கோயில் யானைகளை 15 நாட்களுக்கு ஒருமுறை கால்நடை டாக்டர்கள் பரிசோதிக்கின்றனர்: வானதி சீனிவாசன் கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு பதில்

சென்னை: கோயில் யானைகளை 15 நாட்களுக்கு ஒருமுறை கால்நடை டாக்டர்கள் பரிசோதிக்கின்றனர் என்று வானதி சீனிவாசன் எம்எல்ஏவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலளித்தார். தமிழக சட்டப் பேரவையில் நேற்று துணை நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் (பாஜ) பேசுகையில், ‘‘கோயில் யானைகளுக்கு புத்துணர்வு முகாம்கள் நடத்தப்படாத காரணத்தினால், திருச்செந்தூரில் யானைப்பாகன் உயிரிழந்திருக்கிறார். நெல்லையப்பர் கோயிலில் கோயில் யானை உடல் நலமின்மையால் பாதிக்கப்பட்டிருப்பதால், அங்குள்ள பக்தர்கள் மிகுந்த மன வேதனையில் இருக்கிறார்கள். அதனால் கோயில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் நடத்தப்பட வேண்டும்’’ என்றார்.

அமைச்சர் பி.கே.சேகர்பாபு: 26 கோவில்களில் இருக்கின்ற 28 யானைகளுக்கு, இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகுதான் குளியல் தொட்டிகளும், 15 நாட்களுக்கு ஒருமுறை கால்நடை டாக்டர்களைக் கொண்டு பரிசோதனை செய்வதும், 3 மாதங்களுக்கு ஒருமுறை வனத் துறையினர் வருகைதந்து ஆய்வு செய்து, அந்த கோவில்களில் உள்ள யானைகளினுடைய நிலையைக் கண்டறிந்து, அதற்குண்டான சான்றிதழ்களும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. திருச்செந்தூரில் ஏற்பட்ட சம்பவம் அசாதாரணமான சம்பவம். அதற்குப் பிறகு அந்த யானைக்கு நானே கரும்பு போன்ற அனைத்து உணவுகளையும் கொடுத்துவிட்டு வந்திருக்கிறேன். அனைத்து யானைகளும் சுகமாக, நலமாக இருக்கின்றது என்றார்.

The post கோயில் யானைகளை 15 நாட்களுக்கு ஒருமுறை கால்நடை டாக்டர்கள் பரிசோதிக்கின்றனர்: வானதி சீனிவாசன் கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு பதில் appeared first on Dinakaran.

Related Stories: