ஒடுகத்தூர் அருகே இன்று அதிகாலை உத்திரகாவேரி ஆற்றில் மீண்டும் வெள்ளம் அதிகரிப்பு

ஒடுகத்தூர்: ஒடுகத்தூர் அருகே உத்திர காவேரி ஆற்றில் மீண்டும் வெள்ளம் இன்று காலை அதிகரித்துள்ளது. இதனால் 4 தரைப்பாலங்கள் நீரில் மூழ்கியதால் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த மேல்அரசம்பட்டு அருகே உள்ள உத்திரகாவேரி ஆற்றில் கடந்த சில தினங்களாக பெய்த பலத்த மழையால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள 4 தரைப்பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கியது.

தரைப்பாலங்கள் வழியாக செல்லும் கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் வெள்ளம் வடியும்வரை பாலத்தை கடக்கவேண்டாம் என பேரிகார்டுகள் வைத்து பொதுமக்களுக்கு தடைவிதித்து போலீசார், வருவாய்த்துறையினர் அறிவுறுத்தினர். பின்னர் வெள்ளம் குறைந்துவிட்டதால் பேரிகார்டுகள் அகற்றப்பட்டு வாகனங்கள் சென்று வரவும், பொதுமக்கள் நடந்து செல்லவும் அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்றிரவு ஒடுகத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் மீண்டும் பலத்த மழை பெய்தது. இரவு முழுவதும் பெய்த பலத்த மழையால் உத்திரகாவேரி ஆற்றில் இன்று அதிகாலை முதல் தண்ணீர் அதிகரித்தது.

இதன் காரணமாக உத்திரகாவேரி ஆற்றின் வழியாக செல்லும் ஒடுகத்தூர்-நேமந்தபுரம், கத்தாரிகுப்பம்-காளியம்மன்பட்டி, வண்ணாந்தாங்கல்-அம்மனூர், மேல்அரசம்பட்டு-மடிகம் ஆகிய 4 தரைப்பாலங்கள் மீண்டும் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் 4 தரைப்பாலங்கள் வழியாக போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. ஆற்று பாலத்தை யாரும் கடக்கவேண்டாம். இரவு நேர பயணம் மேற்கொள்ளவேண்டாம், ஆற்றங்கரையோரம் யாரும் செல்லவேண்டாம் என வருவாய்த்துறை, போலீசார் மற்றும் கிராம ஊராட்சிகள், ஒடுகத்தூர் பேரூராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post ஒடுகத்தூர் அருகே இன்று அதிகாலை உத்திரகாவேரி ஆற்றில் மீண்டும் வெள்ளம் அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: