மனைவியை எரித்து கொல்ல முயன்ற கல்யாண மன்னனுக்கு 10 ஆண்டு சிறை: மகிளா கோர்ட் பரபரப்பு தீர்ப்பு


காஞ்சிபுரம்: விழுப்புரம் அருகே மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்ய முயன்ற வழக்கில் கல்யாண மன்னனுக்கு 10 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டது. காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் சங்கர்(44). கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவர் திருச்சிக்கு கொத்தனார் வேலைக்கு சென்றபோது அங்கு புதுநகரை சேர்ந்த ராஜலட்சுமி(39) என்பவரை 2011ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டாராம். பின்னர் விழுப்புரம் அருகே மோட்சகுளம் பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தனர். தொடர்ந்து அந்தபகுதியில் நெசவு தொழிலில் ஈடுபட்டு வந்தார். சில மாதங்களுக்கு பிறகு மனைவி மீது வெறுப்படைந்த சங்கர், அவருக்கு சரியாக சாப்பாடு போடாமல் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 2013 நவம்பர் 13ம் தேதி சங்கர் வேலைக்கு சென்றுவிட்டு, வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது மனைவி ராஜலட்சுமி சமைக்க அரிசி வாங்கிக் கொண்டு வா, இல்லை சமைக்க காசு கொடுக்குமாறு கேட்டுள்ளார். ஆனால் காசு கொடுக்க மறுத்த சங்கர் வெளியில் சென்று மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து சாப்பாடு போடுமாறு தகராறு செய்துள்ளார். அப்போது நான் முதல் மனைவியுடன் சென்று விடுகிறேன் என்று சங்கர் கூறியதும் ஆத்திரமடைந்த ராஜலட்சுமி, சங்கரிடம் கேட்டபோது தான் ஏற்கனவே அவர் காஞ்சிபுரத்தில் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்ததும், பின்னர் வந்தவாசியில் மற்றொரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்ததும் தெரிய வந்தது.

தற்போது மூன்றாவதாக ராஜலட்சுமியை காதலித்து கல்யாணம் செய்து கொண்டுள்ளார். இதுபோல் பெண்களை காதலித்து தொடர்ந்து கல்யாணம் செய்து வந்த சங்கர் மீது ஆத்திரமடைந்த ராஜலட்சுமி சங்கரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் கோபம் அடைந்த சங்கர், மனைவி என்றும் பாராமல் ராஜலட்சுமி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் அலறல் சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 18 சதவீத தீக்காயங்களுடன் ராஜலட்சுமி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இது குறித்து மாஜிஸ்திரேட்டிடம் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வளவனூர் போலீசார் சங்கர் மீது கொலை முயற்சி வழக்கு பதிந்து கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி இளவரசன் நேற்று தீர்ப்பு கூறினார் அதில் குற்றம்சாட்டப்பட்ட சங்கருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ5 ஆயிரம் அபராதமும் அதனைக்கட்ட தவறினால் மேலும் மூன்று மாதம் சிறைதண்டனையும் விதித்து தீர்ப்பளித்து உத்தரவிட்டார். தொடர்ந்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட சங்கர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிறையில் அடைக்கப்பட்டார்.

The post மனைவியை எரித்து கொல்ல முயன்ற கல்யாண மன்னனுக்கு 10 ஆண்டு சிறை: மகிளா கோர்ட் பரபரப்பு தீர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: