சுதந்திர தின நூற்றாண்டில் கப்பல் போக்குவரத்தில் முதல் 10 இடங்களை இந்தியா பிடிக்கும்: ஒன்றிய அமைச்சர் சர்பானந்த சோனாவால் பேச்சு

சென்னை: சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள தனியார் விடுதியில் காமராஜர் துறைமுகத்தின் 25ம் ஆண்டு விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக ஒன்றிய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால் மற்றும் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, சென்னை துறைமுகம் மற்றும் காமராஜர் துறைமுக தலைவர் சுனில் பாலிவால், ஸ்குவாஷ் வீராங்கனை தீபிக்கா பல்லிகல், நடிகை ஆண்ட்ரியா ஆகியோரும் கலந்து கொண்டனர். காமராஜர் துறைமுகம் குறித்த விளக்க புத்தகத்தை அமைச்சர் சோனாவால் வெளியிட்டார்.

தொடர்ந்து, ரூ.520 கோடி மதிப்பீட்டிலான நான்காம் கட்ட மூலதன அகழாய்வு (தூர்வாரும்) திட்டம், ரூ.37 கோடி மதிப்பீட்டில் நாள் ஒன்றுக்கு சுமார் 10 லட்சம் லிட்டர் கடல் நீரின் உப்பை நீக்கி சுத்திகரித்து பயன்படுத்தும் புதிய ஆலை, ரூ.25 கோடி செலவில் துறைமுகத்திற்கான ஒருங்கிணைந்த கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்ட முக்கிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், ‘‘இந்த துறைமுகம் அமைந்துள்ள காட்டுப்பள்ளி முதல் கொல்கத்தா சாலையில் பெங்களூரு சாலை, திருச்சி சாலை, கிழக்கு கடற்கரை சாலையில் பெரிய ரிங் ரோடு அமைக்கப்பட்டு வருகிறது என்றால் இதற்கு முழுக்க காரணம் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்‘‘ என்றார்.

ஒன்றிய அமைச்சர் சர்பானந்தா சோனாவால் பேசியதாவது: உலகளவில் இந்தியா கடல்வழி போக்குவரத்தில் பெரும் வளர்ச்சிகளை அடைந்து வருகிறது. அண்மையில் உலக வங்கி வெளியிட்ட ஆய்வறிக்கையில் இந்திய கப்பல் போக்குவரத்து துறை முன்னேற்றத்தை கண்டுள்ளதை வெளிப்படுத்துகிறது. இந்தியாவின் நூற்றாண்டு சுதந்திரத்தில் கப்பல் போக்குவரத்தில் உலகின் டாப் 10 நாடுகளில் இந்தியா இருக்கும். தமிழ்நாட்டு மக்கள் அனைத்து துறைகளிலும் அர்ப்பணிப்புடன் பணியாற்றுகின்றனர். இந்த காமராஜர் துறைமுகம் பொன்விழா ஆண்டில் மேலும் பல வளர்ச்சிகளை அடையும். இவ்வாறு அவர்பேசினர். இந்நிகழ்ச்சியில் காமராஜர் துறைமுக மேலாண் இயக்குநர் ஐரின் சிந்தியா, சென்னை துறைமுக துனைத் தலைவர் விஸ்வநாதன், பொதுப்பணித்துறை செயலாளர் மங்கத் ராம் சர்மா, தமிழ்நாடு கடல்சார் வாரிய துணை தலைவர் வள்ளலார் மற்றும் காமராஜர் துறைமுக பணியாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

The post சுதந்திர தின நூற்றாண்டில் கப்பல் போக்குவரத்தில் முதல் 10 இடங்களை இந்தியா பிடிக்கும்: ஒன்றிய அமைச்சர் சர்பானந்த சோனாவால் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: