கோபி : கோபி அருகே உள்ள கொடிவேரி அணையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.அருவி போல் கொட்டும் தண்ணீரில் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கொடிவேரி அணையானது பவானி ஆற்றின் குறுக்கே சுமார் 700 ஆண்டுக்கு முன்னர் கட்டப்பட்ட அணையாகும்.15 அடி உயரத்தில் இருந்து அருவி போல் தண்ணீர் கொட்டுவதாலும் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குளிக்க முடியும் என்பதாலும் ஈரோடு மாவட்டத்திலிருந்து மட்டுமின்றி கோவை, திருப்பூர், மதுரை, சேலம், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கர்நாடக மாநிலம் மைசூர், பெங்களுர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்தும் ஒவ்வொரு அரசு விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கொடிவேரி அணைக்கு வருகின்றனர்.
கோடை காலம் முடிவடைந்து குளிர் காலம் தொடங்கி உள்ள நிலையில், இரவில் கடுமையான பனி மற்றும் குளிராக இருந்தாலும் காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் அதிகளவிலேயே உள்ளது. இதனால் கொடிவேரி அணைக்கு காலை முதலே சுற்றுலா பயணிகள் வருகின்றனர். தற்போது ஈரோடு, சேலம், தர்மபுரி, நாமக்கல் உள்ளிட்டட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஐய்யப்ப பக்தர்களும், சபரி மலை செல்லும் வழியில் உள்ள கொடிவேரி அணைக்கு கூட்டம் கூட்டமாக வருகின்றனர். ஒருபுறம் குடும்பம் குடும்பமாகவும் மறுபுறம் ஐயப்ப பக்தர்களாலும் கொடிவேரி அணை களை கட்டி உள்ளது.
அதே நேரத்தில், விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வரும் நிலையில், கடத்தூர் மற்றும் பங்களாபுதூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது வழக்கம்.
ஆனால் நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடிவேரி அணைக்கு வந்தபோதும் பெயரளவிற்குகூட பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்படவில்லை. இனி வரும் நாட்களிலாவது கொடிவேரி அணையில் குறைந்த பட்ச பாதுகாப்பையாவது உறுதி செய்ய வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.