இலங்கை சிறையில் இருந்து விடுவிப்பு: 8 தமிழக மீனவர்கள் சென்னை வந்தனர்


சென்னை: ராமநாதபுரம், ராமேஸ்வரம், புதுக்கோட்டையை சேர்ந்த 8 மீனவர்கள், கடந்த ஜூன் மாதம் 26ம் தேதி, ஜூலை 1ம் தேதி, ஜூலை 11ம் தேதிகளில் படகுகளில் சென்று, கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, நள்ளிரவு நேரத்தில் இலங்கை கடலோர காவல்படை ரோந்து கப்பல் வந்து, தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக குற்றம் சாட்டி, அடுத்தடுத்து 8 மீனவர்களையும் கைது செய்து, அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்து, இலங்கைக்கு கொண்டு சென்று, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதையடுத்து தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் அனைவரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அவசர கடிதம் எழுதினார்.

இதன் காரணமாக, இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், இலங்கை அரசு அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, இலங்கை நீதிமன்றம், ராமநாதபுரம், ராமேஸ்வரம், புதுக்கோட்டையைச் சேர்ந்த 8 மீனவர்களை விடுதலை செய்து, இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்திய தூதரக அதிகாரிகள், மீனவர்கள் 8 பேரையும் இலங்கையில் இருந்து, சென்னைக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் அனுப்பி வைத்தனர். விமான நிலையத்தில் தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள், மீனவர்கள் 8 பேரையும் வரவேற்று, அரசு ஏற்பாடு செய்து இருந்த வாகனங்கள் மூலம், அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.

The post இலங்கை சிறையில் இருந்து விடுவிப்பு: 8 தமிழக மீனவர்கள் சென்னை வந்தனர் appeared first on Dinakaran.

Related Stories: