கார்த்திகை தீபத்தை ஒட்டி நடைபெறும் ஆழ்வார் பிரமோற்சவ சிறப்புக் கட்டுரை
திருநீர்மலையிலே நின்றான் (நின்ற திருக்கோலம்) இருந்தான் (வீற்றிருந்த திருக்கோலம்) கிடந்தான் (சயனக்கோலம்) நடந்தான் என்ற நான்கு நிலைகளில் சேவை சாதிக்கின்ற பெருமாளைப்பாடும் போது திருமங்கையாழ்வார் வேறு நான்கு திவ்யதேசங்களையும் சேர்த்துப்பாடுகிறார். ‘‘நன்றாய புனல்சூழ் நறையூர் (நாச்சியார்கோயில்) திருவாலி (திருவாலி திருநகரி) திருக்குடந்தை திருக்கோவிலூர் என்ற நான்கு திருத்தலங்களைப் பாடுவார். இதிலே எம்பெருமானே குருவாக வந்து பஞ்சசம்ஸ்காரம் செய்த பெருமான் நறையூர்நின்ற நம்பி. அடுத்து ஆழ்வாருக்கு எட்டெழுத்து மந்திரத்தை உபதேசித்தவன் வயலாளி மணவாளன். ஆகையினால் முதல் இரண்டு திவ்யதேசங்களாக இவற்றினைப்பாடுகிறார்.
திருவாலிக்கும் திருநறையூருக்கும் குறிப்பிட்ட பாசுரங்களால் (பதிகங்களால்) ஆழ்வார் மங்களாசாசனம் செய்தாலும் மனம் நிறைவடையாமல் அவ்வப்போது வேறு திருத்தலப் பாசுரங்களிலும் இந்த திருத்தலத்து எம்பெருமானை நெஞ்சு மணக்க ஈரச்சொல்லால் பாடாமல் இருக்க மாட்டார். அதிலே, திருவாலி திருநகரி ஒன்றுக்கொன்று அருகில் இருக்கும் திவ்யதேசங்கள். இவ்விரண்டும் ஒரே திவ்யதேசமாகக் கொண்டாப் படுகிறது. இதில் திருமங்கை ஆழ்வார் எழுந்தருளியுள்ள திருநகரி திருத் தலத்தினை தரிசிப்போம்.
வேதங்களை தமிழில் வடித்த மாறன் சடகோபன் ஒருவிதமான அழகு என்றால், அந்த வேதங்களுக்கு ஆறங்கம் கூற அவதரித்த திருமங்கை ஆழ்வார் இன்னொருவிதமான அழகு. இரண்டு தலங்களும் திருநகரிதான். அது ஆழ்வார் திருநகரி (திருநெல்வேலி அருகில்). இது திருவாலி திருநகரி (சீர்காழிக்கு அருகில் உள்ளது) திருமங்கை ஆழ்வாரின் முற்பிறவி கிரேதா யுகம் அது. கர்த்தம ப்ரஜாபதி என்றொரு திருமால் பக்தர். பிரம்மாவின் புத்திரர். திருமாலை தரிசிக்கவும் அவரிடமிருந்து அருள் பெறவும் விரும்பினார். பூமிக்கு வந்தார். பில்வாரண்ய தலமான திருநகரிக்கு வந்து பொய்கைக்கரையில் தவமியற்றி வந்தார். இதே சமயம். ஓர் ஊடல் காரணமாக பெரிய பிராட்டியான மகாலட்சுமி பெருமானைப் பிரிந்து இதே தலத்தின் பொய்கையில் உள்ள ஓர் தாமரைப்பூவில் அமர்ந்து தவமியற்றி வந்தாள்.
அந்தமில் பேரின்பப் பெருவீடாகிய வைகுந்தம் பொலிவிழந்தது. எம்பெருமான் பிராட்டியைத்தேடி இத்தலத்துக்கு வருகிறார். தாமரைப் பொய்கையை அடைந்து பிராட்டிக்கு உகப்பானதாமரை மலர்களை நோக்குகிறார். திங்களும் ஆதித்தியனும் சேர்ந்து எழுந்தாற்போல் என்று கோதை பாடியபடி சந்திர சூரியர்களை தமது கண்களில் வைத்துள்ள எம்பெருமான் தமது வலது கண்ணை மூடினார். வலது கண் சூரியன். சூரியக்கதிர்கள் படாமல் தாமரைகள் மூடிக்கொண்டன. ஒரே ஒரு தாமரை மட்டும் மலர்ந்தே இருந்தது. இந்தப் பூவில் தான் பிராட்டி இருக்க வேண்டும் எனக் கருதி எம்பெருமான் அருகில் சென்று அந்த தாமரை மலரைத் தழுவிக் கொள்கிறார்.
பெருமானும் பிராட்டியும் சேர்ந்திருக்கும் இந்த அற்புதமான சேர்த்தியை நழுவவிடுவாரா கர்த்தம பிரஜாபதி. கர்த்தம பிரஜாபதி பகவானை பலவாறு துதிக்கிறார். அப்போது பெருமான் ‘‘பிரம புத்திரரே, உமக்கு ஏற்கனவே நான்கு பிறவி எடுத்தாகவேண்டிய சாபம் இருக்கிறது. இந்த கிரேதா யுகத்தில், கர்த்தம பிரஜாபதியாக பிறந்த நீர் அடுத்தயுகத்தில் உபரி சர வஸு என்னும் மன்னனாகவும் அடுத்து வைர மேயன் என்னும் மன்னனாகவும் கலியுகத்தில் நீலன் என்ற பெயருடனும் பிறப்பீர். நான்காவது பிறவியின் முடிவில் மோட்சம் என்னும் பேரின்பப் பெரு வீட்டை அடையலாம் என்று கூறினார்.
கர்த்தம பிரஜாபதியும், ‘‘அப்படியானால் இங்கே தம்பதி சமேதராய் காட்சியளித்ததைப் போல எட்டெழுத்து விமானத்தின் கீழ் என்றும் எப்போதும் எல்லோருக்கும் காட்சியளிக்க வேண்டும்’’ என்று வேண்டிக் கொண்டார். எம்பெருமானும் இசைந்து யுகங்கள் தோறும் இங்கே காட்சியளித்து வருகிறார். லட்சுமியான திருமகளை ஆலிங்கனம் செய்ததால் இந்தத்தலம் ஸ்ரீபுரி என்றும் திருநகரி என்றும் வழங்கலாயிற்று. திருநகரியின் சுருக்கமான தலவரலாறு இதுதான்.
வடரங்கம்
திருக்கோயில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. கோயிலுக்கு எதிரில் அகன்ற சந்நதி வீதி. ஏழெட்டு அல்லது பத்து வீடுகள் இருக்கலாம். இந்தத் தெருவில், வீதியின் கோடியில் திருத்தேர். பக்கத்தில் ஆஞ்சநேயர் சந்நதி. வரப்பிரசாதி இவர். இவர் சந்நதிக்கு இருபக்கமும் பெருமாள் திருத்தேரும் ஆழ்வார் திருத்தேரும் காணலாம். ஏழு பிரகாரங்களோடு கூடிய திருவரங்கத்தில் வாசம் செய்த திருவரங்கன், பெரிய பிராட்டியாரோடு கல்யாண கோலத்துடன் எழுந்தருளி ஆழ்வாருக்கு இத்திருக்கோயிலில் கல்யாணரங்கனாக சேவை சாதிப்பதால் இத்திருத்தலத்தை வடரங்கம் என்று சொல்வதுண்டு.
ஆலய அமைப்பு
கோயிலின் ராஜகோபுரம் ஏழு நிலைகளைக் கொண்டு காட்சியளிக்கிறது. இந்த ராஜகோபுரம் பலகாரி பரகால ஜீயர் நியமனத்தால் கட்டப்பட்டது என அறிகிறோம். ராஜகோபுரத்தின் உள்ளே நுழைந்து சென்றால் உடையவர் சந்நதி முகப்பில் இருக்கிறது. இதன் வடக்குப்பக்கம் ஆண்டாள் சந்நதி. தெற்குப் பக்கம் அமிர்தவல்லித் தாயார் சந்நதி. இந்தப் பிரகாரத்தின் கீழ்பக்கம் தலவிருட்சம் தரிசிக்கலாம்.
வலம் வந்து உள்ளே நுழைவோம். மூன்றாவதாக ஓர் கோபுரம். மூன்று நிலை கோபுரம் இது. இதுவும் ஸ்ரீபலகாரி பரகால ஜீயரால் கட்டப்பட்டது. இதற்குச் சான்றாக இவர்திருவுருவமும் தரிசிக்கலாம். இந்தக் கோபுரத்தில் நுழைந்து வடப்பக்கம் திரும்பினால் ஓர் பெரிய மண்டபம் காண்போம். பரமபத நாதன் தொடங்கி ஆழ்வார் ஆசார்யர்களின் மூர்த்தங்களை இங்கே தரிசிக்கலாம்.
பூதேவி, ஸ்ரீதேவி, நீளாதேவி ஆகிய மூன்று தேவிமார்களுடன் பரமபத நாதனாகிய ஸ்ரீமந் நாராயணனின் அற்புதக் கோலம் கண்டு வணங்கலாம். காளியநர்த்தனக் கண்ணனின் அதி அற்புத அழகில் மனம் மயங்கலாம். மண்டபத்தின் மேற்குப் பக்கத்தில்தான் தங்கத்தால் ஆன திருமங்கை மன்னனின் ஆடல்மா என்ற குதிரைவாகனம் உள்ளது. இதில்தான் பங்குனி வேடுபறி உற்சவத்தில் ஆழ்வார் எழுந்தருளுகிறார். இந்த மண்டபத்தின் வடபுறம் ஹிரண்யனை வதம் செய்யும் கோலத்தில் ஹிரண்யநரசிம்மன் எழுந்தருளியிருக்கிறார். பொதுவாக திருவாலி திருநகரியைச் சுற்றி பஞ்சநரசிம்ம ஷேத்திரங்களைச் சொல்வார்கள்.
1. திருக்குறையலூர் – உக்கிரநரசிம்மன்,
2. மங்கைமடம் – வீரநரசிம்மன்,
3. திருநகரி – யோகநரசிம்மன்,
4. திருநகரி – ஹிரண்யநரசிம்மன்
5. திருவாலி – லட்சுமிநரசிம்மன்.
இப்போது நாம் பார்க்கும் ஹிரண்யநரசிம்மர், உக்கிரவடிவம் கொண்டவர். நரசிம்ம ஜெயந்தியன்று விசேஷமான ஆராதனம் இவருக்கு உண்டு. இதன் கிழக்குப் பிரகாரத்தில்தான் கீழ்த்திசை நோக்கியவண்ணம் தலப் பெருமானான யோகநரசிம்மர் எழுந்தருளியிருக்கிறார். இந்த நரசிம்மர் மிகுந்த வரப்பிரசாதி. இவருக்கு அவ்வப்போது விசேஷ ஆராதனையும் திருமஞ்சனமும் நடைபெறுகிறது. இந்த சந்நதிக்கு வடக்கே ஓர்கிணறு இருக்கிறது.
அர்த்த மண்டபமும் கருவறை காட்சியும்
தெற்குப்புறம் திருமங்கையாழ்வாருக்கு தனி துவஜஸ்தம்பம் உள்ளது. சேலம் பிரபல ஜவுளி வியாபாரியான ஸ்ரீ எம்.எஸ்.ராமசாமி அவர்கள் திருமங்கையாழ்வார் மீது அதிக பக்தி உள்ளவர். இவர் இந்த துவ ஜஸ்தம்பம் நிறுவ பேருதவி புரிந்திருக்கிறார். இந்தச் சுற்றினை வலம் வந்து திருமங்கையாழ்வார் எழுந்தருளியிருக்கும் சந்நதிக்குச் செல்லலாம். இதற்கு உண்ணாழிச்சுற்று என்கிறார்கள். அதாவது உள்சுற்று என்று பொருள். நல்ல உயரம் படிகளை ஏறி உள்ளே நுழைவோம்.
சின்ன குன்றின் மீது இருப்பது போன்ற தோற்றத்தில் சந்நதி சற்று உயரமான இடத்தில் இருக்கிறது. படிகள் ஏறி உள்ளே சென்றதும் இடது பக்கத்தில் தென்திசை நோக்கியவாறு (திருநறையூர் திருவரங்கம் சேவித்தவாறு) இந்தத் திருத்தலத்தின் மிகப் பெரும் தனிப் பெருமைக்குக் காரணமான திருமங்கையாழ்வாரை சேவிக்கலாம். ஆழ்வார்கள் பதின்மரில் கடைசி ஆழ்வார் இவர். சோழனின் ஆளுகைக்கு உட்பட்ட சிறு பகுதிக்கு சேனைத் தலைவனாக இருந்தவர். எதிரிகளுக்குக் காலன் போல் விளங்கியவர் என்பதால் பரகாலன் என்ற பெயரும் இவருக்கு உண்டு.
ஆழ்வாராக மாற்றிய குமுதவல்லி
ஒரு நாள் இவர் திருக்குறையலூருக்கு பக்கத்து ஊராகிய திரு வெள்ளக்குளம் (இப்போது அண்ணன் கோயில் என்ற பெயருடன் உள்ள திருத்தலம்) என்ற ஊரின் குளக்கரையில் அழகான பெண்ணொருத்தியைக் காண்கிறார். அந்தப் பெண் இவர் சிந்தையைக் கவர அவளையே மணக்க விரும்பி அவள் தந்தையிடம் போய் பெண் கேட்கிறார். அந்தப் பெண்ணின் பெயர் குமுதவல்லி. அந்தப் பகுதிக்குத் தலைவனான நீலன் திடீரென்று எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வரும் தம்மைத்தேடி வந்து பெண் கேட்கவும் அவர் தம் மகளின் விருப்பத்தை அறிய வேண்டும் என்று கூறி குமுதவல்லியை அழைத்து விருப்பத்தைக் கேட்கிறார். குமுதவல்லி மிகச் சிறந்த திருமால் பக்தை. அவள் வைணவ நெறியில் பூரணமாக நிற்கும் ஓர் திருமால் அடியாருக்கே வாழ்க்கைப்படுவேன் என்று உறுதியாகச் சொல்லி விடுகிறாள்.
அவள் விதித்த நிபந்தனைப்படி பன்னிரண்டு திருமண் தரித்து உடனே ஓர் பாகவதனாக மாறி விடுகிறார். ததியாராதன கைங்கர்யம் எனப்படும் அடியார்களுக்கு அமுது படைக்கும் சேவையைச் செய்து வருகிறார். அன்னதானத்தில் சொர்ணமெல்லாம் கரைய சோழ மன்னனுக்கு கப்பம் கட்ட முடியாத நிலமை ஏற்படுகிறது. அவனோ இவரைச் சிறை பிடித்து விடுகிறான். இவர் கனவில் பெருமாள் தோன்றி காஞ்சிபுரத்திற்கு வருமாறு அழைக்கிறார். அதன்படி காஞ்சிபுரம் சென்று வேகவதி நதிக்கரையில் புதையலாகக் கிடைத்த பணத்தைக் கப்பம் கட்டி மறுபடியும் அன்னதானம் செய்து வருகிறார். மீண்டும் பொருளின்றிப் போகவே வழிப்பறியில் இறங்குகின்றார்.
வழிப்பறி
இவரைத் திருத்திப் பணி கொள்ள வேண்டிய நேரம் நெருங்கியது. பெருமாளும் பிராட்டியும் திருமணக் கோலத்தில் வந்து கொண்டிருக்கும் போது நீலன் பெரும் படையோடு சூழ்ந்து கொண்டு வழிப்பறி செய்கிறார். வழிப்பறி செய்த இடம் வேதராஜபுரம். (திருநகரிக்கு அருகாமையில் உள்ள ஒரு சிற்றூர்). கடைசியில் காலில் அணிந்திருந்த மோதிரத்தைக் கழற்றி எடுக்க முயல அது முடியாமல் போக வாளால் என்ன மந்திரம் போட்டாய்? என்று அதட்டிக் கேட்கிறார்.
எம்பெருமானும் புன்னகையோடு தன் பாதத்தைப் பிடித்து நிற்கும் நீலனின் தலையில் ஆதுரத்துடன் கை வைத்து ‘‘நம் கலியனோ?’’ என்று அழைத்து இந்த மந்திரம்தான் போட்டேன் என்று எட்டெழுத்து மந்திரத்தை ஓதுகிறார். நீலன் திருமங்கை ஆழ்வாராகிறார். இதுவரை பிறவியை வீணாகக் கழித்து விட்டோமே என்று மனம் வருந்தி பாடுகிறார்.
“வாடினேன் வாடி வருந்தினேன்
மனத்தால் பெருந்துயர் இடும்பையில் பிறந்து
கூடினேன் கூடி யிளையவர் தம்மோ
டவர்தரும் கலவியே கருதி
ஓடினேன் ஓடியுய்வதோர் பொருளால்
உணர்வெனும் பெரும்பதந் தெரிந்து
நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன்
நாராய ணாவென்னும் நாமம்’’
ஆழ்வாரின் அந்த மன நெகிழ்ச்சி நம்மையும் பற்றிக் கொள்கிறது. இதன்பிறகு ஆழ்வார் திவ்ய தேசங்களையெல்லாம் சென்று சேவித்து பக்தி வெள்ளமாக பாசுரங்களைப் பொழிகிறார். ஆழ்வாரை பூரண அலங்காரத் தோடு சேவிக்கும் போது ஒருவிதமான அழகையும், திருமஞ்சனம் முடிந்த கையோடு சேவிக்கும்போது இன்னொரு விதமான அழகையும் பார்க்கலாம். அருகில் குமுதவல்லி நாச்சியார்.
கையில் வேலோடு இருக்கும் போது ஒரு கம்பீரம். கூப்பிய கரங்களோடு நிற்கும் கனிவில் ஒரு விதமான விநயம். ஆழ்வாரை சேவித்தபின் நம் கண்களை சிரமப்பட்டே பெருமாள் பக்கம் திருப்ப வேண்டியிருக்கும். இங்கு இன்னும் ஒரு சிறப்பு திருமங்கை ஆழ்வார் பூஜை செய்த பெருமாளான சிந்தைக்கு இனியானையும் திருமங்கை ஆழ்வார் சந்நதியில் சேவிக்கலாம்.
பெருமாள் சந்நதி
பெருமாள் சந்நதிக்குள் இப்போது நுழைவோம் இருபக்கமும் கம்பீரமாக துவாரபாலகர்கள் மேலே பள்ளி கொண்டபெருமாள் மூலவர் பெயர் வேதராஜன் (வயலாளி மணவாளன்) பத்ராஸனத்தில் எழுந்தருளியிருக்கிறார். வீற்றிருந்த திருக்கோலம் மேற்கே திருமுகம் புன்னகை தவழும் முகப்பொலிவு அந்தச் சிறிய தீபவெளிச்சத்தில் நம் நெஞ்சைவிட்டு அகலாது நிற்கும். ஸ்ரீதேவி பூதேவி அருகில் இருக்கிறார்கள். அருகில் உற்சவமூர்த்தி கல்யாண ரங்கநாதன்.
மிகப்பெரி வரப்ரசாதி இந்தப் பெருமாள். இவருக்குப் பக்கத்தில் சந்தான கோபாலன், தீர்த்தபேரர் கண்ணனும் எழுந்தருளியிருக்கிறார்கள். பிறவிப் பிணி தீர்க்கும் அருமருந்தாக அணியாலி நகரில் எழுந்தருளியிருக்கின்ற பேரழகை நம் ஊனக்கண்களால் அவ்வளவு எளிதில் பருகிவிட முடியாது. இவரைச் சேவிக்கும்போது ஆழ்வாரின் அந்த அற்புதமான தமிழ்ப்பாமாலை நம் மனதில் ரீங்காரமிடும்,
‘‘கற்றார்பற்றறுக்கும் பிறவிப் பெருங்கடலே,
பற்றாவந்து அடியேன் பிறந்தேன்,
பிறந்த பின்னே வற்றா நீர்வயல் சூழ்
வயலாலியம்மானை பெற்றேன்
பெற்றதுவும் பிறவாமைப் பெற்றேனே’’
வயலாளி மணவாளன் பிராட்டியோடு மணக்கோலத்தில் காட்சி தரும் அழகை கண்டு ரசித்தபின் பிறந்த பலனை அடைகிறோம் என்பதில் எந்த ஐயமுமில்லை.எத்தனை நேரம் நின்று தரிசித்தாலும் கண்டோம் கண்ணுக்கினியன கண்டோம் என்கிறபடி நம் கால்கள் அந்த இடத்தைவிட்டு அசையாதபடி பெருமாளின் பேரழகுகட்டிப் போட்டுவிடும். கண்களில் புகுந்த அவன் நம் இதயத்தில் அல்லவா இடம் பிடித்து அமரநினைக்கின்றான். நம் இதயம் மட்டும் தூய்மையுடன் திருமங்கை ஆழ்வார் இதயம்போல் இருந்தால், பக்குவமாக வந்து அமர்ந்துவிடுவானே. அப்படி அன்றைக்கு ஆழ்வாரின் மனம் புகுந்து அவருடைய சிந்தனைக்கு இனியனாக அமர்வதவன்தானே இவன்.
“வந்து உனது அடியேன் மனம்புகுந்தாய்
புகுந்ததன் பின் வணங்கும்
என் சிந்தனைக்கு இனியாய் திருவே
என்னாருயிரே’’
– என்று அந்த அனுபவத்தை ஆழ்வார் பாடுகிறார்.
இறைவனை இதயத்திலே அமர்த்திவிட்டால் இனிமைக்கு என்ன குறைவு? ஆழ்வாரையும், அவர் இதயத்தில் அமர்ந்த கல்யாணரங்கநாதரையும் தரிசிக்க திருநகரிக்கு வாருங்கள்.
1. எப்படிச் செல்வது: சீர்காழி பூம்புகார் பாதையில் மங்கைமடம் இருக்கிறது. இங்கிருந்து திருநகரி 4கிமீ தூரம்தான். சீர்காழியிலிருந்து பேருந்து வசதி உண்டு. ஆட்டோ, கார் வசதி உண்டு.
2. தமிழ்நாடு அரசு இந்துசமயஅறநிலையத் துறையின் கட்டுப் பாட்டில் இயங்கும் இவ்வாலயம், சுமார் 1,600 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
3. பெருமாள்: ஸ்ரீ வேதராஜப் பெருமாள், தாயார்: அமிர்தவல்லித் தாயார், உற்சவர்: ஸ்ரீ கல்யாணரங்கநாதர், தீர்த்தம்: இலாக்ஷ புஷ்கரணி தீர்த்தம்.
4. நேரம்: காலை 7.30 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி: அருள்மிகு வேதராஜன் திருக்கோயில், திருநகரி – 609106.
5. விசேஷங்கள்
* சித்திரையில் வருடப்பிறப்பு உற்சவம், உடையவர் உற்சவம்.
* சித்திரை கடையேழுநாளும், வைகாசி முதல் ஏழு நாளும் கொண்ட கோடைவிழா.
* வைகாசியில் விசாகத்திருநாள்.
* ஆனியில் ஜேஷ்டாபிஷேகம்.
* ஆடியில் ஆண்டாளின் திருவாடிப்பூரம்.
* ஆவணியில் கிருஷ்ண ஜெயந்தி.
* புரட்டாசியில் பவித்ரோத்ஸவம், நவராத்திரி.
* ஐப்பசி மூலம் மணவாள மாமுனிகள் உற்சவம்.
* கார்த்திகையில் திருமங்கையாழ்வார் அவதார மஹோத்சவம்.
* கைசிக ஏகாதசி.
* மார்கழியில் அத்யயன உற்சவம், பகல் பத்து, ராப்பத்து திருநாள்.
* தை மாதத்தில் சங்கராந்தி, மட்டையடி உற்சவம், 5 நாட்கள் நடக்கும். எம்பார் உற்சவம், தை அமாவாசை 11 கருடசேவை.
* பங்குனியில் 10 நாட்கள் நடக்கும், பெருமாள் பிரம்மோற்சவம் (வேடுபறி).
முனைவர் ஸ்ரீராம்
The post திருமங்கை ஆழ்வார் பத்து நாள் உற்சவம் கண்டருளும் திருநகரி appeared first on Dinakaran.