அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட 7 பாலங்கள் இடிந்ததா?.. எடப்பாடி பேட்டி


திருவண்ணாமலை: அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட 7 பாலங்கள் இடிந்ததா என்பது குறித்து எடப்பாடி பேட்டியளித்து உள்ளார். பெஞ்சல் புயல் காரணமாக கடந்த 2ம் தேதி பரவலாக பலத்த மழை பெய்ததால், சாத்தனூர் அணைவழியாக தென்பெண்ணை ஆற்றில் ஒரு லட்சத்து 68 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதில் அகர பள்ளிப்பட்டுவில் இருந்து தொண்டமானூர் செல்லும் மேம்பாலம் அடித்துச் செல்லப்பட்டது. அடித்து செல்லப்பட்ட மேம்பால இடத்தை அதிமுக பொது செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி நேற்று பார்வையிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘1972ம் ஆண்டு இந்த தென்பெண்ணை ஆற்றில் இரண்டு லட்சத்து 40 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதனை கருத்தில் கொண்டு இந்த பாலத்தை கட்டியிருக்க வேண்டும். அமைச்சர் வேலு, அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட 7 பாலங்கள் இடிந்துள்ளதாக பொய்யான குற்றச்சாட்டு வைக்கிறார். செம்பரம்பாக்கம் ஏரி 30000 கன அடி தண்ணீர் மட்டுமே வெளியேற்ற முடியும். சாத்தனூர் அணையை விவசாயத்திற்கும் குடிநீருக்கும் தண்ணீர் பயன்படுத்துகின்றனர். திமுக எதிர்க்கட்சி ஆக இருக்கும்போது செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து ஒரு லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது எனகூறினார்கள்.

அதிமுக ஆட்சிக்காலத்தில் பெரிய நிறுவனங்களுடன் தான் மேம்பாலம் கட்டுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் திமுக ஆட்சிக்காலத்தில் மேம்பாலம் கட்டுவதற்கு சிறிய நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்படுகிறது. மீண்டும் 2026ல் அதிமுக ஆட்சி அமைத்தால் இதைவிட உயரமான பாலங்கள் தமிழகத்தில் மிகப்பெரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து தரமாக பாலங்கள் கட்டப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட 7 பாலங்கள் இடிந்ததா?.. எடப்பாடி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: