நன்றி குங்குமம் தோழி
பெருமையான உறவுகள்
உறவுகள் பலவிதம். ஒவ்வொருவரும் ஒருவிதத்தில் அனுசரணையாக இருந்து குடும்பத்தை, குடும்ப கௌரவத்தை பாதுகாக்க தன்னால் இயன்றவற்றையெல்லாம் செய்து வந்தனர். உதவி என்று சொல்லும் பொழுது பண உதவி மட்டுமே என்று நினைக்க வேண்டாம். உடன் இருப்பதே பெரியபலம்தான். ஐம்பது, அறுபது வருடங்களுக்கு முன்பு வரை, ஒரு திருமணம் பேசி முடிக்கும் முன், அவர்கள் எப்படிப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று தான் பார்த்தார்கள். வசதி வாய்ப்பைவிட, அந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் பூர்வீகம், அவர்கள் பரம்பரை போன்றவற்றை வைத்தே பையனோ, பெண்ணோ எப்படி இருப்பார்கள் என கணித்தார்கள். அனைத்து விஷயங்களும் பெரியவர்கள் முன்னிலையில் விவாதிக்கப்படும்.
பெரியவர்களுக்கு திருப்தி என்றால் பேசி முடித்து விடுவார்கள். வசதிகளை மட்டும் பார்த்து முதலில் ‘சரி’ ெசால்ல மாட்டார்கள். ஒருவேளை திருமணத்திற்கு பணவசதி போதவில்லை என்றால், ஒவ்வொரு உறவினரும் தங்களால் என்ன செய்ய முடியும் என்பதைக் கூடி கலந்து பேசி அனைத்தும் செய்து விடுவார்கள். மணமகளுக்கு எந்தக் குறையும் இல்லாமல் அனைத்தும் சுமுகமாக முடிந்து விடும். இதுவே பெரியவர்கள் செய்த பெருமைக்குரிய விஷயமாக இருந்தது. இத்தகைய முன்னெடுப்புகளில் சில நெருங்கிய உறவுகள் முக்கிய அங்கமாகத் திகழ்வர். அப்பாவின் உடன் பிறப்புகள் முக்கியமாக பெரியப்பா மற்றும் அம்மா வழியில் பெரியப்பா, அதாவது, அம்மாவின் அக்கா கணவரும் பெரியப்பா முறையாவார்.
தங்கள் வீட்டு மகளோ, மகனோ நன்றாக இல்லறம் நடத்துவதை மட்டுமே அவர்கள் விரும்பினார்கள். பெரும்பாலும் பெரியம்மா, பெரியப்பா உறவில் உள்ளவர்கள், பெண்ணுக்கு இரண்டு சவரன் நகை கொடுத்து உதவுவார்கள். அதனை அந்த பெண்ணின் பெற்றோர் அல்லது பெண் அவர்களுக்கு தேவைப்படும் போது திருப்பி கொடுப்பார். இதுதான் இன்று உறவுகள் மத்தியில் நிலவி வந்தது.
உறவுகளுக்குள் நன்றி விசுவாசம் என்பதும், பாசத்துடன் ஒருமித்து இருந்தது. ஒரு பெண்ணின் திருமணமோ, ஆணின் திருமணமோ நல்ல விதத்தில் நடைபெற்று அவர்கள் வாழ்வு செழிக்க அனைவரும் ஒன்று கூடி செயல்பட்டனர். அதில் குடும்பத்தின் மூத்தவர் பங்கு என்பது அளவிடமுடியாமல் இருந்தது. சமீபத்தில் ‘கொரோனா’ காலத்தில் நிறைய திருமணங்கள் நடந்தன. எளிமையாக கூட்டமில்லாமல் கட்டுப்பாடுகளுடன் நடந்த திருமணங்கள் பல. அவற்றில் இரண்டு மூன்று பேருடன் கூட சிலர் கோவில்களில் திருமணம் செய்தனர். ஆசைப்படும் அளவுக்கு இல்லாமல், ஒரு சிலர் ஆசியுடன் மட்டும் நடந்தன.
சில குடும்பங்களில் பெரியப்பாக்கள் குடும்ப வாரிசுகள், அதாவது தம்பி மகன்கள், மகள்கள் போன்றவர்களுடன் நல்ல ஒரு தோழன் போல கூட நடந்து கொள்வார்கள். கிரிக்கெட், கேரம், சீட்டு போன்ற அனைத்து விளையாட்டுகளிலும் சேர்ந்து விளையாடுவார்கள். சனி, ஞாயிறு வந்து விட்டால் போதும். உறவுகளுடன் சேர்ந்து தெரு கிரிக்கெட் தான். அப்பொழுதெல்லாம் அனைத்து வீடுகளிலும் தொலைக்காட்சி பெட்டி இருக்காது.
தெருவில் யாராவது ஒரு வீட்டில் தான், கறுப்பு வெள்ளை தொலைக்காட்சி பெட்டி இருக்கும். அவர்கள் வீட்டில் ‘உறவினருடன் வந்து படம் பார்க்கலாமா?’ என்று கேட்டு அனுமதி பெற்று, பின் அனைவரும் கும்பலாகச் சென்று படம் பார்த்து குதூகலிப்பர். ஏதாவது ‘கிரிக்கெட்’ நடந்தால், அவ்வளவுதான். ஃபோர், சிக்ஸ் என்று வீட்டுக்குள்ளிருந்து பல குரல்கள் வரும். நிகழ்வுகளை பார்த்து மகிழ்வதற்காகவே, தொலைக்காட்சி இருக்கும் வீடுகளில் நட்பை வளர்த்துக் கொள்வார்கள்.
அம்மா வழி பெரியப்பா, தன் குழந்தைகளுக்கு செய்வது போலவே, மச்சினி பிள்ளைகளுக்கும் செய்து தன் அந்தஸ்தை தக்க வைத்துக் கொள்வார். அக்கா, தங்கைகளுக்குள் எவ்வித மனஸ்தாபமும் வரக்கூடாது என்பதற்காக அனைத்திலும் விட்டுக் கொடுப்பார். சில வீடுகளில் பார்க்க கண்டிப்பாக இருப்பார்கள். அதற்காக அவர்களுக்கு நல்ல குணமில்லை என்று சொல்லிவிட முடியாது. பெரியவர்கள் சரியாக நடந்தால்தான், வளரும் பிள்ளைகள் ஒழுங்காக வளர்வார்கள். அதனால் நேரம் தவறாமை, வெளியில் சென்றால் வீட்டிற்கு நேரத்துடன் திரும்ப வேண்டும், பெரியவர் சொல்வதைக் கேட்டு நடத்தல் போன்றவை அனைத்தும் அன்று அனைவரும் கடைபிடித்துதான் வளர்ந்தார்கள்.
வீடு என்பது ஒரு பல்கலைக்கழகமாக திகழ்ந்து, அனைத்திலும் முன்னோடியாகவே இருந்தது. விளையாட்டில் ஆரம்பித்த குதூகலம், இயற்கை உணவை போட்டி போட்டு சாப்பிடுவது வரை தொடரும். பார்ப்பதற்கு பெரியவர்கள் இடைவெளி விட்டுப் பழகுவது போல் தோன்றும். ஆனால் செயல் என்று வந்து விட்டால், அவரவருக்கு விரும்பிய செயலில் சேர்ந்து குதூகலிப்பதுதான் விசேஷம். பெரியவர்கள் பாட்டு பாடிக் கொண்டே உரலில் இடிப்பதும், அம்மியில் அரைப்பதும், அதே பாட்டை சிறிசுகள் காதில் வாங்கிக் கொண்டே பாடிவிடுவார்கள். கண்ணால் பார்க்கும் செயல்களை கையால் செய்து விடுவார்கள்.
இந்த காலகட்டத்தில் பொறுமையிழந்து நாம் சிறிய விஷயங்களுக்கு சிறுவர்களிடம் கூட கோபப்படுகிறோம். காலம் ஓடுகிறது. நாமும் ஓடிக் கொண்டே இருக்கிறோம். ஆனால் பழைய குடும்பங்களில் பெரிய தப்பைக் கூட எடுத்துச் சொல்லி புரிய வைத்திருக்கிறார்கள். அன்பு கலந்த அரவணைப்பே நம்மை தவறு செய்ய விடாமல் தடுத்தது. ஒருவர் தப்பு செய்து அவரைத் திட்டினால் மற்றவர்கள் பரிந்து பேச வந்து விடுவார்கள். அதனால் கண்டிப்புகள் பெரிதாகத் தெரியாமல் இருந்தது. மன உளைச்சல்களும் ஏற்படாமல், எதற்கும் வருத்தமடையாமல் பிறர் உறுதுணையோடு அனைத்தையும் சாதிக்க முடிந்தது.
ஒரு பெண்ணின் தந்தை, அவளின் திருமணவயதில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார். அவளுக்கு அப்பாவழி உறவுகள் அதிகம் இல்லை. அம்மாவின் அக்கா வீட்டுக்காரர் அப்பெண்ணை தங்கள் பெண்ணாக ஆதரித்து, அவளுக்கு வரன்கள் தேட ஆரம்பித்தார். மணப்பையன் வீட்டில் ஆச்சரியப்படும் அளவுக்கு சீர் செய்து பெரிய இடத்தில் திருமணம் முடித்தார். அவள் தந்தை உயிருடன் இருந்தால் கூட அவ்வளவு பண வசதி இருந்திருக்காது. பெரியப்பா அவ்வளவு ஆசையாய் ஊரே மெச்சும்படி நடத்தினார். அவர்கள் பையனும் சகோதரிக்கு வேண்டிய அனைத்தையும் முன்னின்று நடத்தினர்.
சகோதரன் சார்பில் இன்று வரை பொங்கல், தீபாவளி போன்றவற்றிற்கு பிறந்த வீட்டு சீர் செய்து வருகிறார்கள். அன்று யார் வேண்டுமானாலும் உறவு விரியாமல் பார்த்துக் கொண்டார்கள். இன்றைய நிலை உதவி கேட்டு விடுவார்களோ என்றே ஒதுங்க ஆரம்பிப்பார்கள். அத்தகைய உறவுகள் பெருமையை தேடித்தந்தன. அப்படிப்பட்ட காலம் மீண்டும் வருமா? தொடரட்டும் உறவுகள்!
தொகுப்பு: சரஸ்வதி ஸ்ரீநிவாசன்
The post உன்னத உறவுகள் appeared first on Dinakaran.