ஊட்டி, டிச.7: ஊட்டி-குன்னூர் சாலையில் சின்னபிக்கட்டி பகுதியில் சாலையோரம் உள்ள ராட்சத பாறை அகற்றப்படாமல் உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தை மற்ற மாவட்டங்களுடன் இணைக்கும் பிரதான சாலையாக ஊட்டி-குன்னூர்-மேட்டுபாளையம் சாலை உள்ளது. இச்சாலை தேசிய நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இச்சாலையை அதிகமானோர் பயன்படுத்துவதால் எப்போதும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும்.
வாகனங்கள் அதிகரிப்பு காரணமாகவும் சீசன் சமயங்களில் வர ஆயிரக்கணக்கான வாகனங்கள் ஊட்டிக்கு வருகை புரிவதால் இச்சாலையில் கடும் ேபாக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல்களை குறைக்கும் நோக்கில் பல இடங்களில் விரிவாக்கம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு பணிகள் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக, ஊட்டி-குன்னூர் இடையே சின்னபிக்கட்டி பகுதியில் பக்கவாட்டு சுவர் இடிக்கப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆனால், இங்கிருந்த ராட்சத பாறை அகற்றப்படாமல் உள்ளது. முட்புதர்கள் வளர்ந்து பாறைகள் இருப்பதே தெரியாமல் உள்ளது. இப்பாறையால் விபத்து ஏற்பட கூடிய அபாயமும் நீடிக்கிறது. எனவே இப்பாறையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
The post சாலையோர ராட்சத பாறையால் விபத்து அபாயம் appeared first on Dinakaran.