×

கிரிவலம் : இஷ்டங்களை ஈடேற்றும் அஷ்ட லிங்கங்கள்

அண்ணாமலையார் திருக்கோயிலின் ஏழாம் பிராகாரமாக அமைந்திருப்பது கிரிவலப் பாதை. அந்த வழியே, எட்டு திசைகளிலும் அருள் பரப்புகின்றன, அஷ்ட லிங்கங்கள். அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சிறப்பு பெற்றுள்ளன.மண்ணுக்கும் விண்ணுக்கும் ஓங்கி உயர்ந்து, ஜோதி வடிவாக நின்ற பரம்பொருள், சாந்த வடிவாகி சுயம்பு லிங்கமானதே திருவருணை தீபமலை. நாம் ஏற்றும் தீபங்கள் இல்லத்தின் இருள் நீக்கும்; அருணை திருநகரில் அருள்பாலிக்கும் அண்ணாமலை மீது ஏற்றும் மகா தீபம் உலகோர் அனைவரது உள்ளத்து இருள் நீக்கும். வாழ்க்கையின் அடிநாதம் எது? ஏன் வாழ்கிறோம்? எதற்காக இந்த வாழ்க்கை? என்னால் பார்க்கப்படும் உலகம் என்பது என்ன என்று சற்றே ஆழமாக கொண்டு செல்லும் தலம் இது. வாழ்க்கையைப்பற்றி பலநூறு முறை பல்வேறு நபர்களால் தொடுக்கப்பட்ட வினாவிற்கு தட்டையான பதில்களும் கொடுக்கப்பட்டுக் கொண்டே வருகின்றன. ஆனால், வாழ்க்கையை யார் வாழ விரும்புகிறார். வாழ்க்கையை பற்றி யார் வினா தொடுக்கிறார்? ஏன் இவர் வாழ்க்கையை வாழ வேண்டுமென்று விரும்புகிறார்? அப்படி விரும்பும் இந்த நபர் யார் என்பதன் ஊடாக பல்வேறு கேள்விகளை தோற்றுவித்து பதில்களை அளித்து பின்னர் அவை இரண்டையும் ஒரு சேர எரித்துவிடும் ஞானமலை இது.

ஏனெனில், பிரமாண்ட புராணம் கூறும் அருணாசல வலத்தையே மீண்டும் பகவான் ரமண மஹரிஷி நடத்திக் காட்டினார்கள். அதைத் தொடர்ந்து பகவான் யோகிராம்சுரத்குமார் வரையில் எண்ணற்ற மகான்கள் அருணாசலத்தின் அண்மையில் வாழ்ந்திருக்கின்றனர்.பூலோகத்தின் முதல் லிங்கமும் இதுவே. லிங்கம் எனும் சொல்லின் பொருளே இந்த மலைதான். லிங்கம் எனும் பொருள் உணர்த்தும் சகல லட்சணங்களும் இந்த மலைக்குப் பொருந்தும். லிங்கம் எனும் சொல்லும், லிங்க வடிவில் ஈசன் உதித்ததும், பிரபஞ்சத்தின் முதல் லிங்கமும் இதுவேயாகும். அருணாசலம் என்பது ஞானக் கனல். அறிந்தும் அறியாமலும், மகிமையை உணர்ந்தும் உணராமலும், போக வாழ்க்கையையே வேண்டிக்கொண்டு வந்து வலம் வந்தாலும், பரவாயில்லை விளையாட்டாகவே இதை வலம் வந்தாலும் சரிதான், அவர்கள் தன்னை அறிதல் என்கிற உச்சபட்சமான விஷயத்தை அறிந்து கொள்வார்கள். இதைத்தவிர இகலோக வாழ்வில் நம்முடைய வாழ்விற்குத்தேவையான அனைத்து தேவைகளையும் ஈடேற்றும் தலமும் இதுவே. மோட்சம் என்கிற ஜீவன் முக்தி நிலையையே அளிக்கும்போது சாதாரண லௌகீக வாழ்க்கைக்கு உண்டானதை அளிக்காதா என்ன?
அருணாசலம் எனும் வார்த்தையே மகாவாக்கியம். அந்த நாமமே அகத்தையே அதாவது அகந்தையை வேரோடு அறுக்கவல்லது. அதற்கு இங்கு வாழும், இனி வரப்போகும் ஞானிகளே சாட்சியாகும். எனவே, அருணாசல மலையின் மகிமையை தெரிந்து கொண்டு வலம் வருதல் என்பது சிரத்தையை அதிகமாக்கும்.

‘‘அருணாசலத்தை கிரிவலம் வருவதற்கும், தியானம் முதலிய ஆன்மிக சாதனைகளை மேற்கொண்டு செய்வதற்கும் ஏதேனும் தொடர்புண்டா.’’ ‘‘தியானத்தின்போது உங்களுக்குள் ஏற்படும் போராட்டங்கள் அதிகமானது. நீங்கள் கொஞ்சம் அயர்ந்தாலும் மனம் ஓரிடத்தில் நிற்காது ஓடுவதை கவனிப்பீர்கள். உங்களின் சொரூபத்தை நாடிய உங்களின் முயற்சியில் பல்வேறு அவஸ்தைகளை அனுபவித்திருப்பீர்கள். ஆனால், கிரிவலம் செய்யும்போது நாளாவட்டத்தில் பெரும் முயற்சியின்றியே உங்களின் மனம் அடங்குவதை உணருவீர்கள். அவ்வளவு ஏன், உலகாயதமான பிரார்த்தனைகளுக்குக் கூட கிரிவலம் வருவோர் போகப்போக மனம் பக்குவம்பெற்று வைராக்கியத்தையும், தன்னில் மூழ்கும் விவேகத்தையும் பெறுவார்கள். இது எப்படியெனில் ஈர விறகானது காய்ந்து காய்ந்து ஒருநாள் சட்டென்று பற்றிக் கொள்வதுபோல உலக வாசனைகளில் மிக அதிகமாக ஊறிய மனம் கிரி பிரதட்சணம் வரவர தானே தீப்பற்றி எரிகிறது. ஒருமுறை கிரிவலம் வருவதாலேயே மீண்டும் மீண்டும் அந்த மலை ஈர்த்து தன்னை மீண்டும் வரம் வலச் செய்யும் மகத்துவம் வாய்ந்தது.‘‘கிரி வலம் வருவது என்பது எதைக் குறிக்கிறது’’

‘‘உள்ளிருக்கும் ஆத்மாவான, சிவ பெருமானான, மகா சக்தியான, இந்த பிரபஞ்சம் மற்றும் அண்ட சராசரத்தின் மையமுமான அருணாசலத்தை வலம் வருவோம். வலம் வருதல் என்கிற விஷயம் இந்த தலத்தைப் பொறுத்த வரையில் கொஞ்சம் நுட்பமாக புரிந்து கொள்ள வேண்டும். எவ்வளவுக்கு எவ்வளவு இந்த பெருந் தலத்தைப்பற்றி புரிந்து கொள்கிறீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு உங்களிடத்தில் சிரத்தையும், சித்தத்தின் ஏகாக்கிரகமும், பக்தியும் அதிகமாகும். இந்த சிரத்தை அதிகமாக அதிகமாக மனம் நெகிழ்ந்து போகும். நான் என்கிற அகங்காரம் உருகத் தொடங்கும். மெல்ல மெல்ல அதன் ஆட்டமும் குறைந்து அடங்கிப்போய் அருணாசலத்தோடு கலக்கும். அப்போது உங்களின் உள்ளுக்குள்ளேயும், வெளியேயும் எங்கும் அருணாசல சிவ சொரூபம்தான். எனவே, இந்த பரமாத்ம வஸ்துவான கிரியுருவில் அமைந்துள்ள ஈசனை வலம் வாருங்கள். கிரிவலம் என்பது இனி சாதாரணமல்ல என்பதை புரிந்து கொண்டு அகங்காரமற்று மலையை வலம் வாருங்கள். மீதியை அந்த அருணாசல மலை பார்த்துக் கொள்ளும். அருணாசலம் காந்தம் போல கவர்ந்து இழுக்கிறது. காந்தத்தின் தன்மை என்ன? இரும்பை இழுத்துக் கொள்வது. பரமாத்ம சொரூபத்தின் தன்மை என்ன? ஜீவர்களை தன்னிடத்தே மீண்டும் சேர்த்துக் கொள்வதோடு மட்டுமல்லாது தானாகவே அவர்களை மாற்றிக் கொள்ளுதலும் ஆகும்.

அருணாசலம் எனும் பதத்தில் அருண என்றால் ஜோதிமயமானது என்று அர்த்தமாகும். அசலம் என்றால் மலை என்பதை அறிவீர்கள். ஜோதிமலை என்று சொல்லலாம். ஆனால், இன்னொரு தீர்க்கமான பொருளையும் காணலாம். அருண என்பதில் ருணம் என்றால் இப்பிறவி மற்றும் முற்பிறவிகளில் செய்யப்பட்ட கர்மக் குவியல்களாகும். இது மீண்டும் மீண்டும் அடுத்த பிறவிக்கான, அடுத்த உடலை தேர்ந்தெடுப்பதற்கான சூட்சுமமான வாசனைகளாகும். இது ஒருவிதத்தில் கடன். இது தீர்க்கப்பட வேண்டும். இதை மிக சூட்சுமமாக இந்த மலை முற்றிலுமாக ஒழித்து விடும். ஏனெனில், இந்த வாசனைத் தொகுதிகளே போலியாகும். அதாவது விருப்பு, வெறுப்பு போன்ற வாசனைகளின் கூட்டமேயாகும். கொடிய வினைகள் என்றே இந்த வாசனைகளை கூறலாம். இது மேலும் மேலும் அதிகமாகிக் கொண்டே செல்லும் இயல்புடையது. இது ஜீவனை பந்தத்தில் ஆழ்த்தி வைக்கும். மீண்டும் மீண்டும் இந்த உலகினில் தள்ளியபடியே இருக்கும். இப்படிப்பட்ட வினைகளின் விளைவாக நிகழும் பந்தத்தை அதாவது ருணத்தை இல்லாததாக்கும் என்பதே அருணாசலம் என்பதன் பொருளாகும்.
கிரிவலம் வருவோம் வாருங்கள்!

அருள் தரும் அஷ்டலிங்க சந்நதிகள் அனைத்தும், ஒரே வடிவில், ஒரே அளவில் அமைந்திருப்பது வியப்புக்குரிய காட்சியாகும். அதோடு, அஷ்ட லிங்க சந்நதிகளில் உள்ள நந்திகள், மலையை பார்த்தபடி நிலை கொண்டிருப்பது தெய்வீகச் சிறப்பு. ஆனால், கிரிவலப் பாதையில் அமைந்துள்ள சூரிய லிங்கம், சந்திர லிங்கம் சந்நதிகள் இரண்டும் அஷ்ட லிங்க சந்நதிகள் பட்டியலில் இடம் பெறுவதில்லை. அஷ்டதிக் பாலகர்களே இங்கு அஷ்ட லிங்கங்களாக உள்ளனர். இந்த அஷ்டதிக் பாலகர்களே எண் திசையையும் ஆளுகின்றனர். இவர்களின் ஆணைப்படிதான் எல்லா திக்குகளும் தத்தமது வேலையைச் செய்கின்றன. ஆனால், இத்தலத்தில் மட்டும் லிங்க ரூபத்தில் அருணாசலத்தை நோக்கி தவமிருக்கின்றனர். எண்கோண வடிவான தீபமலையில் மகாதீபம் ஏற்றும் இத்திருநாளில், அண்ணாமலையின் அஷ்ட திக்குகளிலும் அருள் பாலிக்கும் அஷ்ட லிங்கங்களை தரிசித்தபடி மலையை வலம் வருவது பிறவிப் பேறாகும்.

இந்திர லிங்கம்

அஷ்ட லிங்க தரிசனத்தின் தொடக்கம் இந்திர லிங்கம். அண்ணாமலையார் திருக்கோயில் ராஜகோபுரத்தில் இருந்து கிரிவலத்தைத் தொடங்கினால், மகா ரதம் நிலைக்கு எதிரில் இந்த சன்னதியைக் காணலாம். இந்திரன் வழிபட்ட சிறப்புக்குரியது இந்திர லிங்கம். ஐராவதம் எனும் யானையின் மூலம் பக்தர்கள் கேட்கும் வரங்களை அருள்கிறார் இந்திர தேவன். கையில் வஜ்ராயுதம் தாங்கியவராக காட்சி அருள்கிறார். ரிஷபம், துலாம் ராசிக்காரர்கள் இந்த இந்திர லிங்கத்தை வழிபட தோஷம் நீங்கி பெரும் பேறு அடையலாம்.

அக்னி லிங்கம்

அக்னி தீர்த்தம் அருகே அமைந்திருக்கிறது அக்னி லிங்கம். அக்னி லிங்கத்தை தரிசித்தால், அக்னி தீர்த்தத்தில் நீராடிய பலனைப் பெறலாம். பல யுகங்களாக அங்க பிரதட்சணமாக கிரிவலம் வந்து அண்ணாமலையாரின் அருள் வேண்டிய ருத்திர மூர்த்திகளின் திருமேனிகள், அக்னி தீர்த்தம் அருகேதான் குளிர்ந்தன. அந்த இடத்தில் சுயும்பு வடிவாக எழுந்தருளிய சிவலிங்க திருமேனியே அக்னி லிங்கமாகும். சிம்ம ராசிக்காரர்கள் இந்த அக்னி லிங்கத்தை வழிபட தோஷம் நீங்கி மேன்மை அடையலாம்.

எம லிங்கம்

விருப்பு, வெறுப்பு அற்றவன், நேரம், காலம் தவறாத உத்தமன், நீதி பிழறாதவன் – எமதர்மனை தவிர வேறு யாராக இருக்க முடியும்! மனிதர்கள் தங்கள் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப, இம்மைப் பலனையும், மறுமைப் பேற்றினையும் பெறுகின்றனர். எமதர்மராஜன் அங்கப் பிரதட்சணமாக கிரிவலம் சென்று சிவனை வழிபட்டபோது, ஓரிடத்தில் தாமரை மலர்ந்தது. அதிலிருந்து ஜோதிமயமாக தோன்றியதே எமலிங்கம். கிரிவலம் செல்லும் பக்தர்கள் எமலிங்கத்தையும், அண்ணாமலையார் கோயிலில் அம்மன் சந்நதி எதிரில் அமைந்துள்ள சித்திர குப்தன் சந்நதியையும் தரிசித்தல் நலம். விருச்சிக ராசிக்காரர்கள் இந்த யம லிங்கத்தை வழிபட தோஷம் நீங்கி ஞான பலம் பெறலாம்.

நிருதி லிங்கம்

கிரிவலப் பாதையில் அமைந்துள்ள 1008 புனித குளங்களில் ஒன்றான சோண தீர்த்தத்தில் நிருதி பகவான் புனித நீராடினார். அதையொட்டி, நிருதி லிங்கம் அமைந்துள்ளது. கிரிவடிவான சிவனை வலம் வந்து வழிபடுவதை நிருதீஸ்வரர் வழக்கமாக கொண்டிருந்தார். அப்போது, கிரிவல மலையின் தென்மேற்கு திசையில், ஒரு குழந்தையின் அழுகுரலும், பெண்ணின் சலங்கை ஓசையும் கேட்டன. அந்த இடத்தை நோக்கி நிருதீஸ்வரர் சென்றார். அவர் எதிரில் பிரதிரூபமாக தோன்றியதுதான் நிருதி லிங்கம். குழந்தை பாக்கியம் வேண்டுவோர் நிருதி லிங்கத்தை வழிபட்டால் பலனுண்டு. மேஷ ராசிக்காரர்கள் இந்த நிருதி லிங்கத்தை வழிபட தோஷம் நீங்கி சீரிய வாழ்வு பெறலாம்.

வருண லிங்கம்

நீரின்றி அமையாது உலகு. நீருக்கு அதிபதியான வருண பகவான், அக்னி வடிவான அண்ணாமலையை முழங்கால் பிரதட்சணமாகவும், ஒற்றைக்கால் பிரதட்ணமாகவும் கிரிவலம் வந்து வழிபட்டார். அப்போது, கிரிவலப் பதையின் ஒரு இடத்தில் வானம் தொடும் அளவுக்கு நீரூற்று வளர்ந்தது. அந்த புனித நீரை உடலில் ஏற்று அண்ணாமலையை மெய்மறந்து வணங்கினார் வருணன். விழி திறந்தபோது, எதிரில் ஒளிமயமான வடிவில் சிவபெருமான், வருண லிங்கமாக அருள்பாலித்தார். மகரம், கும்ப ராசிக்காரர்கள் இந்த வருண லிங்கத்தை வழிபட தோஷம் நீங்கி வளம் செழிக்க வாழலாம்.

வாயு லிங்கம்

ஒன்பது துவாரங்கள் நிறைந்த உடலுக்குள், உள்ளிருந்து உயிர்விக்கும் ஆற்றல் ஒருதுளி மூச்சுக் காற்றுக்குத்தான் உண்டு. உயிர் காற்றாய் உள்ளிருந்து மூச்சுக் காற்றை இயக்குவது இறைவன் திருவருள்தான் என்பதை வாயு லிங்கத்தை தரிசிக்கும் போது உணரலாம். மூச்சை அடக்கி வாயு பகவான் கிரிவலம் சென்றார். அப்போது, ஆதி அண்ணாமலை அருகே தெய்வீக நறுமணம் வீசியது. அதுவரை மூச்சை நிறுத்தி வலம் வந்த வாயு பகவான் நிலை தடுமாறினார். அந்த வாசம், அடக்கிய மூச்சை வெளியிட வைத்து இயல்பான சுவாசத்துக்கு வழி வகுத்தது. அங்கு, பஞ்ச க்ருத்திகா மலர்களின் நடுவே சுயம்புவாக லிங்க வடிவில் சிவன் காட்சியளித்த சந்நதியே வாயு லிங்கம். கடக ராசிக்காரர்கள் இந்த வாயு லிங்கத்தை வழிபட தோஷம் நீங்கி, நலன் நிலைக்க வாழலாம்.

குபேர லிங்கம்

செல்வங்களுக்கு அதிபதி குபேரன். ஆண்டியான சிவனின் அருள் வேண்டி கிரிவலம் சென்று வழிபட்டார். அப்போது, விஷ்ணுவும், லட்சுமியும் சேர்ந்து அண்ணாமலையாரை வழிபடும் அரிய காட்சி குபேரனுக்குக் கிடைத்தது. அந்த இடத்தில் சுயம்புவாக தோண்றியதே குபேர லிங்கம். ஆண்டியையும் அரசனாக்கும்,
குபேர லிங்க தரிசனம். தனுசு, மீன ராசிக்காரர்கள் இந்த குபேர லிங்கத்தை வழிபட தோஷம் நீங்கி நல்வளங்கள் பெறலாம்.

ஈசான்ய லிங்கம்

நாமெல்லாம் சவம், அவன் ஒருவனே சிவம். மெய்யெல்லாம் சாம்பல் பூசி, மயானம் காக்கும் ஈசன், நிலையற்ற வாழ்வை உணர்த்துவதற்காக எழுந்தருளிய தோற்றமே ஈசான்ய லிங்கம். கண்களை மூடியபடி ருத்திர முனிவர் கிரிவலம் சென்றார். அப்போது, ஈசான்ய மூலையில் அழுகுரல் கேட்டது. அங்கு சென்றபோது சுயம்புவாக லிங்கம் காட்சியளித்து. அதிகார நந்நீஸ்வரர் அண்ணாமலையாரை வணங்கிய இடமும் இதுவே. கிரிவலம் செல்லும் பக்தர்கள் நிறைவாக இந்த லிங்கத்தை தரிசிக்கலாம். உலகியல் பொருள் அல்ல, சிவ அருளே நிலையானது என்பதையும், மெய், மெய்யல்ல என்பதையும் உணர்த்தும் இடமே ஈசான்ய லிங்கம். மிதுனம், கன்னி ராசிக்காரர்கள் இந்த ஈசானிய லிங்கத்தை வழிபட தோஷம் நீங்கி பரிபூரண இறையருள் கிடைக்கப் பெறலாம். இன்ன ராசிக்காரர்கள் என்று இல்லாமல், கிரிவலம் வரும் அனைத்து பக்தர்களும், இந்த எட்டு லிங்கங்களையும் மனதார வழிபட, அரன் அருளால், அகிலம் சிறக்க வாழ்வார்கள்.

The post கிரிவலம் : இஷ்டங்களை ஈடேற்றும் அஷ்ட லிங்கங்கள் appeared first on Dinakaran.

Tags : Annamalaiyar ,Kriwala ,earth ,
× RELATED நினைத்தாலே முக்தி தருபவர் அண்ணாமலையார் #Tiruvannamalai #annamalaiyartemple