×

சிறுகதை

நன்றி குங்குமம் தோழி

குருவிகள் திரும்ப வரும்!

பொக்லைன் இயந்திரத்தின் இரைச்சலை கேட்டதுமே வாய்க்கால் புதருக்குள் பதுங்கி இருந்த குருவிகள் அத்தனையும் குபீர் குபீரென்று மேலே பறக்கத் தொடங்கின. தங்களின் கூடுகளுக்குள் குஞ்சுகளாய், முட்டைகளாய் இருக்கும் தங்கள் சந்ததிகள் அழிக்கப்பட போகிறதே என்ற பதை பதைப்பு ஒலி.அந்தப் பக்கம் அகலமான கோரையாறு. நடுவில் உயரமான செம்மண் சாலை. கீழே இறக்கத்தில் வாய்க்காலில் மண்டி கிடக்கும் புதர்கள்.

வரப்புகளில் வளர்ந்திருக்கும் நாட்டு கருவேல மரங்கள்… பனங்குட்டிகள்… இவற்றையெல்லாம் அழித்து வாய்க்காலை தூர் வாருவதற்காகத்தான் பொக்லைன் இயந்திரம் இயங்கிக் கொண்டிருந்தது. வாய்க்காலை ஒட்டிய விளை நிலத்தில், விளைந்து முற்றிய உளுந்து செடியைப் பிடுங்கிக் கொண்டிருந்த செல்லத்துரையும் அவருடைய மனைவி கமலவேணியும் திக்கென நிமிர்ந்தார்கள். பொக்லைன் இயந்திரத்தின் இரைச்சலை விட குருவிகளின் ‘கீச்சு கீச்சு’ என்ற ஒலிதான் அவர்களை அதிர்ச்சியடைய வைத்திருந்தது‌.

செல்லத்துரை தடதடவென வாய்க்காலை நோக்கி ஓடத் தொடங்கினார்.வாய்க்காலை ஒட்டி செல்லத்துரைக்கு இரண்டு ஏக்கர் விளைநிலம் இருக்கிறது.கணவனும் மனைவியும் வயல் காடே கதி என கிடப்பார்கள். இருவருக்கும் பொழுது போக்கு அந்த குருவிகள்தான்.வாய்க்காலை ஒட்டி இருக்கும் கருவேல மரங்களில் கூடு கட்டி இருக்கும் குருவிகள்…வாய்க்கால் புதருக்குள் கோரைகளின் அடர்த்தியான பகுதிக்குள் வசிக்கிற குருவிகள்… சின்னச் சின்ன குருவிகள்… கருமணிகளாய் கண்கள்…கூர்மையான நீண்ட அலகுகளுடன் சிறகடிப்பது, தத்தி தாவுவது அற்புத அழகு. நேர்த்தியாக கலை நுணுக்கத்தோடு கைதேர்ந்த பொறியியல் வல்லுநரை போல கட்டப்பட்டிருக்கும் கூடுகள்… குபீர் என்று மேலே பறப்பதும் குபீர் என்று கீழே வருவதும் அபார அழகு.

ஒரு பக்கம் தேன் சிட்டுக்குருவிகள் அழிந்து கொண்டிருந்தாலும், அந்த இயற்கையும் அமைதியும், தனிமையும், இங்கே அதன் இனவிருத்தியை அதிகமாக்கிக் கொண்டே இருந்தது. வயற்காட்டில் வேலையே இல்லாவிட்டாலும் கூட காலையிலும் சாயங்கால பொழுதிலும் வாய்க்கால் கரைக்கு வந்துவிடுவார். ஒருநாள் அந்த தேன் சிட்டுக்குருவிகளை பார்க்காவிட்டாலும் அவருக்கு தூக்கம் வராது. அதன் இன்னிசை ஒலியை கேட்காவிட்டால் எந்த வேலையும் ஓடாது. இவர் வரப்பின் மீது நடந்தால் கூட பக்கத்திலே கூட வந்து பறக்கும்.தோளை உரசிக் கொண்டு சிறகடிக்கும்.இப்படி நடக்கப் போகிறது என அவர் நினைத்துக் கூட பார்க்கவில்லை.

‘‘யோவ் நிறுத்துய்யா…’’ இரண்டு கைகளையும் உயர்த்தி பொக்லைன் இயந்திரக்காரனை பார்த்து ஆவேசமாய் கூச்சலிட்டார் செல்லத்துரை. அவன் அதை காதிலேயே வாங்கவில்லை. இவரை கண்டு கொள்ளவும் இல்லை. உயரமான பொக்லைன் இயந்திரத்தின் கண்ணாடி கதவுகளுக்குள் ஓட்டுநர் அமர்ந்திருந்தான். எந்த இரைச்சலும் அவன் காதில் விழாது… இவருடைய கூச்சல் மட்டும் விழுமா என்ன? அவனுடைய கவனம் எல்லாம் வாய்க்காலுக்குள் இருக்கிற புதர்களை அப்புறப்படுத்துவதிலேயே இருந்தது.பொக்லைன் நகர நகர குருவிகள் இன்னும் இன்னும் அலறத் தொடங்கின.செல்லத்துரைக்கு முகம் சிவக்க தொடங்கியது.

மனசு வலிக்க தொடங்கியது.. எரிச்சல் பீறிட தடதடவென ஓடிப்போய் பொக்லைன் இயந்திரத்திற்கு முன்னால் நான்கடி தொலைவில் நின்றார். பொக்லைன் டிரைவர் செல்லத்துரையின் இந்த செய்கையினால் ஆடிப் போனான். பொக்லைனின் இயக்கத்தை நிறுத்திவிட்டு கதவை தள்ளிக் கொண்டு கீழே குதித்தான். ‘‘எதுக்குங்கய்யா கூச்சல் போடுறீங்க? பொக்லைனை கரை மேல ஏத்தி போய்கிட்டே இரு… இங்கெல்லாம் வெட்ட வேணாம்… வேணும்னா கோரையாத்துல போயி வெட்டி ஆழமாக்கு… ஊர்ல நெறைய ஏரி, குளம், குட்டை, கண்மாயின்னு ஏராளமா கிடக்கு… அதை எல்லாத்தையும் ஆழப்படுத்து… யாரு வேணாம்னா? இந்த வாய்க்காலை மட்டும் விட்டுடுப்பா…” கைகளை குவித்தார்.

‘‘ஐயா நான் சம்பளத்துக்கு வந்திருக்கற வேலைக்காரன். மொதலாளி சொன்னதை செய்யறேன். என்ன தடுக்காதீங்க… வாய்க்கால வெட்டி, தூர் வாரி, கரைகளை அகலமாக்க… காண்ட்ராக்ட்டு எடுத்தவர் சொன்னதை நான் செஞ்சுதானே ஆகணும்? அவர் ஏரி, குளத்தை காண்ட்ராக்ட்டு எடுக்கல… இந்த வாய்க்காலைத்தான் எடுத்திருக்காரு… இன்னிக்கு நாளைக்குள்ள முடிச்சாதான் கரையை கட்டினதும் போட்டோ எடுப்பாங்க. பில் பணம் அக்கவுன்ட்ல ஏறணும்… ஏகப்பட்ட வேலை இருக்குது.”சொல்லிவிட்டு அவன் மறுபடியும் பொக்லைனில் ஏறப்போனான்.

‘‘நான் இவ்வளவு சொல்றேன் கேக்க மாட்டியா?”ஓடிப்போய் பொக்லைன் முன்னால் வாய்க்காலில் கீழே விழுந்து படுத்தார். வாய்க்காலில் தண்ணீர் இல்லை. தரையெல்லாம் வெடித்து பாளம் பாளமாக கிடந்தது. அவர் எதைப்பற்றியும் கவலைப்படவில்லை. எப்படியாவது தடுத்து நிறுத்தி விட வேண்டும்… குருவிகளை காப்பாற்றி விட வேண்டும் என்பதில்தான் குறியாக இருந்தார். பொக்லைன் டிரைவர் செல்போனை எடுத்து யாருக்கோ தகவல் தெரியப்படுத்தினான். அடுத்த பத்து நிமிடத்தில் இரண்டு பைக்குகளில் நான்கு பேர் வந்து விட்டார்கள்.‘‘இதோ இவர்தாங்கண்ணா பிரச்னை பண்றாரு…” செல்லத் துரையை காட்டினான். பைக்கில் இருந்து குதித்த நான்கு பேரும் வாய்க்காலை நோக்கி வந்தார்கள். கழுத்திலும் கைகளிலும் தங்கம் தாம்புக்கயிறாய் மினுக்கி அவர்களது பணக்காரத்தனத்தைக் காட்டியது.

‘‘இந்த ஆள்தான் பிரச்னை பண்றதா? நானும் என்னமோ ஏதோன்னு நெனைச்சிட்டேன். ஒட்டுமொத்த ஊரும் திரண்டு வந்துதான் தடுக்குதோன்னு பயந்துட்டேன்…” செல்லத்துரையை அலட்சியமாய் ஏறிட்டான்.‘‘யார்யா நீ? உனக்கு என்னய்யா வேணும்? என்னத்துக்கு பொக்லைன் முன்னால வாய்க்கால்ல படுத்துகிட்டு பிரச்சனை பண்ற? இது என்ன உன் அப்பன் வீட்டு சொத்தா? இல்ல வாய்க்காலுக்கு பட்டா ஏதாவது வாங்கி வச்சிருக்கியா? நான் என்ன உன் நெலத்துல வந்தா வெட்டுறேன்? நான் அந்த வாய்க்கால தூர் வார்றதுக்கு காண்ட்ராக்ட் எடுத்து இருக்கேன் … தூர் வாரினா உங்களுக்கெல்லாம் நல்லது தானே? வாய்க்கால்ல எப்போதும் தண்ணீர் கிடக்கும்தானே? ஒரு நல்ல விஷயத்தை நடத்த விட மாட்டீங்களா?” என்றான்.

ரொம்ப யோக்கியன் மாதிரி பேசினான். ‘‘தூர்வாருவது நல்ல விஷயம்தான். கோடைக்கும் தண்ணீர் கிடைக்கும். ஆனா, பாத்தீங்களா? கோரைப் புதர்லயும்… நாட்டு கருவேல மரத்துலயும் எத்தனை எத்தனை குருவிங்க கூடுங்க கட்டி இருக்குன்னு… அதுங்கெல்லாம் பொதரை அழிச்சிட்டா… நாட்டு கருவேல மரங்களை வெட்டிட்டா … எங்க போகும்? இயந்திரத்தை பார்த்ததுமே என்னம்மா அலறுது பாத்தீங்களா?”

‘‘யோவ் என்னய்யா பேசுற நீ? இந்த
குருவிகளுக்காகத்தான் குறுக்கப்படுத்து
தடுக்கறியா?”எகத்தாளமாய் கேட்டான்
காண்ட்ராக்ட்காரன்.

‘‘ஆமா…”
‘‘காக்கா, குருவிக்கெல்லாம் பாவ புண்ணியம் பார்த்தா மனுசங்க வாழ முடியாது! ஒனக்கு குருவிங்க மேல ஆசையா இருந்தா ஒரு கூண்ட வாங்கி… நாலு குருவிங்களை
புடிச்சுகிட்டு போய் வளர்த்துக்க… எங்கள தொல்லை பண்ணாத… எட்டிப் போயா…”மரியாதைத் துளியும் இல்லாமல் பேசினான்.

‘‘மாட்டேன்… நான் நகர
மாட்டேன்…’’ ‘‘ஒனக்கு என்ன கிறுக்கு பிடிச்சிருக்கா?”தூரத்தில் நின்று கவனித்துக் கொண்டிருந்த கமலவேணி வேறேதும் விபரீதமாக முடிந்து விடுமோ என்று பயந்து அங்கே ஓடி வந்து விட்டாள். ‘‘என்னங்க எழுந்திரிங்க… இதெல்லாம் நமக்குத் தேவையா? அவங்ககிட்ட என்ன பேச்சு வேண்டி கிடக்கு ? வீண் வம்பு நமக்கெதுக்கு?”

‘‘பாத்தியா? உன் பொஞ்சாதி சொல்றத? நல்லா புத்தியில உரைக்கிறாப்புல சொல்லுமா” என்றான். அவன் கூட வந்தவர்கள் முஷ்டியை மடக்கிக் கொண்டு செல்லத்துரையை அடிப்பதற்கு தயாராக முறைப்போடு காத்திருந்தார்கள். ‘‘என்னையா வேடிக்கை பாக்குறீங்க? இந்த ஆளை இழுத்துப் போய் அவனோட வயல்ல தள்ளுங்க…” இதற்காகவே காத்திருந்த பொக்லைன் டிரைவர் மேலே ஏறி பொக்லைன் இயந்திரத்தை இயக்க தொடங்கினான்.

காண்ட்ராக்ட்காரனின் கூட வந்தவர்கள் செல்லத்துரையை தரதரவெனஇழுத்து போய் வயலில் தள்ளினார்கள். ‘‘உன் புருஷனுக்கு புத்தி பேதலிச்சு போயிடுச்சு… ஊட்டுக்கு கூட்டி போய் நல்லெண்ணெயையும் எலுமிச்சம் பழத்தையும் தலையில தேச்சி குளிப்பாட்டு… நல்ல சோறா ஆக்கிப் போடு… ஒழுங்கா தூங்க வை… வந்துட்டான் பெரிசா… காக்கா குருவிக்கு பரிஞ்சிகிட்டு…” செல்லத்துரையை அவனுடைய ஆட்கள் தர தரவென இழுத்துப் போய் வயலில் தள்ளினார்கள். செல்லத்துரையால் எதுவும் செய்ய முடியவில்லை. பொக்லைன் இயந்திரம் கடகடவென இயங்கியது… புதர்களை வெட்டியது… நாட்டு கருவேல மரங்களை வேரோடு பிடுங்கியது… செல்லத்துரைக்கு கண்களில் ரத்தம் வராத குறைதான்.இதயம் தூள் தூளாக நொறுங்கிப் போனது.

குருவிகள் போராடின. ‘கீச் கீச்’ குருவிகள் குறுக்கே பறந்து தடுத்தன. ‘கீச் கீச்’ குருவிகள் நியாயத்தை கேட்டன. ‘கீச் கீச்’ குருவிகள் இரக்கத்தை எதிர்பார்த்தன. ‘கீச் கீச்’ குருவிகள் கண்ணீரை சிந்தின. ‘கீச் கீச்’ குருவிகள் கதறின. ‘கீச் கீச்’ குருவிகள் கெஞ்சின. ‘கீச் கீச்’ குருவிகள் மன்றாடின. ‘கீச் கீச்’ குருவிகள் சிறகுகளை கைகளாக பாவித்து குவித்தன. ‘கீச் கீச்’ குருவிகள் போராடின. ‘கீச் கீச்’ குருவிகள் பரிதவித்தன. ‘கீச் கீச்’ மனிதர்களுக்கே இதயம் இல்லாத போது இயந்திரத்திற்கு என்ன தெரியும்? இயந்திரம் அதுபாட்டுக்கு இயங்கியது.

கூடுகள் பிய்ந்துப் போனது. குஞ்சுகள்…

முட்டைகள் சிதறின. வண்ண வண்ண சிட்டுக்குருவிகள்… விதவிதமாய் சிட்டுக்குருவிகள்… எங்கிருந்தோ வந்தெல்லாம் கூடு கட்டி இருந்த சிட்டுக்குருவிகள் அத்தனையும் போர்க்களத்தில் சிக்கிக் கொண்ட அப்பாவிகளாக மடியத் தொடங்கின… அதற்கு மேல் செல்லத்துரை யால் அங்கே நிற்க முடியவில்லை. கிராமத்திற்கு பொதுவாய் இருக்கிற வாய்க்கால் சொந்தமாக தனிப்பட்ட மனிதர் யாருக்கும் சொந்தம் கிடையாது. விவசாயத்திற்கு பயன்படுகிற வாய்க்கால்… அதை நாம் தடுக்கவும் முடியாது. தடுத்தால் கிறுக்கன் என்றுதான் பார்ப்பார்கள், பேசுவார்கள்…

இயற்கையை ரசித்தால் கிறுக்கனா? பறவைகளை நேசித்தால் கிறுக்கனா? மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ளுங்கள் என்று சொன்னால் கிறுக்கனா? அதற்கு மேல் அங்கே நடப்பதை கண் கொண்டு பார்க்க முடியாமல்… ‘‘வா மச்சான் வீட்டுக்குப் போகலாம்” என்ற கமலவேணி அவரை கூட்டிக்கொண்டு வீட்டிற்கு நடந்தாள். இரவெல்லாம் உறங்கவே முடியவில்லை. செல்லத்துரை கண்களை மூடினாலே குருவிகளின் நினைப்புதான் மண்டியது. காதில் குருவிகளின் மரண அலறல் கேட்டது. விசுக்கென எழுந்து அங்குமிங்கும் நடந்தார். பைத்தியம் பிடித்தது போல இருந்தது. இனி வயல்வெளி பக்கமே போக வேண்டாம் போல் தோன்றியது. வாய்க்கால் இருக்கும்.

கருவேல மரங்கள் இருக்காது. குருவிகள் இருக்காது. கொஞ்சல் மொழி இருக்காது. எதுவுமே இருக்காது. மயானம் போல… போர்க்களம் போல ஆகியிருக்கும். விடிய விடிய உறங்கவே இல்லை. அடுத்த நாள், ‘‘வேணி… வீட்டுக்கு போய் மண்வெட்டியையும் கடப்பாரையையும் எடுத்து வர்றியா?” அடுத்த அரை மணி நேரத்திற்கெல்லாம் மண்வெட்டியையும் கடப்பாரையையும் எடுத்துக் கொண்டு அங்கு வந்து சேர்ந்திருந்தாள் கமலவேணி.

அதை இரு கைகளினாலும் வாங்கி வெறி பிடித்தவர் மாதிரி தனக்கு சொந்தமான விலை நிலத்தில் வெட்ட தொடங்கினார். நல்ல அகலமான ஆழமான குழியாக வெட்டினார். பொறுமையாக பார்த்துக் கொண்டிருந்த கமலவேணி, அவர் வெட்ட வெட்ட வெளியே வந்த மண்ணை அள்ளி போய்எட்டிக் கொட்டினாள். முழுமையாய் வேலையை முடிக்க இரண்டு மணி நேரத்திற்கு மேலானது.மூன்று குழிகளையும் வெட்டி முடித்த பிறகு கமலவேணியோடு சேர்ந்து அங்கே வேரோடு பிடுங்கப்பட்டு கிடந்த மூன்று நாட்டு கருவேல மரங்களையும் மூன்று குழிகளுக்குள்ளேயும் நட்டு மண்ணை தள்ளி மூடினார். கோரையாற்றிலிருந்து பிளாஸ்டிக் குடத்தில் தண்ணீரை அள்ளி வந்து மூன்று மரங்களுக்கும் ஊற்றினார்.

வயல்வெளிக்கு போகிற போதெல்லாம் வானத்தை அண்ணாந்து பார்த்து கைகளை குவித்து கும்பிட்டார். ஒரே ஒரு தடவை மழை பொழிந்தால் போதும் இந்த மரங்கள் கண்டிப்பாக துளிர்த்து விடும் என்று நம்பினார். நாட்கள் நகர்ந்தோடியதே தெரியவில்லை. உளுந்து பயிர் அறுவடை முடிந்து மறுபடியும் நெல் விதைப்புக்கு தயாராகிக் கொண்டிருந்தது நிலம். அந்த மரங்கள் மூன்றும் நன்றாக துளிர்விட்டு வளர்ந்திருந்தது. தினமும் வயல்வெளிக்கு போகிற போதெல்லாம் அந்த மரங்களையே சுற்றி சுற்றி வருவார். எந்த மாற்றமும் இல்லை.

எந்தக் குருவியும் தென்படவில்லை.ஒரு நாள் கமலவேணியும் அவரும் வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்தனர்.இவர் ஏர் கலப்பையினால் நிலத்தை உழுது கொண்டிருந்தார். உழுத இடங்களில் மேலே கிடந்த புற்களை கைகளால் கோதி கரை சேர்த்துக் கொண்டிருந்தாள் கமலவேணி .அப்போது ‘கீச்’ என்ற ஒலி கேட்டது. மினுக்கென நிமிர்ந்தார். செல்லத்துரை ஏர் கலப்பையை அப்படியே போட்டுவிட்டு அந்த நாட்டு கருவேல மரங்களை நோக்கி ஓடினார். நடுவில் இருந்த ஒரு நாட்டுகருவேல மரத்தில் நன்றாக கிளைகள் துளிர்த்து செழித்து பச்சை பசேல் என காட்சியளித்தது.

மரக்கிளையில் ஒரே ஒரு சிட்டுக்குருவி அமர்ந்திருந்தது. அந்தக் குருவிதான் ‘கீச்’ என்ற ஒலியை எழுப்பி இருந்தது. ‘‘நான் நெனைச்சது வீண் போகல வேணி ” என்றார். கண்களில் உற்சாகம் வழிந்தது. முகத்தில் ஓராயிரம் மின்னல்கள்… செல்லத்துரையின் கண்களில் ஈரம்… சந்தோஷ ஈரம்‌… மனசெல்லாம் நிரம்பி வழிந்தது. இந்த ஒரு குருவியும் நாளை இன்னொரு குருவியோடு வரும். அந்த இரண்டு குருவியும் நாளடைவில் மரங்கள் வளர வளர செழிக்க செழிக்க மஞ்சளாய் பூக்க பூக்க இரு நூறு குருவிகளாக மாறிப்போகும்… குருவிகள் திரும்ப வரும்.

தொகுப்பு: மகேஷ்வரன்

 

The post சிறுகதை appeared first on Dinakaran.

Tags :
× RELATED வெயில் காலத்தில் வீட்டை குளுமையாக வைத்திருக்கும் மண் வீடுகள்!