மாமல்லபுரம், டிச.12: மாமல்லபுரம் உலக புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வருகிறது. கடந்த, 7ம் நூற்றாண்டில் வாழ்ந்த பல்லவ மன்னர்கள் செதுக்கிய சிற்பங்களை கண்டு ரசிக்கவும், கடற்கரையில் பொழுதை போக்கவும், அரசு விடுமுறை நாட்கள், வார இறுதி நாட்களில் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். பேருந்து நிலையத்துக்கு அருகே உள்ள அர்ஜூனன் தபசு, வெண்ணெய் உருண்டை பாறை உள்ளிட்ட புராதன சின்னங்களை சுலபமாக பயணிகள் சுற்றிப் பார்க்கின்றனர். மேலும், பேருந்து நிலையத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் கடற்கரை கோயிலும், 1 கிமீ தொலைவில் ஐந்து ரதம் உள்ளதால், அங்கு நடந்து செல்லும் பயணிகள் சிரமப்பட்டனர்.
இந்த சிரமத்தை போக்கி அமர்ந்து ஓய்வெடுத்து செல்லும் வகையில், கடந்த 2009ம் ஆண்டு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் ₹60 லட்சம் மதிப்பீட்டில் பழைய சிற்பக் கல்லூரிக்கு எதிரே மரகத பூங்கா ஏற்படுத்தப்பட்டு, கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு மேடை, பயணிகள் ஓய்வு எடுக்க இருக்கைகள், மின் விளக்குகள், பசுமை புல்வெளி, நடைபாதை, மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வந்தது. மேலும், உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில், மரகத பூங்காவில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் ₹6 கோடி மதிப்பீட்டில், தனியார் பங்களிப்புடன் ₹10 லட்சம் மின் விளக்குகள் மூலம் விலங்குகள், வண்ண வண்ண ஒளிரும் பூக்கள், ஒளிரும் மரங்கள், போட்டோ மற்றும் செல்பி எடுக்கும் இடங்கள், செயற்கை நீரூற்று, மினி 3டி, 5டி சினிமா, ஒளிரும் நீர் பூங்கா மற்றும் பலதரப்பட்ட உணவு அரங்குகள் என 2.47 ஏக்கர் பரப்பளவில் அமைக்க அங்கு பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில், நேற்று காலை மரகத பூங்காவில் ஒளிரும் தோட்டம் அமைக்கும் பணியை சட்டமன்ற பேரவை அரசு உறுதி மொழிக் குழுவின் தலைவர் பண்ருட்டி எம்எல்ஏ வேல்முருகன் தலைமையில், சோழிங்கநல்லூர் எம்எல்ஏ அரவிந் ரமேஷ், சேலம் மேற்கு எம்எல்ஏ அருள், காரைக்குடி எம்எல்ஏ மாங்குடி, பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து, குழுவின் தலைவர் வேல்முருகன் வேலை செய்பவர்களிடம் ஆர்டர் காப்பியை கேட்டார். அதற்கு, வேலை செய்பவர்கள் திருதிருவென முழுத்தனர். ஆர்டர் காப்பி இல்லாமல் எப்படி வேலை செய்கிறீர்கள்.
மரகத பூங்கா 2.47 ஏக்கர் பரப்பளவு கொண்டது. 2 ரிசார்ட்டுகளை கட்டினால் கூட அரசுக்கு கணிசமான வருவாய் கிடைக்கும். தனியார் பங்களிப்புடன் ₹6 கோடி மதிப்பீட்டில் ஒளிரும் தோட்டம் அமைக்கும் பணியால், அரசுக்கு மாதம் வெறும் ₹2 லட்சம் வருமானம் கிடைக்கும் வகையில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக சுற்றுலாத் துறையினர் கூறுகிறீர்கள். மேலும், அரசுக்கு கிடைக்கும் வருமானம் மிகக் குறைவாக உள்ளது என அதிருப்தி தெரிவித்து, அதிகாரிகளை கடுமையாக கடிந்து கொண்டார். அப்போது, அதிகாரிகள் அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்து திருதிருவென முழித்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.
பின்னர், அரசு உறுதிமொழிக் குழுவின் தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ நிருபர்களிடம் கூறுகையில், 2.47 ஏக்கர் பரப்பளவில் மரகத பூங்காவில் ₹6 கோடி மதிப்பீட்டில், தனியார் பங்களிப்புடன் 10 லட்சம் மின்விளக்குகள் மூலம் ஒளிரும் தோட்டம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதன், மூலம் அரசுக்கு ₹2 லட்சம் வருவாய் கிடைக்கும் என சுற்றுலாத் துறையினர் கூறினர். இந்த, வருவாய் மிக குறைவு என இந்தக் குழு கருதுவதால், துறை செயலாளர் மற்றும் துறை இயக்குனர் மூலம் ஆய்வு கூட்டம் நடத்தி, அரசுக்கு அதிக வருவாய் வரும் வகையில், ஒப்பந்தத்தில் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். ஆய்வின்போது, சட்டமன்ற பேரவை செயலாளர் சீனிவாசன், மாவட்ட கலெக்டர் அருண்ராஜ், சட்டமன்ற இணை செயலாளர் கருணாநிதி, சார்பு செயலாளர் பியூலஜா, கூடுதல் ஆட்சியர் அனாமிகா ரமேஷ், சப்-கலெக்டர் நாராயண சர்மா, டிஆர்ஓ சுபா நந்தினி, சுற்றுலா அலுவலர் சக்திவேல், திருக்கழுக்குன்றம் தாசில்தார் ராதா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியத்திலடங்கிய முட்டுக்காடு படகு குழாமில் தமிழ்நாடு சட்டமன்ற உறுதி மொழிக்குழு ஆய்வு செய்த பின்னர், அங்கு நடைபெற்று முடிந்துள்ள மிதக்கும் படகு உணவகத்தை பார்வையிட்டனர். இதைத் தொடர்ந்து கோவளம் ஊராட்சியில் செயல்பட்டு வரும் நீலக்கொடி கடற்கரை (புளூ பீச்) வளாகத்தை எம்எல்ஏக்கள் குழு ஆய்வு செய்து அங்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு தேவையான கூடுதல் வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர்.
பின்னர், திருப்ேபாரூர் அரசு பொது மருத்துவமனையினை ஆய்வு செய்த சட்டமன்ற உறுப்பினர்கள் மருந்து, மாத்திரைகள் இருப்பு, உள்நோயாளிகள் கவனிப்பு, மருத்துவர்களின் பணியில் 24 மணி நேரமும் உள்ளனரா என்று ஆய்வு மேற்கொண்டனர். மருத்துவமனை வளாகத்தை தூய்மையாக வைத்திருக்குமாறு மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினர். இதையடுத்து, திருப்போரூர் அரசு மாணவர் விடுதிக்கு சென்ற சட்டமன்ற குழுவினர் அங்குள்ள மாணவர்களின் வருகைப்பதிவேடு, மளிகைப் பொருட்கள், தங்கும் இடம், குளியலறை, கழிப்பறை ஆகியவற்றை அங்கிருந்த விடுதிக் காப்பாளர் ரமணியிடம் கேட்டு ஆய்வு செய்தனர். ஆய்வின்போது திருப்போரூர் வட்டாட்சியர் வெங்கட்ரமணன், மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை வட்டாட்சியர் ஜீவிதா உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
The post மாமல்லபுரம் மரகத பூங்காவில் ₹6 கோடியில் நடைபெற்று வரும் ஒளிரும் தோட்டம் அமைக்கும் பணிகளை உறுதிமொழி குழு ஆய்வு appeared first on Dinakaran.