×

யாதுமுணர்ந்தே தவிர்த்தோம்; பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம்: விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை

சென்னை, டிச.7: யாதுமுணர்ந்தே தவிர்த்தோம், பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை:அம்பேத்கர் குறித்து நூல் அம்பேத்கரின் நினைவு நாளில் சென்னையில் வெளியிடப்பட்டது. நடிகர் விஜய் இந்நிகழ்வில் பங்கேற்கவிருக்கிறார் என்பது ஏற்பாட்டாளர்கள் உள்ளிட்ட எங்களை தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஆனால், திடுமென ஒரு தமிழ் நாளேடு இதனை பெரிய செய்தியாக-தலைப்புச் செய்தியாக வெளியிட்டது. திமுகவுக்கும் விசிகவுக்கும் இடையிலுள்ள நட்புறவில் அய்யத்தைக் கிளப்பி, கருத்து முரண்களை எழுப்பி, திமுக கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவதும், அதன் மூலம் கூட்டணியில் விரிசலை உருவாக்குவதும் தான் அதன் உள்நோக்கமாக இருக்கமுடியும். என் மீதான அரசியல் நன்மதிப்பையும் நம்பகத் தன்மையையும் கேள்விக்குள்ளாக்குவதும் தான் அந்த நாளேட்டின் நோக்கம்.

இந்த நூல் வெளியீட்டு விழாவுக்கு அரசியல் உள்நோக்கம் கற்பித்து அதனைப் பூதாகரப்படுத்திய அந்த நாளேட்டின் சதி அரசியல் பற்றி ஏன் ஒருவரும் வாய் திறக்கவில்லை? விசிக ஏற்கனவே ஒரு கூட்டணியைத் தோழமை கட்சிகளோடு இணைந்து உருவாக்கியிருக்கிறது. திமுக தலைமையிலான அந்தக் கூட்டணியைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதையும் அதன் மூலம் தமிழ்நாட்டில் சனாதன சக்திகளைக் காலூன்றவிடாமல் தடுப்பதையும் தனது முதன்மையான கடமைகளாகவும் கொண்டு செயலாற்றி வருகிறது. திமுக கூட்டணியை உடைக்க வேண்டுமென்கிற செயல் திட்டத்தோடு நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமும் ஏதேதோ பிதற்றிக் கொண்டிருப்பவர்கள். இவர்களில் யாரும், ஏன் ஏற்கனவே இசைவளித்த திருமாவளவனை விட்டு விட்டு நிகழ்ச்சியை நடத்திட முடிவெடுத்தது?- என்கிற கேள்வியை எழுப்பவில்லை.

விஜயை கொண்டே அவர்கள் விழா நடத்தட்டும் என்று மிகமிக தொடக்க நிலையிலேயே அவர்களிடம் எனது நிலைப்பாட்டைக் கூறிவிட்டேன். ‘விஜய்யைத் தவிர்த்திட முயற்சி செய்யுங்கள்’ என்று நான் கூறியிருந்தாலும், அதனை அவர்களால் ஏற்றுக்கொள்ள இயலுமா என்றால், அதற்கு வாய்ப்பில்லை என்பது தான் மிகவும் இயல்பான உண்மை நிலையாகும். ஆதவ் அர்ஜூன் கட்டுப்பாட்டில் திருமா இருப்பது உண்மையெனில், அவர் அழைத்தும்கூட ஏன் திருமா இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை என்கிற கேள்வி எழுவதும் இயல்புதானே?. ‘திருமாவை யாரும் அப்படி கட்டுக்குள் வைத்திருக்க முடியாது. எனவே, யாதுமுணர்ந்தே தவிர்த்தோம்! பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம்.

The post யாதுமுணர்ந்தே தவிர்த்தோம்; பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம்: விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Thirumavalavan ,Vijay festival ,Chennai ,Vichitumi Siruthaigal Party ,Ambedkar ,Vijay ,Dinakaran ,
× RELATED தேர்தலில் இவ்வளவு இடங்கள் வேண்டும் என...