அப்படி ஒரு சூழல் இல்லை. அழுத்தம் கொடுத்து அதற்கு இணங்கும் நிலையிலும் நான் இல்லை. விஜய்யின் விக்கிரவாண்டி மாநாட்டுக்கு பிறகு எனது நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவித்துள்ள நிலையில், நானும், விஜய்யும் அரசியல் பேசாமல் நூல் வெளியீட்டு விழாவில் இருந்தால் கூட, அதை சுற்றி இருப்பவர்கள் அரசியலாக்குவார்கள். இதற்கென பலர் காத்து கிடக்கிறார்கள். அவர்களுக்கு தீனி போட நான் விரும்பவில்லை. நானும் அவரும் ஒரே மேடையில் நின்றால் அதை வைத்து இங்கே அரசியல் சூதாட்டம் ஆட விரும்புகிறவர்கள், தமிழக அரசியல் களத்தில் கலவரத்தை உருவாக்குவார்கள். குழப்பத்தை ஏற்படுத்துவார்கள். அதற்கு இடம் தர நான் விரும்பவில்லை என்பதை வெளிப்படையாக முன்னதாக விளக்கிச் சொல்லி விட்டேன். எனக்கு எந்த அழுத்தமும் கிடையாது.
சுதந்திரமாக எடுத்த முடிவு. தொலைநோக்கு பார்வையோடு எடுத்த முடிவு. தமிழக அரசியலின் எதிர்காலம் கருதி எடுத்த முடிவு. விடுதலைச்சிறுத்தைகள் அங்கம் வகிக்கிற கூட்டணியின் நலன் கருதி எடுத்த முடிவு. என்னை கட்டுப்படுத்தி இயக்குவதற்கு யாரும் முயற்சிக்கவில்லை. அதற்கான சூழலும் இல்லை. இதில் விசிக குறி வைக்கப்படுகிறது என்பதை விட திமுக கூட்டணியின் கட்டுக்கோப்பை சீர்குலைக்க வேண்டும் என்பதற்கான சதி நடக்கிறது. விசிக புதிதாக ஒரு கூட்டணியில் இடம்பெற வேண்டிய தேவை இல்லை. திமுக கூட்டணி கட்டுப்பாட்டை சிதறடிக்க வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகளுக்குள் உள்ள சதி திட்டம். தொடர்ந்து மூன்று பொதுத்தேர்தல்களில் திமுக தொடர் வெற்றி பெற்றுள்ளதால், வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறாதிருக்க இந்த கூட்டணியை சீர்குலைக்க வேண்டும் என்பதே அதிமுக, பாஜ ஆகியோரின் நோக்கம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
* ‘ஆதவ் அர்ஜூனா மீது விரைவில் நடவடிக்கை’
திருமாவளவன் கூறுகையில், ‘நாம் ஒரு கூட்டணியில் இருக்கும்போது அந்த கூட்டணிக்கு முரணாக பேசுவது நாகரீகமல்ல. கூட்டணியை விட்டு வெளியில் வந்து பேச வேண்டும் அல்லது கூட்டணி நலன் என்னவோ அதன் அடிப்படையில் இயங்க வேண்டும். கட்சி நலனுக்குத்தான் பேசுகிறேன் என்கிற தொணியில் ஆதவ் அர்ஜூனா பேசக்கூடாததை, பேசக்கூடாத இடத்தில் நின்று பேசுகிறார். ஆதவ் அர்ஜூனாவின் பேச்சு குறித்து கட்சியிலும், கட்சிக்கு அப்பாற்பட்டவர்கள், நிர்வாகிகள் என பலரும் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். நிர்வாகிகள் மட்டுமல்ல, நானே அந்த மனநிலையில் தான் இருக்கிறேன். அவரது அந்த உரையை நானே கேட்டேன். அவரது பேச்சு ஒரு காலச்சூழல் பொருத்தமில்லாத பேச்சு. அது கட்சியின் நலன், கட்சி அங்கம் வகிக்கும் கூட்டணி நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. எனவே தலைவர், பொதுச்செயலாளர் உள்ளடங்கிய உயர்நிலைக் குழு ஆலோசித்து, நடவடிக்கை எடுப்பது குறித்து இரண்டொரு நாளில் கட்டாயம் முடிவு அறிவிப்போம்’ என்றார்.
The post புதிய அணியில் சேர விசிகவிற்கு அவசியமில்லை திமுக தொடர் வெற்றி பெற்று வருவதால் கூட்டணியை சீர்குலைக்க அதிமுக, பாஜ சதி: திருமாவளவன் பேட்டி appeared first on Dinakaran.