நன்றி குங்குமம் தோழி
* எந்தக் கிழங்கை வேக வைத்தாலும் 10 நிமிடம் உப்பு கலந்த நீரில் போட்டு வைத்து, பின் வேகவைத்தால் வேகமாக வெந்துவிடும்.
* சுண்டல் செய்யும் போது சீரகம், ஓமம், மிளகு ஆகியவற்றை வறுத்து பின் பெருங்காயம், சுக்கு சேர்த்து பொடி செய்யவும். இறக்குவதற்கு முன் இந்தப் பொடியை தூவிக் கிளறினால், வாயுக்கோளாறு, வயிறு உப்புசம் ஏற்படாமல் நீங்கும்.
* கொண்டைக்கடலை, பட்டாணி, மொச்சை போன்றவற்றை முதல் நாள் ஊற போட மறந்துவிட்டால் அவற்றை எண்ணெய் விடாமல் நன்கு வறுத்து குக்கரில் வேக வைத்தால் நன்கு வெந்துவிடும்.
* தோசை மாவிற்கு அரிசியுடன் ஜவ்வரிசி சேர்த்து ஊறவைத்தால் தோசை மொறுமொறுப்பாக இருக்கும். ம.வசந்தி, திண்டிவனம்.
* தேங்காய் பர்பி செய்யும் போது சிறிது முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு இரண்டையும் ஊற வைத்து தேங்காயுடன் அரைத்து பின்னர் பர்பி செய்தால் பர்பி நன்றாக இருப்பதோடு வில்லை போடும்போது தேங்காயும் உதிராமல் இருக்கும்!
* உளுந்து வடை செய்யும் போது மாவுடன் வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து கலந்து வடை செய்தால் வடை எண்ணெய் குடிக்காமல் மொறுமொறுவென்று ருசியாக இருக்கும்!
* மிளகாய் வறுக்கும் போது ஏற்படும் நெடியை தவிர்க்க சிறிது உப்பை சேர்த்து வறுக்கவும்!
* எலுமிச்சை, தேங்காய், புளி, தக்காளி சாத வகைகள் செய்யும் முன் சாதத்தை ஒரு பெரிய தாம்பாளத்தில் போட்டு நல்லெண்ணெய் விட்டுக் கிளறி ஆற வைத்து பின்னர் செய்தால் உதிரி உதிரியாக சுவையாக இருக்கும்! நாகஜோதி கிருஷ்ணன், சென்னை.
* உளுந்தம் பருப்பை ரவை போல் உடைத்து, மிளகு சேர்த்து, வெந்நீர் தெளித்து பிசைந்து கால் மணி நேரம் கழித்து வடை தட்டி பொரிக்கலாம். விரைவில் செய்து விடலாம். மொறு மொறுப்பாகவும் இருக்கும்.
* ரவையை வறுத்து, உப்பு கலந்த மோரில் அரைமணி நேரம் ஊறவைத்து, உப்பு, சீரகம், மிளகு கலந்து தோசை வார்த்தால் ரவா தோசை மொறுமொறுவென்றிருக்கும்.
* புளித்த மோர் மிச்சமிருந்தால் அதில் இஞ்சி, பச்சை மிளகாய் அரைத்து கலந்து உப்பு சேர்த்து, கோதுமை மாவைப் பிசைந்து சப்பாதி செய்தால், உப்பு, காரம், புளிப்பு கொண்டு சுவையாக இருக்கும். எஸ்.ராஜம், திருச்சி.
* பக்கோடா மாவுடன் சிறிது ரவையை கலந்து செய்தால் பக்கோடா ஆறிய பிறகும் மொறுமொறுப்பாக சுவை கூடுதலாக இருக்கும்.
* ேகரட், பீட்ரூட் அல்வா செய்யும் போது கூடவே கொஞ்சம் ‘மில்க்மெய்ட்’ ஊற்றி கிளறினால் அல்வா நன்கு மணமாகவும், ருசியாகவும் இருக்கும்.
* எலுமிச்சை, தேங்காய் சாதங்களில் கொஞ்சம் வறுத்த வேர்க்கடலையை ஒன்றும் இரண்டுமாக பொடி செய்து போட்டால் சாதம் மிகவும் ருசியாக இருக்கும்.
* ரசத்திற்கு தாளிக்கும் போது சிறிது நெய்யில் கடுகுடன் 4 அல்லது முழு மிளகுகளையும் சேர்த்து தாளித்தால் ரசம் நன்கு மணத்துடன் இருக்கும். கே.கவிதா, வேலூர்.
* எந்தவித பாயசமாக இருந்தாலும் அதில் ஒரு மேஜைக்கரண்டி வெந்த பயத்தம் பருப்பை சேர்த்துவிட்டால் பாயசத்தின் சுவை பிரமாதமாக இருக்கும்.
* உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து இஞ்சி, சிறிது தேங்காய், பச்சைமிளகாய் இம்மூன்றையும் அரைத்து சிறிது கடலை மாவு தூவி உருளைக்கிழங்கை பிசறி ரோஸ்ட் செய்தால் வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.
* வேர்க்கடலையை ஒன்றிரண்டாகப் பொடி செய்து பக்கோடாவில் கலந்து செய்தால் கரகரப்பாக இருக்கும்.
* இட்லி தோசை மாவு கொஞ்சமாக இருக்கும் போது அதில் மாவு இருக்கும் அளவிற்கு ஒரு பங்கு ரவையை வறுத்துக் கொட்ட வேண்டும். கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, பச்சைமிளகாய் வறுத்து சேர்த்து, கொத்தமல்லி அரிந்து போட்டு ஒரு கரண்டி புளித்த தயிர் விட்டு ரவை இட்லியாக செய்யலாம். ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.
* அடை மாவு அதிகம் புளித்துவிட்டால் அதை இட்லி தட்டில் ஊற்றி 7 நிமிடம் வேகவைத்து, உதிர்த்து கடுகு, மஞ்சள் பொடி, கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, வெங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்து உப்பு தேவைக்கேற்ப போட்டால் அடை காரப் புட்டு தயார்.
* எலுமிச்சை இலையை எண்ணெயில் வதக்கி, மிளகாய், புளி, உப்பு, உளுந்து, பெருங்காயம் ேசர்த்து துவையல் செய்யலாம். ச.லெட்சுமி, தென்காசி.
* சுண்டக்காயை தயிர், உப்பு விட்டு ஊறவைத்து வெயிலில் காயவைத்து வத்தல் குழம்புடன் சேர்த்தால் குழம்பு நன்றாக இருக்கும்.
* பூண்டு கெட்டுப் போகாமல் இருக்க கொஞ்சம் கேழ்வரகை சேர்த்து வைத்தால் புழுக்காமல் நீண்ட நாட்கள் இருக்கும்.
* உளுந்து வடைக்கு மாவு ஆட்டும்போது சிறிதளவு துவரம் பருப்பை சேர்த்து ஆட்டினால் வடை மெதுவாக இருக்கும். க.நாகமுத்து, திண்டுக்கல்.
The post கிச்சன் டிப்ஸ் appeared first on Dinakaran.