நெல்லை: நாகர்கோவிலில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.3 கோடி மதிப்பிலான 2.7 கிலோ எடை கொண்ட அம்பர் கிரீசை விற்க முயன்ற 3 பேரை வனத்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். 20 வயதுக்கு மேற்பட்ட திமிங்கலங்கள் தங்கள் உடலில் உற்பத்தியாகும் மெழுகு போன்ற பொருளை வாய் வழியாக உமிழும். இதுவே அம்பர் கிரீஸ் எனக் கூறப்படுகிறது. இந்த அரிய வகை பொருளான அம்பர் கிரீஸ் கடலில் மிதக்கும் தன்மை கொண்டது. இவை துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் உயர்தர நறுமணப் பொருட்கள் தயாரிப்பதில் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. விலை உயர்ந்த மதுபானங்களின் வாசனைக்கு உயிரோட்டம் கொடுக்கும் மூலப்பொருளாகவும் பயன்படுகிறது.
மருத்துவத்துறையில் அம்பர் கிரீஸ் பால்வினை சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தரும் மருந்தாக விளங்குவதாகவும் கூறப்படுகிறது. இதனால் சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு கிலோ ரூ.1 கோடி ஆகும்.
இந்நிலையில் நெல்லை மாவட்டம் வி.கே.புரம் அருகே அகஸ்தியர்பட்டி ஸ்டேட் பாங்க் காலனியில் உள்ள வீட்டில் அம்பர்கிரீஸ் கட்டிகளை கடத்தி விற்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அந்த வீட்டில் அம்பர் கிரீஸ் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வீட்டில் இருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் செல்வம், சவரிதாசன், பரமசிவன் ஆகியோர் என்பது தெரிய வந்தது.
தொடர் விசாரணையில், நாகர்கோவிலில் இருந்து அம்பர் கிரீசை விலை கொடுத்து வாங்கி வந்துள்ளனர். அகஸ்தியர்பட்டியில் வாடகைக்கு வீடு பிடித்து இங்கிருந்து 3 பேரும் வாட்ஸ்அப் செயலி மூலம் விற்பனைக்காக பேரம் பேசி வந்துள்ளனர். இவர்களிடம் இருந்து 2.7 கிலோ எடை கொண்ட சுமார் ரூ.3 கோடி மதிப்புள்ள அம்பர்கிரீஸ் கட்டிகளையும், காகித பையில் இருந்த துகள்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் 3 பேரையும் கைது செய்த வனத்துறையினர், அம்பை குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன்பு ஆஜர்படுத்தி அம்பை சிறையில் அடைத்தனர்.
The post ரூ.3 கோடி அம்பர் கிரீஸ் பறிமுதல்: 3 பேர் அதிரடி கைது appeared first on Dinakaran.