×

அண்ணாமலையாருக்கு அரோகரா…

அக்னியே பரம்பொருள்

பரம்பொருள் அக்னி ரூபமாகவே இருக்கிறான். எங்கும் சுடர் விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருக்கிறான். நம் ஆன்மாவில் ஒளிவிடும் ஜோதியாக இருக்கின்றான். அந்த ஜோதியை உணர்வதே ஞானம். உணர முடியாததே இருட்டு எனும் அஞ்ஞானம். அந்த இருட்டை மாய்த்து பரம்பொருளை உணர வைப்பதே தீபம். ஒரு தீபம் ஏற்றினால் அது எல்லா திசையிலும் ஒளி பரவி நிற்கும். பரம்பொருளும் அப்படித்தான். அவன் கருணையும், ஆற்றலும் எல்லாத் திசையிலும் பரவி நிற்கும்.

திருவண்ணாமலை தீபம்

நம்முடைய சமய மரபில் ஏராளமான உற்சவங்கள் இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட உற்சவத்தைச்
சொன்னால், உடனே தொடர்புடைய தலம் நினைவுக்கு வரும். சைவம், வைணவம் இரண்டுக்குமே இது பொருந்தும். பங்குனி உத்திரம் என்றால் பழனி நினைவுக்கு வரும். சித்திரைத் திருவிழா என்றால் கள்ளழகரும் மதுரை மீனாட்சி அம்மன் கல்யாணமும் நினைவுக்கு வரும். வைகுண்ட ஏகாதசி என்றால் ரங்கம் நினைவுக்கு வந்துவிடும். ஆருத்ரா தரிசனம் என்றால் சிதம்பரம் நினைவுக்கு வந்துவிடும். புரட்டாசி பிரம்மோற்சவம் என்றால் திருப்பதி நினைவுக்கு வந்துவிடும். கந்தசஷ்டி என்றால் திருச்செந்தூர் நினைவுக்கு வந்துவிடும். கார்த்திகை தீபம் என்றால் முதலில் நம் நினைவுக்கு வருவது பஞ்சபூத தலங்களில், அக்னி தலமாக விளங்குகின்ற திருவண்ணா மலையும், மலையின் உச்சியில் ஏற்றி வழிபடும் திருக்கார்த்திகை தீபமும் தான் நினைவுக்கு வரும்.

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும்சோதி

ஒளி, ஜோதி, சுடர், நெருப்பு – அனைத்தும் ஞானத்தின் குறியீடுகள். ஞானமே வடிவான இறைவனையும் இறை அருளையும் ஜோதி வடிவமாகவே ஆன் றோர்கள் குறிப்பிடுகிறார்கள். சைவம், வைணவம் என இரு பெரும் சமயங்களும் ஏற்றுக்கொண்ட உண்மை இது. மணிவாசகப் பெருமான் இறைவன் நெருப்புப் பிழம்பாய் எழுந்ததை, தம்முடைய திருவெம்பாவையின் முதல் பாடல் முதல் வரியிலேயே சொல்லி விடுகின்றார். கார்த்திகை மாதத்தில் தீபச் சுடராய் எழுந்த திவ்ய மங்களப் பரம்பொருளை, திருவெம்பாவையின் முதல் பாடலாக, அவர் பதிவு செய்கின்றார்.
“ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்
சோதியையாம் பாடக் கேட்டேயும் வாள் தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம் மறந்து
போதார் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எந்தோழி பரிலோர் எம்பாவாய்
இதில் முக்கியமான வார்த்தை ‘‘ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதி’’

பரணி தீபமும், கார்த்திகை தீபமும்

சந்திரன் இருள் நீங்கி பிரகாசிக்கிறாரா என்றால், ஆம்; பிரகாசிக்கிறார். கார்த்திகையில், கார்த்திகை தீபத்திருநாள் அன்று, சந்திரன் நீசம் பெறும் விருச்சி கத்தில் சூரியன் இருக்க, அவரிடமிருந்து ஒளி பெறும் சந்திரன், தன்னுடைய உச்ச ராசியான ரிஷபத்தில் இருக்கிறார். அவர் ரிஷபத்தில் கார்த்திகை நட்சத் திரத்தில் இருக்கும் வேளையில்தான் கார்த்திகை தீபத்தை ஏற்றுகிறோம். அதற்கு முன்னால் ரிஷப சுக்கிரனுக்குரிய பரணி நட்சத்திரத்தில் இருக்கும் வேளையில் பரணி தீபம் ஏற்றுகிறோம். அவர் ரிஷப ராசியில் தனது சொந்த நட்சத்திரமான ரோகிணியில் இருக்கும் வேளையில் பாஞ்சராத்திர தீபம் ஏற்றுகிறோம். அதுவும் சந்திரன் இருக்கும் ரிஷப லக்ன வேளையில் தீபமேற்றுவது விசேஷமானது என்று ஆகம சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன.

இருபத்தியோரு தலைமுறையினருக்கு முக்தி

பதினெட்டு சித்தர்களில் இடைக்காடர் ஐக்கியமான திருவண்ணாமலைத் தலத்தில் ‘தீப தரிசனம் செய்பவர்கள் முக்தியடைவர்’ என்று அருணாசல புராணம் கூறுகிறது. ‘‘இந்த ஜோதி தரிசனத்தைக் கண்டவர்களின் பசிப்பிணி விலகும், துன்பங்கள் பனிபோல் விலகும். குலத்திலுள்ள இருபத்தியோரு தலைமுறையினருக்கு நான் முக்தியை அளிப்பேன்’’ என்று சிவபெருமான் திருவாய் மலர்ந்து அருளியதாக பாடல் உள்ளது. அந்தப் பாடல்:
கார்த்திகைக்கு கார்த்திகை நாள் ஒரு ஜோதி
மலைநுனியிற் காட்ட நிற்போம்….
வாய்த்த அந்தச் சுடர் காணில் பசிப்பிணியில்
லாது உலகின் மன்னி வாழ்வார்
பார்த்ததிவர்க்கும் அருந்தவர்க்கும் கண்டோர்
தவிரும் அது பணிந்தோர் கண்டோர்
கோத்திரத்தில் இருபத்தோர் தலைமுறைக்கு
முத்திவரம் கொடுப்போம்’

பழந்தமிழர்கள் கொண்டாடிய திருவிழா

தீபத் திருவிழா என்பது பழந்தமிழர்கள் கொண்டாடிய திருவிழா. பெரும்பாலான நூல்களில் தீபத் திருவிழாவின் சிறப்பு காணப்படுகிறது. தேவாரம் தொடங்கி நெடுநல்வாடை, நற்றிணை, அகநானூறு, கார் நாற்பது, களவழி நாற்பது, சீவகசிந்தாமணி, முத்தொள்ளாயிரம், மதுரைக்காஞ்சி, பட்டினப்பாலை, பரிபாடல், ஐங்குறுநுாறு, என எல்லா இலக்கியங்களிலும் கார்த்திகை தீபம் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது. தமிழ் வேதமான பன்னிரு திருமுறைகளில் ஒன்றான திருமந்திரத்தில், திருமூலர் அக்னி வடிவமாக விளங்கும் சிவபெருமானின் வழிபாட்டையும், அதனால் பெறப்படும் பயனையும் விரிவாகக் கூறுகின்றார். அது மட்டுமில்லை, அவனை ஜோதியாகக் காண்பதே வழிபாடு என்கிறார். ‘‘உச்சியில் ஓங்கி ஒளிதிகழ் நாதத்தை நச்சியே இன்பம் கொள்வார்க்கு நமன் இல்லை’’ ‘‘விச்சும் விரிசுடர் மூன்றும் உலகுக்குத் தச்சும் அவனே அமைக்க வல்லானே’’ என்பது அவர் வாக்கு. தலை உச்சியில் ஓங்கி நாதமாகவும் ஒளியாகவும் விளங்குவதை விரும்பி இன்பம் அடைந்தவர்க்கு யமபயம் இல்லை. ஆக்வநீயம், காருக பத்தியம், தட்சிணாக்னி ஆகிய அக்னிகள் சூரிய சந்திர அக்னி என்ற மூன்று நெருப்புகளுடன் உடம்பில் அமையச் செய்பவன் இறைவன்.

வைணவத்தில் கார்த்திகை சிறப்பு

இனி வைணவ மரபில் கார்த்திகை தீபத்தைப் பற்றிய சிறப்பு காண்போம். கார்த்திகை மாதம் என்பது துவாதச மூர்த்திகளில் தாமோதரனை வழிபடும் மாதம். இந்த மாதத்தில் தாமோதரனை வழிபட்டால் பல நூறு யாக பலன்கள் செய்த புண்ணியம் கிடைக்கும். கார்த்திகை மாதம் திருமங்கை ஆழ்வார், திருப்பாணாழ்வார் என்ற இரண்டு ஆழ்வார்களும், அருளாளப்பெருமாள் எம்பெருமானார் என்ற ஆசாரியாரும் அவதரித்த மாதம். கார்த்திகை மாதத்தில் மிக முக்கியமான ஏகாதசி கைசிக ஏகாதசி. திருக்குறுங்குடி என்ற திருத்தலத்தில் நம்பாடுவான் சரித்திரம் அன்று இரவு நாடகமாக நடத்தப்படும். திருச்சித்ரகூடம் என்னும் தலத்தில் கோவிந்தராஜ பெருமாளுக்கு கோவிந்த பட்டாபிஷேகம் கார்த்திகை மாதத்தில் நடைபெறும்.

திருமஞ்சனமும் தீபமும்

அன்றைக்கு எல்லா பெருமாள் கோயில்களிலும் பெருமாள் தாயாருக்கு சிறப்பான திருமஞ்சனம் நடைபெறும். காலையில் சிறப்பு திருவாராதனம் நடைபெறும். மாலையில் திருவாராதனம் முடிந்து, பெரிய அகல் விளக்கு ஏற்றப்படும். பிறகு புண்ணியாகவாசனம் செய்து கார்த்திகை தீப பிரதிஷ்டை செய்யப்படும். அந்த தீபத்துக்கு தீபாராதனையும் நடந்து தீபம் புறப்படும். பிராகாரத்தை வலம் வந்து, ராஜ கோபுரத்திலும் பெருமாள் சந்நதியிலும் தீபங்கள் வைக்கப்படும். பிறகு அந்த தீபம் தாயார் சந்நதிக்கு கொண்டு வந்து பிரதிஷ்டை செய்யப்படும். தாயாருக்கு வேத மந்திரங்களோடு தீபம் சமர்ப்பிக்கப்படும். பின்பு தாயார் விமானத்திலும் மடைப்பள்ளி நாச்சியார் முன்பும் தீபம் வைக்கப்படும்.

சொக்கப்பனை

கார்த்திகை தீபத்தன்று சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி எல்லா சிவாலயங்களிலும் நடைபெறும். பனைமரத்தினை வெட்டிச் சிவாலயத்தின் முன்முற்றத்தில் நடுவார்கள். அதில் சில அடி உயரத்திற்குப் பனையோலைகளைக் கூம்பு போன்று கட்டி அமைக்கின்றார்கள். இவ்வமைப்பு சொக்கப்பனை என்று அழைக்கப்படுகிறது. கார்த்திகை தீபத்தன்று சிவாலய கோபுர உச்சியில் தீபம் ஏற்றி, பஞ்சமூர்த்திகளுக்கு வழிபாடு நடத்தப்படும். அதன் பின் பஞ்சமூர்த்திகளை சொக்கப்பனை வைத்திருக்கும் இடத்திற்கு அழைத்து வருகிறார்கள். பின்னர் பஞ்ச மூர்த்தி களுக்குத் தீபாராதனை காட்டப்பெற்று, அந்தத் தீபச்சுடரால் சொக்கப்பனையைக் கொளுத்துகின்றார்கள். எரிகின்ற சொக்கப்பனை அக்கினி மய லிங்கமாக பக்தர்களால் வணங்கப்படுகிறது. தூய்மைக்கு ‘‘சொக்க’’ என்று பெயர். தூய்மையான தங்கத்தை சொக்கத்தங்கம் என்று சொல்கிறோம். தூய்மையானது அக்னி. எந்தப்பொருளை போட்டாலும் அக்னி தூய்மை கெடாது. தூய்மையுள்ள இறைவனை அமலன் என்கிறோம். அவர்தான் சொக்கப்பனை. சொக்கப்பனையில் எரிதழலாக சொக்கப்பனை தரிசனம் செய்கிறோம்.

அகல் விளக்கு உண்மைகள்

நாம் தினசரி பூஜைகளை விளக்கேற்றித்தான் இறைவனை வணங்குகின்றோம் என்றாலும்கூட விளக்கேற்றும் வைபவத்துக்கென்று ஒரு உற்சவம் கார்த்திகை உற்சவம். இதில் மக்கள் தங்கள் வீடுகளில், மாலை நேரத்தில் அகல் விளக்குகளை ஏற்றி வைப்பார்கள். அகல் விளக்கு என்ற வார்த்தையை ஆய்வு செய்தால், நமக்கு சில அற்புதமான உண்மைகள் தெரியவரும். மண்ணால் செய்யப்பட்ட விளக்கை அகல் விளக்கு என்று சொல்லுகின்றோம். அந்த மண் விளக்குகளைததான் நிறைய ஏற்றுகிறோம். இந்த விளக்கு ஏற்றுவதன் மூலமாக இருட்டு அகல்கிறது. மாயை அகல்கிறது. கவலைகள் அகல்கின்றன. இப்படி இருட்டையும் துன்பத்தையும் கவலையையும் அகலச் செய்கின்ற விளக்கு என்பதால் இதனை “அகல் விளக்கு” என்று சொல்கின்றோம். இறைவனை வணங்கி ஒரு விளக்கேற்றி வைத்தால், எப்பேர்ப்பட்ட துன்பங்களும் விலகி ஒரு நல்ல வெளிச்சம் மனதிற்கு கிடைக்கும் என்பதுதான் அகல் விளக்கின் தத்துவம். ‘‘ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேன்’’ என்றும், ‘‘பொய் இருள் அகல நெய்விளக்கு ஏற்றி’’ என்றும்பாடி வைத்தார்கள். இடராழி நீங்கவே சுடர் ஆழி ஏற்றினேன் என்பது ஆழ்வார் வாக்கு.

இத்தனை பழமையா?

திருவண்ணாமலை 260 கோடி ஆண்டுகள் பழமையானது என பீர்பால் சகானி என்ற விஞ்ஞானி தெரிவித்துள்ளார். இம்மலையானது கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் தங்க மலையாகவும், தற்போது நடைபெறும் கலியுகத்தில் கல் மலையாகவும் இருக்கிறது என்று ஒரு நம்பிக்கை உள்ளது. இங்குள்ள கிரி வலப்பாதையில் கந்தாஸ்ரமம், விருப்பாச்சி குகை, குகை நமச்சிவாயர் ஆலயம், மாமரத்துக் குகை, சடைசாமி குகை, அருட்பால் குகை, ஆலமரத்து குகை, ரமண மகரிஷி குகை என பல்வேறு குகைகள் இருக்கின்றன. இந்த மலையில் ஏராளமான மூலிகை மரங்கள் உள்ளதால் அந்தக் காற்றினை நாம் சுவாசிப்பதால் புத்துணர்ச்சி ஏற்படுகிறது. அண்ணாமலையார் லிங்க வடிவில் இருப்பதாலும் அங்கு சித்தர்கள் உலா வருவதாலும் மலையை கிரிவலம் வரும் பக்தர்களின் பிரச்னைகளும் நோய்களும் நீங்கும் என்பது ஐதீகம்.

கார்த்திகை விரதம் இருப்பது எப்படி?

கார்த்திகை தீப விரதத்தை பரணி நட்சத்திர நாளில் துவங்க வேண்டும். பரணி நட்சத்திரத்தன்று ஒருவேளை மட்டுமே உணவு உண்ணலாம். பக்கத்தில் உள்ள கோயிலுக்குச் சென்று விரதத்தைத் தொடங்கலாம். இரவு உபவாசம் இருக்க முடியாதவர்கள் பால், பழம் அரை வயிறு எடுத்துக் கொள்ளலாம். கார்த்திகைத் திருநாளில் அதிகாலை எழுந்து, நீராடி இறைவனை வணங்க வேண்டும். தெய்வத் துதிகளையும் பாமாலைகளையும் ஜபிக்க வேண்டும். காலையில் வீட்டை சுத்தப்படுத்திக் கொள்ளவேண்டும். பூஜையறையில் உள்ள தூசுகளையும் அழுக்குகளையும் அகற்றி, பூஜையறையின் விளக்குகளைத் தேய்த்து, அலம்பி வைத்துக்கொள்ளவேண்டும். மாலையில் வீட்டு வாசலில் மாவிலைத் தோரணம் கட்டி மாக்கோலமிட்டு, அகல் விளக்குகளில் எண்ணெய் விட்டு, திரிவைத்து விளக்கேற்றவேண்டும். மாலை திருவண்ணாமலை தீபம் ஏற்றியவுடன் நம் பூஜை அறையில் பூஜை முடித்து தீபாராதனை காட்டி விரதத்தை முடிக்க வேண்டும். ஆனால் அன்று அரிசி உணவு உண்ணக்கூடாது. பால், ஜவ்வரிசிக் கஞ்சி, பயத்தம்பருப்பு கஞ்சி, நிவேதனங்கள் சாப்பிடலாம்.

வீரவல்லாள மகாராஜா கோபுரம்

அண்ணாமலையார் கோயிலின் ராஜகோபுரத்தை அடுத்து அமைந்திருப்பது வீரவல்லாள மகாராஜா கோபுரம். இந்த கோபுரம் கி.பி.1328ல் துவங்கப்பட்டு, கி.பி.1331ம் ஆண்டு உருவானது. வீரவல்லாள மகாராஜா திருவண்ணாமலையில் வித்திட்ட கோபுரப் பணிகளே, பின்னாளில் வந்த மன்னர்களால் முன்னெடுக்கப்பட்டது. ஹொய்சால வம்சத்தின் பத்தாம் தலைமுறையில் ஆட்சிப் பொறுப்பேற்ற மன்னரே வீரவல்லாள மகாராஜா. கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் ஹொய்சாலத்தை ஆண்ட வீரவல்லாள, நேர்மையாளன், மாவீரன், மக்களை நேசித்தவர், மக்களால் நேசிக்கப்பட்டவர். வீரவல்லாள மாவீரனென்பதை, சிக்மகளூர் கல்வெட்டு, “மகாராஜாதி ராஜன், கண்ட பேரண்ட கண்ட பிரசண்டன்” என சமஸ்கிருதத்தில் மெய்கீர்த்தியாகப் பாடுகிறது.

திருவண்ணாமலைக்கு வந்தவர். (அன்று திருவண்ணாமலையின் பெயர் அருண சமுத்திரம்). வந்த இடத்தில், தான் கண்டுகொண்ட அண்ணாமலையாரிடம் மயங்கி, கிறங்கி, தான் ஆண்ட காலம் முழுமைக்கும், அண்ணாமலையாருக்கு அருந்தொண்டுகள் ஆற்றியவர். அண்ணாமலையாரே மனமுருகி இவரின் மகனாக வந்தார் என்பது வழிவழியாக வந்த புராண வரலாறாகும். ஒவ்வொரு வருடமும், மாசி மகத்தன்று,திருவண்ணாமலையிலிருந்து புறப்பட்டு, ஐந்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள பள்ளிகொண்டாப்பட்டு என்கிற கிராமத்தில், துரிஞ்சல் ஆற்றங்கரைக்கு வரும் அண்ணாமலையார், வீரவல்லாளனுக்கு திதி கொடுக்கிறார். திருவண்ணாமலை போகும்போது, கிழக்கு ராஜகோபுரத்தின் இடப்பக்கம் மூன்றடி உயரத்தில், கைகளைக் கூப்பியபடி நிற்கும் அந்தப் பேரரசனையும் தரிசனம் செய்யுங்கள்.

The post அண்ணாமலையாருக்கு அரோகரா… appeared first on Dinakaran.

Tags : Agni ,
× RELATED திருவண்ணாமலை தீபத்திருவிழாவுக்கு 4,089 சிறப்பு பஸ்கள், 22 ரயில்கள்