சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார். இன்று காலை 10.12 மணிக்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானதாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. காய்ச்சல் பாதிப்பு காரணமாக சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் 11ம் தேதி அனுமதிக்கப்பட்டார். ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு நுரையீரல் சார்ந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து சென்னை மியாட் மருத்துவமனைக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
இதனால் மருத்துவமனையில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு காங்கிரஸ் கட்சிக்கு பேரிழப்பு; ஈவிகேஸ் இளங்கோவனை காங்கிரஸ் கட்சியினர் தன்மானத் தலைவர் என்று வாஞ்சையோடு அழைப்பார்கள். ஈவிகேஎஸ் இளங்கோவனின் உடல் சென்னை ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும். பொதுமக்கள் அஞ்சலிக்குப் பிறகு நாளை ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் அடக்கம் செய்யப்படும் என்று தெரிவித்தார்.
அரசியல் பாரம்பரிய குடும்பத்தில் 1948 டிசம்பர் 21ஆம் தேதி பிறந்தவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். ஈரோட்டில் பள்ளி படிப்பை முடித்துவிட்டு சென்னை மாநிலக் கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் பட்டம் படித்தவர். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் தீவிர ரசிகரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அவரையே அரசியல் குருவாக ஏற்றவர். சிவாஜி பரிந்துரையில் 1984 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு சத்தியமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ.வானார். 1984-87 வரை சத்தியமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். 2004ல் கோபிச்செட்டிபாளையம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வென்று ஒன்றிய அமைச்சரானார்.
2000 முதல் 2002 வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் பதவி வகித்தவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். 2014 – 2017 வரை மீண்டும் காங்கிரஸ் கட்சி தலைவராக பதவி வகித்தார். 2002-2003ல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவராகவும் பதவி வகித்தவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். 2023 பிப்ரவரியில் நடந்த ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வென்று 2வது முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டார். 39 ஆண்டுகளுக்கு பிறகு சட்டமன்ற உறுப்பினராக ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்றார்.
The post ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார் appeared first on Dinakaran.