அவனியாபுரம்: மதுரை விமான நிலையம் 24 மணி சேவையை தொடங்கியுள்ள நிலையில், மதுரை – சென்னை இடையே இரவு நேரத்தில் புதிய விமான சேவை டிச.20 முதல் தொடங்குகிறது. மதுரை விமான நிலையம், கடந்த அக்.1ம் தேதி முதல் 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. ஆனால் இதுவரை எந்தவொரு விமான நிறுவனமும், இரவு நேர சேவையை அமல்படுத்தவில்லை. இந்நிலையில், மதுரையில் இருந்து அதிக எண்ணிக்கையில் விமானங்களை இயக்கும் தனியார் நிறுவனம், டிச.20ம் தேதி முதல் மதுரை – சென்னை விமான சேவையை இரவு 10 மணிக்கு மேல் தொடங்க உள்ளது.
இதன்படி சென்னையிலிருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு, 10.25 மணிக்கு மதுரை வந்தடையும் விமானம், மறுமார்க்கமாக இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 12.05 மணிக்கு சென்னை சென்றடையும்.இந்த இரவு நேர சேவை, சென்னையிலிருந்து அதிகாலை வெளிநாடுகளை நோக்கி பயணிக்கும் விமானங்களில் செல்ல வேண்டிய பயணிகளுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். அதேபோல் மதுரையிலிருந்து வெளிநாடுகளுக்கு நேரடி விமான சேவைகளை தொடங்க ஒன்றிய அரசு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என, வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
The post மதுரை-சென்னை விமானம் டிச.20 முதல் இரவிலும் இயங்கும் appeared first on Dinakaran.