முறையான சாகுபடி செய்ய முடியாமல் திணறல் விவசாயிகளை ஒருங்கிணைத்து முகாம்கள் நடத்த வேண்டும்

*வேளாண்துறையினருக்கு கோரிக்கை

ஆண்டிபட்டி : விவசாயிகள் முறையாக சாகுபடி செய்யாமல், தற்போது நிலவரத்தை பொருத்து விவசாயம் செய்து வருவதால், விவசாயத்தில் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்கின்றனர். எனவே வேளாண்மை துறை அதிகாரிகள் விவசாயிகளை ஒருங்கிணைத்து முறையான ஆலோசனை வழங்கி, முகாம்கள் நடத்தியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழகத்தில் விவசாயம் முக்கிய பங்களிக்கிறது. முன்னர் காலத்தில் நிலப்பரப்பை ஆய்வு செய்து அறிந்து அவற்றின் தன்மைக்கு ஏற்ப ஐந்து வகை நிலங்களாக பிரிக்கப்பட்டது. மலையும் மலையும் சார்ந்த நிலம் குறிஞ்சி என்று, காடும் காடு சார்ந்த நிலம் முல்லை என்று, வயலும் வயல் சார்ந்த நிலம் மருதம் என்று, கடலும் கடல் சார்ந்த நிலம் நெய்தல் என்று, மணலும் மணல் சார்ந்த நிலம் பாலை என்று ஐந்து வகை நிலங்களாக பிரித்து வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த விவசாய நிலத்தில் நஞ்சை நிலத்தில் நஞ்சை பயிர் செய்ய வேண்டும், புஞ்சை நிலத்தில் புஞ்சை பயிர் செய்ய வேண்டும் என்பதே பயிர் வாரி முறை. இதுதான் இயற்கை வழி சாகுபடி முறை. ஆற்றங்கரையோரம், கண்மாய் உள்ளிட்ட நல்ல நீர் பாசனம் இருக்கும் இடங்களான நஞ்சை நிலத்தில் நெல், வாழை, கரும்பு போன்றவை பயிரிடலாம்.

எந்த ஒரு பாசன வசதி இல்லாத வானம் பார்த்த பூமியாக இருக்கும் புஞ்சை நிலத்தில் மானாவாரி பயிர்கள் எண்ணெய் வித்துக்கள் உள்ளிட்டவைகளை பயிரிடலாம். பழங்கால இயற்கை விவசாய வழிமுறைகளை பயன்படுத்தி, தற்போது உள்ள தொழில்நுட்ப முறைகளை விவசாயத்தில் புகுத்தி விவசாய சாகுபடி செய்து வரலாம்.

இதில் விவசாயத்திற்கு ஏற்ற நிலங்களில் விவசாயம் செய்யும் போது அந்த நிலத்தின் தன்மை, நீரின் தன்மை ஆகியவையில் கவனம் செலுத்தி விவசாயம் செய்ய வேண்டும். அதன் பிறகு மண் பரிசோதனை செய்ய வேண்டும். மண் பரிசோதனை மூலம் சத்து பற்றாக்குறை அறிந்து, அதன் அடிப்படையில் உரமிட வேண்டும். இந்த வழிமுறைகளை பின்பற்றாமல் ஆண்டிபட்டி பகுதியில் விவசாயம் செய்யும் விவசாயிகள் பல்வேறு நஷ்டத்தையும் இழப்பையும் சந்திக்கின்றன. ஆண்டிபட்டி தாலுகாவில் ஆண்டிபட்டி ஒன்றியம், கடமலை-மயிலை ஒன்றியம் உள்ளது.

இதில் ஆண்டிபட்டி ஒன்றியத்தில் 30 கிராம ஊராட்சிகளும், 150க்கும் மேற்பட்ட உட்கிராமங்களும் உள்ளன. கடமலை-மயிலை ஒன்றியத்தில் 18 ஊராட்சிகளும் 100க்கும் மேற்பட்ட உட்கிராமங்களும் உள்ளன.‌ இங்கு சுமார் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்து வருகின்றனர். ஆண்டிபட்டி ஒன்றியத்தில் டி.புதூர், அணைக்கரைப்பட்டி, மூணான்டிபட்டி, சேடபட்டி, தர்மத்துப்பட்டி, புள்ளிமான்கோம்பை உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளதால், ஆற்றுப் பாசனம் மூலமாகவும், நிலத்தடி நீர்மட்டம் அதிகமாக இருப்பதால் கிணற்று பாசனம் மூலமாகவும் விவசாயம் நடைபெற்று வருகிறது.

இதேபோல் கன்னியப்பபிள்ளை‌பட்டி, மாயாண்டிபட்டி, கதிர்நரசிங்கபுரம், ராஜதானி‌, பாலக்கோம்பை, சித்தார்பட்டி, ஏத்தக்கோவில் இந்த பல்வேறு கிராமங்களில் விவசாயம் வானம் பார்த்த பூமியாக உள்ளது. இங்கு கம்பு, சோளம், கேழ்வரகு உள்ளிட்ட பல்வேறு மானாவாரி பயிர்களும், எண்ணை வித்துக்களான தென்னை, ஆமணக்கு உள்ளிட்ட பல்வேறு வகைகள் சாகுபடி செய்கின்றனர்.இதேபோல் பல்வேறு பகுதிகளில் தக்காளி, வெண்டை, முருங்கை, வெங்காயம், பச்சை மிளகாய் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் இறவை பாசனம் செய்து வருகின்றனர்.

இந்த பகுதிகளில் மானாவாரி மற்றும் இறவை பாசனம் மூலம் சாகுபடி செய்யும் விவசாயிகள் முறையான ஆலோசனை இல்லாமல் விவசாயம் செய்து வருகின்றனர். இதனால் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். கடந்த சில காலங்களாக தக்காளியின் விலை கிலோ ரூ.50 முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல் வெங்காயம் கிலோ ரூ.80 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.‌ அதிக விலைக்கு தக்காளி, வெங்காயம் விற்பனை செய்யப்பட்டு வருவதால் ஆண்டிபட்டி ஒன்றிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தக்காளி, வெங்காயம் பயிரிட ஆர்வம் காட்டி வருகின்றனர். தக்காளி, வெங்காயம் விவசாயத்தில் எடுப்புக்கு வருவதற்கு 60 முதல் 70 நாட்கள் வரை வரும்.

ஆண்டிபட்டி பகுதியில் தக்காளி, வெங்காயம் தற்போது தான் பயிரிட்டுள்ளனர். இவைகள் எடுப்புக்கு வருவதற்கு 60 நாட்கள் வரை வரும். ஆனால் அதற்குள் தக்காளி மற்றும் வெங்காயம் விலைகள் குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அப்போது விலை குறைந்தால் விவசாயிகள் நஷ்டத்திற்கு ஆளாவார்கள். விவசாயிகள் முறையாக விவசாயம் செய்யாமலும் சரியான காலநிலையில் விவசாயம் செய்யாமல் இருப்பதால் இந்த நிலைக்கு விவசாயிகள் ஆளாகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் தெரிவிக்கையில், முன்னர் காலத்தில் விவசாயம் தென் மாவட்டங்களில் கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு, மண்ணின் தரம் நீரின் அளவு பொருத்து ஒரே மாதிரியான விவசாயம் நடக்கும். ஆனால் தற்போது அப்படியான நிலைகள் இல்லை.

எந்த காய்கறி அதிகமான விலைக்கு போகிறதோ அதனை உடனே நடவு செய்து, வருவாய் ஈட்டி விடலாம் என்று நினைத்து பெறும் நஷ்டத்திற்கு‌ ஆளாகிறார்கள். தற்போது விவசாயிகளிடையே ஒருங்கிணைப்பு இல்லை. முன்பு போல் இல்லாமல் விவசாயத்தில் உரம், ஆள் கூலி, களையெடுத்தல், போக்குவரத்து செலவு உள்ளிட்டவைகள் அதிகமாக உள்ளன.

விவசாயத்தில் வரும் வருமானம் இதற்கே போதுமானதாக உள்ளது. விவசாயிகளிடையே ஒருங்கிணைப்பை மாவட்ட வேளாண்மை அதிகாரி ஏற்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கு தொடர்ந்து ஆலோசனை வழங்க வேண்டும். மாதம் ஒவ்வொரு பகுதியில் முகாம்கள் நடத்த வேண்டும். இவ்வாறு வேளாண்மை அதிகாரிகள் விவசாயிகளை ஒருங்கிணைத்து முறையாக விவசாயம் செய்ய வழிநடத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.

The post முறையான சாகுபடி செய்ய முடியாமல் திணறல் விவசாயிகளை ஒருங்கிணைத்து முகாம்கள் நடத்த வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: