×

கூடுவாஞ்சேரியில் உயிர் பலி வாங்க காத்திருக்கும் பழுதடைந்த பேருந்து நிழற்குடை: பயணிகள் அச்சம்; நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரியில் பேருந்து நிறுத்தத்தில் பழுதடைந்து, பயணிகளின் உயிரை பலி வாங்க காத்திருக்கும் நிழற்குடையால் ஆபத்தான நிலை காணப்படுகிறது. அச்சம் அடைந்த பயணிகள், இதுகுறித்து கலெக்டர் நடவடிக்கை எடுக்கக்கோரி வலியுறுத்துகின்றனர். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையான கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலை ஓரத்தில் மின்வாரிய அலுவலகம் உள்ளது. அதன் அருகே ஒன்றிய அரசு சார்பில் கட்டப்பட்ட பேருந்து நிழற்குடை ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு அந்தரத்தில் தொங்குகிறது.

இதனால், பேருந்துக்கு வரும் பயணிகளின் உயிருக்கு ஆபத்தான நிலையிலே அங்கு காணப்படுகிறது. இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் கூறியும் கண்டு கொள்ளவில்லை என்றும், இதனால் பேருந்து பயணங்களுக்கு பேராபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது என்றும், எனவே இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி செல்லும் மார்க்கத்தில் கூடுவாஞ்சேரி மின்வாரிய அலுவலகம் உள்ளது. அதன் அருகே பல ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றிய அரசு சார்பில் பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டது. இதில் பயணிகளின் இருக்கை, மேற்கூரை, ஜன்னல் ஆகியவை அங்கங்கே உடைந்து விழுந்துவிட்டது. தற்போது, அந்த பேருந்து நிழற்குடை அந்தரத்தில் தொங்குகிறது. இதில் ஆபத்தை உணராமல் பயணிகள் வந்து உட்காருகின்றனர். மழைக்காலத்தில் வேறு வழியின்றி பயணிகள் அச்சத்துடன் வந்து நிற்கின்றனர். மேலும், பேருந்து நிழற்குடை முழுவதும் மதுபான பாட்டில்கள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், கழிவு பொருட்கள் தேங்கி கிடப்பதால் பேருந்து நிறுத்தம் முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது.

இதனால், பேருந்து பயணிகள் பல்வேறு சிரமத்துடன் அவதிப்பட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் ஆதரவற்றோர், பிச்சை எடுப்போர், மனநலம் பாதிக்கப்பட்டோர் என பல்வேறு தரப்பினர் அங்கேயே படுத்து தூங்குகின்றனர். இதில், பலத்த காற்று வீசினால் அந்தரத்தில் தொங்கும் பேருந்து நிழற்குடை தரைமட்டமாகிவிடும். இதனால், பயணிகளின் உயிருக்கு பேராபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. இந்த பேருந்து நிழற்குடையினை அகற்றிவிட்டு புதிய பேருந்து நிழற்குடை அமைக்க கோரி சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பலமுறை வலியுறுத்தியும் கண்டு கொள்ளவில்லை’ என்றனர். எனவே, இது குறித்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

The post கூடுவாஞ்சேரியில் உயிர் பலி வாங்க காத்திருக்கும் பழுதடைந்த பேருந்து நிழற்குடை: பயணிகள் அச்சம்; நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kuduvanchery ,Zillakudai ,Chennai-Tiruchi National Highway ,Guduvancheri ,Nizhalkudai ,Dinakaran ,
× RELATED கூடுவாஞ்சேரி பகுதிகளில்...