×

மனவளர்ச்சி குன்றிய மாணவியிடம் பாலியல் சீண்டல்: 2 மாணவர்கள் கைது; 4 சிறப்பு படை அமைக்கப்பட்டு விசாரணை தீவிரம்


சென்னை: மனவளர்ச்சி குன்றிய மாணவியை பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கிய கல்லூரி மாணவனும், பள்ளி மாணவனும் கைது செய்யப்பட்டனர். சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்த சதீஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), சிந்தாதிரிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், நான் மினி வேன் டிரைவர் மற்றும் முட்டை லோடு ஏற்றும் வேலை செய்து வருகிறேன். எனது மூத்த மகள் அண்ணாசாலையில் உள்ள மகளிர் கல்லூரி ஒன்றில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். எனது மகளுக்கு பிறந்தது முதல் மூளை வளர்ச்சி ‘ஐக்யூ 40 சதவீதம்’ உள்ளதால், சற்று மனவளர்ச்சி குன்றிய நிலையில் உள்ளார்.

இதனால் தினமும் வீட்டில் இருந்து ஆட்டோ மூலம் கல்லூரிக்கு சென்று வருவது வழக்கம். பள்ளி படிப்பை எனது மகள் 10ம் வகுப்பு வரை முகப்பேரில் உள்ள மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான பள்ளியில் படித்தார். பிறகு வீட்டில் இருந்த எனது மகள் 12ம் வகுப்பு தேர்வை தனித்தேர்வாக எழுதி வெற்றி பெற்றார். அதன் பிறகு மனநலம் குன்றியவர் சான்றிதழ் அடிப்படையில் தற்போது அண்ணாசாலையில் உள்ள மகளிர் கல்லூரியில் படித்து வருகிறார். எனது மனைவி மாரடைப்பு காரணமாக கடந்த 2022ம் ஆண்டு இறந்துவிட்டார். இருந்தாலும் எனது மகளை நான் எந்த குறையும் இன்றி வளர்த்து வருகிறேன்.

எனது மகளுக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. அவரிடம் கேட்டபோது, தன்னுடன் படிக்கும் தோழி ஒருவர் மூலம் பழக்கமான ஆண் நண்பர்கள் அடிக்கடி வெளியே அழைத்து சென்று வந்ததாக கூறினார். இதுகுறித்து அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். அதற்கு மகளிர் போலீசார் சம்பவம் நடந்த இடம் எழும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் எல்லையில் வருவதால் அங்கு புகார் அளிக்க கூறினர். அதன்படி நான் இங்கு புகார் அளித்துள்ளேன்.

எனவே எனது மனவளர்ச்சி குன்றிய மகளை ஏமாற்றி பாலியல் தொந்தரவு கொடுத்த நபர்கள் மற்றும் எனது மகளின் தோழி மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். அந்த புகாரின் படி காவல்துறை உயர் அதிகாரிகள் உத்தரவுப்படி எழும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் இன்ஸ்பெக்டர் கஜலட்சுமி மற்றும் அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மணிமேகலை ஆகியோர் கொண்ட குழு, பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியிடம் தனியாக 3 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.

அப்போது பாதிக்கப்பட்ட மாணவி, தன்னுடன் படித்து வரும் அரக்கோணத்தை சேர்ந்த தோழி மூலம் அறிமுகமான நண்பர்களுடன் பல இடங்களுக்கு சென்று ஒன்றாக இருந்து வந்ததாக கூறினார். மேலும், நண்பர்களுடன் ஒன்றாக இருந்தது எனக்கு தவறுதான் என்று தெரியாது என வெகுளித்தனமாக போலீசாரிடம் கூறியுள்ளார். அதை கேட்டு விசாரணை நடத்திய மகளிர் போலீசார் அதிர்ச்சியடைந்தனர். வயதுக்கு வந்த பெண் தனக்கு என்ன நடந்தது என்று கூட சரியாக தெரியாமல் ஆண் நண்பர்களுடன் பல இடங்களுக்கு சென்று வந்தது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், மனவளர்ச்சி குன்றிய மாணவியின் செல்போன் விவரங்களை மகளிர் போலீசார் குழு ஆய்வு செய்தனர். அதில், மாணவிடம் அடிக்கடி தொடர்பு கொண்ட நபர்கள் யார் யார் என்பது குறித்து பட்டியல் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது, திருவள்ளூர் மாவட்டம் அத்தி மஞ்சரிப்பேட்டையை சேர்ந்த சுரேஷ் (20) என்றும், இவர் சென்னையில் உள்ள கல்லூரியில் படித்தும் வருவது தெரியவந்தது. மேலும் சுரேஷ் நண்பரான அதே பகுதியை சேர்ந்த பள்ளி மாணவன் ஒருவன், மற்றும் கோயம்பேடு பகுதியை சிலர் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசியது தெரியவந்தது.

மேலும், மாணவியுடன் படிக்கும் சக தோழி தனது ஆண் நண்பர்களுடன் பாதிக்கப்பட்ட மாணவி பழக உடந்தையாக இருந்ததும் விசாரணையில் உறுதியானது. அதைத்தொடர்ந்து மனவளர்ச்சி குன்றிய மாணவியை பாலியல் தொந்தரவு செய்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் 8 பேர் மற்றும் தோழி என மொத்தம் 9 பேர் மீது எழும்பூர் அனைத்து மகளிர் போலீசார் 9 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கூறப்படும் திருவள்ளூரை சேர்ந்த நந்தனம் கல்லூரி மாணவன் சுரேஷ் மற்றும் அவரது நண்பரான பள்ளி சிறுவன் ஆகியோரை நேற்று முன்தினம் அதிரடியாக போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் அதிகளவில் கல்லூரி மாணவர்கள் சிக்கியுள்ளதால், அவர்களை உரிய ஆதாரங்களின் படி அனைத்து மகளிர் போலீசார் கைது செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட மாணவியை ஆண் நண்பர்களுக்கு அறிமுகம் செய்து தவறான செயலுக்கு முக்கிய பங்கு வகித்த அரக்கோணத்தை சேர்ந்த தோழியை கைது செய்ய போலீசார் முடிவு ெசய்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவி மனநலம் குன்றியவர் என்பதால் விசாரணை விபரங்களை வெளியில் கசிய விடாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று உயர் அதிகாரிகள் விசாரணை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

வழக்கு விசாரணையை விமர்சிக்க வேண்டாம்: இந்நிலையில் காவல்துறை நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: மனமுதிர்ச்சியற்ற கல்லூரி மாணவி ஒருவரின் தந்தை தனது மகளை உடன் படிக்கும் மாணவியும் வேறு சில ஆண் நண்பர்களும் தவறான முறையில் வழி நடத்துவதாகவும், அவர்களில் ஒரு ஆண் நண்பர் பாலியல் சீண்டலுக்கு முயற்சி செய்ததாகவும் அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகார் சிஎஸ்ஆராக ஆக பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தது.

இந்த விசாரணையில் சம்பந்தபட்ட பெண் தோழி மற்றும் சில ஆண் நண்பர்கள் விசாரிக்கப்பட்டனர். பாலியல் குற்றம் நடந்திருப்பதை உறுதி செய்தவுடன், டிச.6ம் தேதியன்று எழும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 9 சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு டிச.7ம் தேதி திருவள்ளுரைச் சேர்ந்த சுரேஷ் என்ற கல்லூரி மாணவரும் மற்றொரு பள்ளி மாணவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர் மன வளர்ச்சி குன்றியவராக இருப்பதால் புலன் விசாரணை செய்வது விசாரணை அதிகாரிக்கு சவாலாக இருக்கிறது.

இந்நிலையில் நான்கு சிறப்பு படைகள் அமைக்கப்பட்டு விசாரணை துரிதப்படுத்தப்பட்டிருக்கிறது. இவ்வழக்கை பொதுவெளியில் விமர்சிப்பது, சாட்சியங்களை கலைத்து புலன் விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்துவது மட்டுமில்லாமல், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கும் அவரது குடும்பத்திற்கும் மன உளைச்சலை ஏற்படுத்தும் என்பதால், இவ்வழக்கு விசாரணையை விமர்சிக்க வேண்டாம் என்று காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

* மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் சீண்டல் செய்தோம்: கைதான மாணவர்கள் வாக்குமூலம்
கைதான கல்லூரி மாணவன் சுரேஷ் மற்றும் பள்ளி மாணவன் அளித்த வாக்கு மூலம் குறித்து போலீசார் கூறியதாவது: மனவளர்ச்சி குன்றிய மாணவியின் தோழியுடன் கல்லூரி மாணவன் சுரேஷ் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமானவர். அந்த தோழி தான் சுரேசுக்கு மனவளர்ச்சி குன்றிய மாணவியை அறிமுகம் செய்து வைத்து அவரது செல்போன் எண்ணையும் வாங்கி கொடுத்துள்ளார். அதன்பிறகு சுரேஷ் அடிக்கடி மாணவிக்கு வாட்ஸ் அப் மூலம் குறுஞ்செய்திகள் அனுப்பி காதலிப்பாக தெரிவித்துள்ளார்.

அதை உண்மை என்று நம்பி அந்த மாணவி, சுரேஷிடம் அடிக்கடி மணிக்கணக்கில் பேசி வந்துள்ளார். பிறகு மாணவி கல்லூரிக்கு வந்ததும், கல்லூரியை கட் அடித்துவிட்டு தனது காதலன் சுரேசுடன் பைக்கில் வெளியே சென்று வந்துள்ளார். அப்போது மாணவி கேட்டதை எல்லாம் சுரேஷ் வாங்கி கொடுத்துள்ளார். மாணவிக்கு அதிகமாக சாக்லேட் பிடிக்கும் என்பதை தெரிந்து கொண்டு, சுரேஷ் அவருக்கு விலை உயர்ந்த சாக்லேட்டுகளை வாங்கி கொடுத்து, தனது செல்போனில் ஆபாச வீடியோக்களை காட்டி, அவருக்கு பாலியல் உணர்வுகளை தூண்டியுள்ளார்.

பிறகு மாணவியை வால்டாக்ஸ் சாலை மற்றும் பெரியமேடு பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் அறை எடுத்து மாணவியை கட்டாயப்படுத்தி அழைத்து சென்றதும் தெரியவந்தது. பிறகு நெருங்கிய நண்பர்களுடன் மாணவியை பேச வைத்து அவர்களுடன் நெருக்கமாக இருக்க ஏற்பாடுகளை செய்து கொடுத்துள்ளார் என மாணவர்கள் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

The post மனவளர்ச்சி குன்றிய மாணவியிடம் பாலியல் சீண்டல்: 2 மாணவர்கள் கைது; 4 சிறப்பு படை அமைக்கப்பட்டு விசாரணை தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Satish ,Ayanavaram ,All Women's Police Station ,Chindathiripet ,Dinakaran ,
× RELATED வங்கி மேலாளரை வெட்டிய முன்னாள் ஊழியர்