சூலூர்,டிச.7: ரேஷன் கடைகளில் தற்போது விற்பனை செய்யப்படும் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து 100 நாட்கள் 100 ரேஷன் கடைகள் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கட்சி சார்பற்ற விவசாய சங்கத்தினர் அறிவித்திருந்தனர். நேற்று 50-வது நாள் போராட்டத்தின் ஒரு பகுதியாக பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பேரணிக்கு கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத் தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். சூலூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அலுவலகம் அருகே அந்த சங்கத்தை சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி ஊர்வலமாக சென்று தாசில்தார் அலுவலகத்தை அடைந்தனர். அங்கு தேங்காய் எண்ணெய் வழங்குவது குறித்து சிறிது நேரம் கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர் அனைத்து விவசாயிகளும் இணைந்து சூலூர் வட்டாட்சியர் தனசேகரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதில் தமிழ்நாட்டில் தென்னை விவசாயிகளின் நலன் கருதி கள் இறக்க அனுமதிக்க வேண்டும். ரேஷன் கடைகளில் தற்போது வழங்கப்பட்டு வரும் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். சிறப்பு விருந்தினராக சூலூர் எம்எல்ஏ கந்தசாமி கலந்துகொண்டு விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.
The post ரேஷன்கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க கோரி சூலூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.