ஊட்டி அருகே குடியிருப்பு பகுதியில் வலம் வந்த கருஞ்சிறுத்தை: பொதுமக்கள் அச்சம்

ஊட்டி: ஊட்டி அருகே பேரார் பகுதியில் குடியிருப்பு பகுதியில் வலம் வந்த கருஞ்சிறுத்தையால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் தற்போது அனைத்து பகுதிகளிலும் வன விலங்குகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக, காட்டு மாடுகள், சிறுத்தை, காட்டு யானைகள் மற்றும் கரடி போன்றவைகளின் எண்ணிக்கை தற்போது பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், இவைகள் உணவு தேடி மக்கள் வாழும் பகுதிகளுக்குள் வருவதால், மனித விலங்கு மோதலும் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது.

சில சமயங்களில் பொதுமக்களை தாக்குவதால், உயிர் சேதமும் ஏற்பட்டு வருகிறது. தற்போது பெரும்பாலான பகுதிகளில் சிறுத்தைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவைகள் மக்கள் வாழும் பகுதிகளுக்குள் வந்து கால்நடைகள், வளர்ப்பு பிராணிகள் மற்றும் கோழிகளை வேட்டையாடி செல்கின்றன. மேலும், இவைகள் தற்போது குடியிருப்பு பகுதிக்கு உள்ளேயே வரத்துவங்கி விட்டன. இதனால், பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியில் வரவே அச்சப்படுகின்றனர். இந்நிலையில், ஊட்டி அருகே பேரார் பகுதியில் மக்கள் வாழும் பகுதிக்குள் இரவு நேரங்களில கருஞ்சிறுத்தை ஒன்று உலா வருகிறது.

நேற்று முன்தினம் இரவும், இந்த கருஞ்சிறுத்தை அப்பகுதியில் இரவு நேரத்தில் உணவு தேடி வந்ததை சிலர் செல்போன் மூலம் படம் பிடித்துள்ளனர். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மக்கள் வாழும் பகுதிக்குள் வரும் இந்த கருஞ்சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட வேண்டும் என வன அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஊட்டி அருகே குடியிருப்பு பகுதியில் வலம் வந்த கருஞ்சிறுத்தை: பொதுமக்கள் அச்சம் appeared first on Dinakaran.

Related Stories: