொழிலாளர்கள் சங்க தலைவர் சேம நாராயணன் உள்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

* தந்தை பெரியாரின் பேரன்
தந்தை பெரியாரின் அண்ணன் ஈ.வெ.கிருஷ்ணசாமியின் பேரனும், ஈ.வெ.கி.சம்பத்தின் மகனுமான ஈவிகேஎஸ்.இளங்கோவன் 1948ம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதி பிறந்தார். இவரின் தாயார் ஈவெகி.சுலோச்சனா சம்பத். இவர் அதிமுகவில் அமைப்பு செயலாளராக இருந்தார். ஈவிகேஎஸ்.இளங்கோவனின் மனைவி வரலட்சுமி. இவர்களுக்கு திருமகன் ஈவெரா, சஞ்சய் சம்பத் ஆகிய 2 மகன்கள். இதில் மூத்த மகன் திருமகன் ஈவெரா மாரடைப்பால் கடந்த ஆண்டு மரணம் அடைந்தார்.

ஈவிகேஎஸ்.இளங்கோவன் ஆரம்ப கல்வியை ஈரோடு கலைமகள் கல்வி நிலையத்திலும், பின்னர் ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியிலும் படித்தார். சென்னை மாநில கல்லூரியில் சேர்ந்து பிஏ பொருளாதாரம் பட்டம் பெற்றார். சென்னை மாநில கல்லூரியில் படிக்கும் காலத்தில் மாணவரணி காங்கிரஸ் செயலாளராக இருந்தார்.

அதன் பின்னர், ஈரோடு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர், ஈரோடு நகர காங்கிரஸ் தலைவர், ஈரோடு மாவட்ட காங்கிரஸ் தலைவராகவும், அதையடுத்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுசெயலாளர் பதவி வகித்தார். கடந்த 2000ம் ஆண்டு முதல் 2002ம் ஆண்டு வரை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும், 2003ம் ஆண்டு வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவராகவும், 2015ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை 2வது முறையாக காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவராக பதவி வகித்தார்.

* ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றி
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ.வாக இருந்த ஈவிகேஎஸ்.இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா மாரடைப்பால் கடந்த ஆண்டு ஜனவரி 4ம் தேதி மரணம் அடைந்ததையடுத்து, இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் கடந்த ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி நடந்தது. இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈவிகேஎஸ்.இளங்கோவன் களம் இறக்கப்பட்டார். இந்த தேர்தல் ஈவிகேஎஸ்.இளங்கோவன் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 39 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் எம்எல்ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

The post தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன் எம்எல்ஏ காலமானார்: முதல்வர் மு.க.ஸ்டாலின், சோனியா, ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல், சென்னையில் இன்று உடல் தகனம் appeared first on Dinakaran.

Related Stories: