வேளச்சேரி, டிச.8: சென்னையை அழகுபடுத்தும் விதமாக மாநகராட்சி சார்பில் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. குறிப்பாக, சிங்கார சென்னை 2.0 திட்டத்தின்படி சுற்றுலா பயணிகளை கவர புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் மெட்ரோ சிட்டியாக மாறும் வகையில் சென்னையின் அனைத்து இடங்களையும் மெட்ரோ ரயில் சேவையால் இணைக்க மெட்ரோ நிறுவனம் முடிவு செய்துள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முதல் குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் மெட்ரோ, சென்னையில் ஒரு தனித்தீவு என பல்வேறு திட்டங்கள் அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னையின் விமான நிலையத்தின் அருகில் திருவள்ளுவர் சிலையுடன் வணக்கம் சென்னை என புதிதாக செல்பி பாயிண்ட்டும் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னையின் பாலங்களில் ஓவியம் மற்றும் செடிகள் வைத்து பராமரிக்கப்படுகிறது. ஆங்காங்கே மெட்ரோ வேலைகள் நடந்து வந்தாலும் விரைவில் அந்த பணிகள் அனைத்தும் முடிந்து அனைத்தும் மக்களின் செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை மக்களை கவரும் வகையில் பல்வேறு இடங்களில் ஒருங்கிணைந்த புட் ஸ்ட்ரீட் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கத்திப்பாரா மேம்பாலத்துக்கு கீழ் அமைக்கப்பட்டுள்ள நகர சதுக்கம் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இங்கு, ஆயிரக்கணக்கான மக்கள் இரவில் குவிந்து வருகின்றனர். பராமரிப்பில்லாமல் கிடந்த பகுதியை மேம்படுத்தியதன் விளைவாக இரவில் ஒரு பரபரப்பான பகுதியாக மாற்றப்பட்டுள்ளது.
அந்த வகையில் சென்னையில் பல இடங்களை மாற்றுவதற்கான ஆயத்த பணிகள் சென்னை மாநகராட்சியால் நடந்து வருவது மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வரிசையில் தற்போது, வேளச்சேரி – பெருங்குடி பறக்கும் ரயில் நிலையங்களை இணைக்கும் சாலையை மேம்படுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. வேளச்சேரி – பெருங்குடி பறக்கும் ரயில் நிலையங்களை இணைக்கும் சாலை, பல ஆண்டாக முறையான பராமரிப்பின்றி காணப்பட்டது. ரயில்வே நிர்வாகம் கட்டுப்பாட்டில் இருந்த இந்த சாலையை சீரமைக்கும் வகையில், சென்னை மாநகராட்சி வசம் சமீபத்தில் ஒப்படைக்கப்பட்டது.
அதை தொடர்ந்து, இந்த இணைப்பு சாலையோரம், மழைநீர் சேமிக்கும் வகையில், மாநகராட்சி சார்பில் மிகப்பெரிய குளம் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வேளச்சேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ள பாதிப்பை தடுக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இந்த சாலையை பரபரப்பான வர்த்தக சாலையாக மாற்றவும் திட்டமிட்டுள்ளது. வேளச்சேரியில் இருந்து தரமணி 100 அடி சாலை வழியாக ராஜிவ்காந்தி சாலைக்கு தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் ஏற்படும் நெரிசலை குறைக்கும் வகையில் வேளச்சேரி – பெருங்குடி ரயில் நிலையங்கள் இடையிலான இந்த இணைப்பு அமைக்கப்பட்டது. போக்குவரத்து நெரிசல் மற்றும் நேரத்தை குறைக்கும் வகையில் இந்த சாலை உள்ளது.
மெட்ரோ ரயில் கட்டுமானத்தால் ஏற்படும் போக்குவரத்து மாற்றத்தின் காரணமாக தொந்தரவு இல்லாமல் பெருங்குடியை அடைய இது ஒரு மாற்று பாதையாகும் இந்த சாலையோர பகுதி முறையான பராமரிப்பின்றி புதர்மண்டி காணப்பட்டது. இதை தற்போது மாநகராட்சி கையகப்படுத்தி, அழகுபடுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, இந்த சாலையை சீரமைக்க விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க ஒரு ஆலோசகரை மாநகராட்சி நியமித்துள்ளது. அதன்படி, இந்த சாலையை ரூ.15 கோடி செலவில் கடைகளுடன் பரபரப்பான வீதியாக மாற்றப்பட உள்ளது.
இதனால், கடந்த 30 ஆண்டுகளாக கைவிடப்பட்டிருந்த பெருங்குடி – வேளச்சேரி பறக்கும் ரயில் நிலைய சாலை மற்றும் கடைகள், பசுமையான இடங்கள், நடைபாதைகள் என அண்ணாநகர் இரண்டாவது அவென்யூ வழியில் பரபரப்பான வர்த்தக சாலையாக மாற உள்ளது. இதற்காக பணிகள் முடிவடைந்து, மறுவடிவமைக்கப்படும் போது, இந்த சாலை சென்னை மாநகரின் அடுத்த பெரிய இரவு வாழ்க்கை இடமாக மாறும் என்றும், இந்த திட்டம் வரும் பிப்ரவரி மாதத்துக்குள் தொடங்க திட்டமிட்டுள்ளோம் என்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை மாநகராட்சியின் இந்த நடவடிக்கை அப்பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
படகு சவாரி
ரயில் பாதை ஓரத்தில் நடைபாதையில் தலா 50 சதுர அடியில் 80 கடைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் மாலை நேரங்களில் சாலை பிரகாசமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும். மேலும், 50 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள கல்லுக்குட்டை ஏரியை சாலையோரம் சீரமைத்து வருகிறோம். இங்கு படகு சவாரி அனுமதிக்கப்படும்.
3 பூங்காக்கள்
60 அடி அகலம் கொண்ட இந்த சாலையில் 5 மீட்டருக்கு இடையில் மரங்களும், வேளச்சேரி, கல்லுக்குட்டை, பெருங்குடி ஆகிய இடங்களில் தலா இரண்டு மைதானங்களிலும் மூன்று பூங்காக்கள் அமைக்கப்படும். மேலும் இங்கு ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட புறம்போக்கு நிலங்களை மீட்கவும் சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
நகர சதுக்கம்
மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘பெருங்குடி ரயில் நிலையம் அருகே நகர்ப்புற மக்கள் கூடும் இடத்தை உருவாக்கி வருகிறோம். எம்ஆர்டிஎஸ் நிலையத்திற்கு அருகில் மின்விளக்கு ஏற்பாடுகள் மற்றும் அமரும் பகுதிகள் தவிர, சேதமடைந்த சென்டர் மீடியன்கள் பசுமையுடன் மீண்டும் கட்டப்படும். மேலும் இந்த பகுதியை ஒரு விற்பனை மண்டலமாக மாற்றவும், கத்திப்பாரா நகர சதுக்கம் போன்ற உணவுக் கடைகள் மற்றும் பிளே சந்தைகளை அனுமதிக்கும் வணிகப் பகுதிகளை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளோம்,’’ என்றனர்.
The post வேளச்சேரி – பெருங்குடி ரயில் நிலைய இணைப்பு சாலை பரபரப்பான வர்த்தக சாலையாக மாறுகிறது: நடைபாதையில் 80 கடைகள் சென்ைன மாநகராட்சி திட்டம் appeared first on Dinakaran.