மாமல்லபுரம்: மாமல்லபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதுப்பிக்கப்பட்ட வகுப்பறை மற்றும் நுண்திறன் வகுப்பறை திறப்பு விழா பள்ளிக் கல்வி இயக்குனர் திறந்து வைத்தார். மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் இயங்கி வரும் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா குழந்தை தொழிலாளர் முறை அகற்றும் திட்டத்தின் சார்பில், கிரெடில்லா சமூக பொறுப்பு நிதி உதவியுடன் புதுப்பிக்கப்பட்ட வகுப்பறை மற்றும் புதிய நுண்திறன் வகுப்பறை திறப்பு விழா நேற்று முன்தினம் மாலை நடந்தது. விழாவுக்கு, செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கற்பகம் தலைமை தாங்கினார். மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ், முதன்மை மேலாளர் தேவேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், சிறப்பு அழைப்பாளராக பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன் கலந்து கொண்டு, புதுப்பிக்கப்பட்ட வகுப்பறை மற்றும் புதிய நுண் திறன் வகுப்பறையை திறந்து வைத்து, மாணவர்களுடன் கலந்துரையாடினார். தொடர்ந்து, மாணவர்களின் வருகை பதிவேடுகள் குறித்து ஆய்வு செய்து, டேபிள் மற்றும் பென்ச்சுகள் போதிய அளவில் உள்ளதா? உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்து தலைமை ஆசிரியையிடம் கேட்டறிந்தார். இந்நிகழ்ச்சியில், குழந்தை தொழிலாளர் முறை அகற்றும் திட்டத்தின் உதவி பொது மேலாளர் மோகனவேல், மேலாளர்கள் ஸ்டீபன் ரீகன், பள்ளி தலைமை ஆசிரியை நிர்மலா தேவி, மாணவ – மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவுக்கான, ஏற்பாடுகளை உதவி திட்ட மேலாளர் சிலம்பரசன், முதுநிலை ஒன்றிய மேலாளர் செல்வி ஆகியோர் செய்திருந்தனர்.
The post மாமல்லபுரம் அரசு மேல்நிலை பள்ளியில் நுண்திறன் வகுப்பறை திறப்பு; கல்வி துறை இயக்குனர் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.