மெல்போர்ன்: இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அறிமுக வீரர் சாம் கோன்ஸ்டாஸ் அதிரடியாக ஆடியதை பார்க்கும்போது 21 ஆண்டுகளுக்கு முன்பு சேவாக் ஆடிய ஆட்டம் போல் இருந்ததாக முன்னாள் ஆஸ்திரேலிய வீர ஜஸ்டின் லாங்கர் பாராட்டி இருக்கிறார்.
இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ள நிலையில், நான்காவது டெஸ்ட் போட்டியில், யாருமே எதிர்பார்க்காத வகையில் அறிமுக வீரராக களம் இறங்கிய சாம் கோன்ஸ்டாஸ் அதிரடியாக ஆடி இந்தியாவுக்கு பதிலடி கொடுத்தார். 52 பந்துகளில் அரைசதம் அடித்த கோன்ஸ்டாஸ் பும்ரா ஓவரில் பவுண்டரி, சிக்சர் என 18 ரன்கள் பறக்க விட்டார். இந்த நிலையில் கோன்ஸ்டாஸ் 60 ரன்களில் ஆட்டம் இழந்தார். கோன்ஸ்டாஸ் இன்னிங்சை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கூறுகையில், இந்த போட்டிக்கு முன்பு போன் கோன்ஸ்டாஸ் மிகவும் நம்பிக்கையுடன் இருந்தார். அவர் நிறைய விஷயங்களை பலரிடம் பேசினார். தற்போது பேச்சு மட்டும் இல்லாமல் செயலிலும் அவர் காட்டிருக்கிறார். அவருடைய ஆட்டத்தை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. 21 ஆண்டுகளுக்கு முன் சேவாக் எங்களுக்கு எதிராக 233 பந்துகளில் 195 ரன்கள் குவித்தார். சேவாக் தனி ஆளாக எங்களை சுக்கு நூறாக உடைத்தார். அவருடைய நம்பிக்கையை பார்க்கும் போது பிரமிப்பாக இருந்தது.
தற்போது கோன்ஸ்டாஸ் ஆட்டத்தை பார்க்கும் போது எனக்கு அதுதான் நினைவுக்கு வந்தது. கோன்ஸ்டாசின் இந்த அதிரடி ஆட்டம் மூலம் உஸ்மான் கவாஜா மீதான அழுத்தம் குறைந்து இருக்கிறது. கவாஜா பெரும்பாலும் வார்னருடன் தான் விளையாடுவார். வார்னர் அதிரடியாக ஆடும் போது கவாஜா தன்னுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்ப்பார். தற்போது அதே போல் ஒரு அதிரடி பார்ட்னர் கவாஜாவுக்கு கிடைத்து இருப்பதால் அவர் மீதான நெருக்கடி குறைந்து இருக்கிறது’’ என்றார்.
The post பும்ரா பந்துவீச்சை நொறுக்கிய சாம்; 21 ஆண்டுகளுக்கு முன் சேவாக் ஆடிய ஆட்டம்போல் இருந்தது: ஆஸி. மாஜி வீரர் ஜஸ்டின் லாங்கர் கருத்து appeared first on Dinakaran.