×

கர்நாடகாவில் 2 நாட்கள் நடைபெறும் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் தொடங்கியது; கார்கே, ராகுல் பங்கேற்பு: அமித்ஷா பதவி விலக தீர்மானம்

புதுடெல்லி: கர்நாடக மாநிலம் பெலகாவியில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் இன்று பிற்பகல் தொடங்கியது. அதில், கட்சியின் தேசிய தலைவர் மல்லிகர்ஜூன கார்கே, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் வயநாடு எம்பி. பிரியங்கா காந்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கர்நாடக மாநிலம் பெலகாவியில் காங்கிரஸ் கட்சியின் மாநாடு கடந்த 1924ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி நடைபெற்றது. அதில் தலைவராக இருந்து மாநாட்டை வழி நடத்தி சென்றவர் மகாத்மா காந்தி. இதன் நூற்றாண்டையொட்டி, பெலகாவியில் 2 நாட்கள் காரிய கமிட்டி கூட்டம் நடத்தப்பட திட்டமிடப்பட்டது.

அதன்படி, பெலகாவியில் உள்ள காந்தி நகரில் இன்று பிற்பகல் 3 மணிக்கு கூட்டம் தொடங்கியது. அதில், கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, பொதுச்ெசயலாளரும் வயநாடு எம்பி.யுமான பிரியங்கா காந்தி பங்கேற்றனர். இதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் அவர்கள் பெலகாவி வந்தனர். மேலும் இந்த கூட்டத்தில், தேசிய செயலாளர்கள், மாநில தலைவர்கள் மற்றும் எம்பிக்கள் உள்ளிட்ட 200 முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், சட்ட மேதை அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும், அவரது கருத்துக்கு மன்னிப்பு கேட்க கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த ஆண்டுக்கான காங்கிரசின் செயல் திட்டம் முடிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது. மேலும், ஒன்றிய பாஜ ஆட்சியில் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வு, ஜனநாயகத்தின் சீரழிவு, பொதுத்துறை நிறுவனங்கள் மீதான தாக்குதல் போன்ற சவால்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

2வது நாள் கூட்டம் நாளை நடைபெறுகிறது. அதில், ‘ஜெய் பாபு, ஜெய் பீம், ஜெய் சம்விதான்’ என்ற பேரணி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு ‘நவ சத்தியாகிரக சந்திப்பு’ என்று பெயரிடப்பட்டுள்ளது. சமீபத்தில், அரியானா, ஜம்மு காஷ்மீர், மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அதில், அரியானா, மகாராஷ்டிராவில் ஏற்பட்ட தோல்வி குறித்தும், டெல்லி, பீகார் போன்ற மாநிலங்களில் அடுத்தாண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தல் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது. மேலும், கட்சியின் எதிர்கால திட்டம் குறித்தும் விவாதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

The post கர்நாடகாவில் 2 நாட்கள் நடைபெறும் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் தொடங்கியது; கார்கே, ராகுல் பங்கேற்பு: அமித்ஷா பதவி விலக தீர்மானம் appeared first on Dinakaran.

Tags : Congress Kariya Committee ,Karnataka ,Karke ,New Delhi ,Congressional Committee ,Belagavi, Karnataka ,Mallikarjuna Karke ,Rahul Gandhi ,Wayanad ,Priyanka Gandhi ,Rahul ,Amitsha ,Dinakaran ,
× RELATED கர்நாடகாவின் பெலகாவியில் நாளை...