ஜிகியூபெர்ஹா: இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்டில் சிறப்பாக ஆடிய தென் ஆப்ரிக்காவின் ரியான் ரிக்கல்டன் டெஸ்ட் போட்டியில் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார். தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்டில் தென் ஆப்ரிக்கா 233 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், 2வது டெஸ்ட் ஜிகியூபெர்ஹாவில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது. மார்க்ரம், ஜோர்ஜி தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
இதில், அசிதா பெர்னாண்டோ வீசிய ஆட்டத்தின் 2வது ஓவரின் முதல் பந்தில் ஜோர்ஜி, கோல்டன் டக் அவுட்டாகி வெளியேறினார். இந்த அதிர்ச்சியிலிருந்து தென் ஆப்ரிக்கா மீள்வதற்குள் லஹிரு குமாரா பந்துவீச்சில் மார்க்ரம் (20), ஸ்டப்ஸ் (4) ஆட்டமிழந்தனர். தென் ஆப்ரிக்கா 44 ரன்னுக்கு 3 விக்கெட்டுடன் தடுமாறிய நிலையில் 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இளம் வீரர் ரியான் ரிக்கல்டன், கேப்டன் பவுமா நிதானமாக ஆடினர். பொறுப்புடன் ஆடிய இருவரும் அரைசதம் அடித்தனர். இந்த ஜோடி 133 ரன் சேர்த்த நிலையில் பவுமா 78 ரன்னில் அசிதா பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பெடிங்கம் (6) ஜெயசூர்யா பந்தில் வந்த வேகத்தில் வெளியேறினார்.
ஆனாலும் ஒருமுனையில் நங்கூரமிட்டு ஆடிய ரிக்கல்டன் டெஸ்ட் போட்டியில் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார். இவர் 231 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். ரிக்கல்டனுக்கு, வெர்ரென்னே நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்.
ஆனால், ஆட்ட நேரம் முடிய வெறும் 4 ஓவர்களே எஞ்சியிருந்த நிலையில் ரிக்கல்டன் (101 ரன்) லஹிரு குமாரா பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த யான்சன் 4 ரன்னில் விஷ்வா வேகத்தில் வெளியேறினார். இதனால், முதல் நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்ரிக்கா 86.3 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 269 ரன்களுடன் இருந்தது. வெர்ரென்னே 48 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். 2ம் நாள் ஆட்டம் இன்று நடைபெறும்.
The post இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் ரியான் ரிக்கல்டன் முதல் சதம்: தென் ஆப்ரிக்கா 269/7 appeared first on Dinakaran.