ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்த 3 மணி நேரத்திற்கு பிறகு இளம்பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து சுகாதாரத்துறையினர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம், தென்னேரி அகரம் கிராமத்தை சேர்ந்தவர் நந்தகுமார் (30). தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஆர்த்தி (25) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணமானநிலையில் நந்தகுமாரின் மனைவி ஆர்த்தி கர்ப்பமாகியுள்ளார்.
கர்ப்பமடைந்த 3 மாதத்திலிருந்து 7 மாத காலமாக சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் தனியார் மருத்துவமனையில் கர்ப்பகால சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் ஆர்த்திக்கு பிரசவ வலி ஏற்படவே நந்தகுமார், தனது மனைவியை பிரசவத்திற்காக தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு, மருத்துவர்கள் பிரசவம் பார்த்ததில் நேற்று அதிகாலை மூன்றரை மணியளவில் ஆர்த்திக்கு சுக பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்த 3 மணி நேரத்துக்கு பிறகு ஆர்த்திக்கு அதிக நெஞ்சுவலி ஏற்பட்டதால், தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அவரை தண்டலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அப்போது, செல்லும் வழியிலேயே ஆர்த்தி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், ஆர்த்தியின் உயிரிழப்புக்கு தனியார் மருத்துவமனை மருத்துவர்களின் கவன குறைவே காரணம் எனக்கூறி உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், உயிரிழந்த ஆர்த்தியின் உடல் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து தனியார் மருத்துவமனை நிர்வாகத்திடம், சுகாதாரத்துறை அதிகாரிகள், சுங்குவார்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரசவத்திறகாக அனுமதிக்கப்பட்ட இளம்பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post ஸ்ரீபெரும்புதூர் அருகே சோகம் பிரசவத்திற்கு பின் இளம்பெண் உயிரிழப்பு: சுகாதாரத்துறையினர், போலீசார் விசாரணை appeared first on Dinakaran.