திருப்பூர், டிச.5: திருப்பூர் அரசு பள்ளிகளில் பயிலும் என்.ஜி.சி பிரிவு மாணவ, மாணவிகள் நிலையான இயற்கை வாழ்க்கை முறை, பறவை விலங்குகள் குறித்த கணக்கெடுப்பு மற்றும் அவற்றை அறிந்து கொள்ளும் வகையிலான கானக சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். திருப்பூர் ஜெய்பாபாய் பள்ளியில் நேற்று துவங்கிய பயணத்தை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உதயகுமார் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். திருப்பூர் ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, பிச்சம்பாளையம் புதூர் அரசு பள்ளி மற்றும் கல்லாபுரம் ஆர்விஜி. அரசு பள்ளியை சேர்ந்த மாணவர்கள் 27 பேர் மாணவிகள் 28 பேர் என மொத்தம் 55 பேர் இந்த சுற்றுலாவிற்கு சென்றனர். 3 நாட்கள் நடைபெறும் இந்த சுற்றுலாவில் முதல் நாளான நேற்று மாணவ, மாணவிகள் அமராவதி முதலை பண்ணைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
தொடர்ந்து அங்குள்ள மரபியல் பூங்காவிற்கு அழைத்து செல்லப்பட்டு இயற்கை குறித்த வகுப்புகள் எடுக்கப்பட்டது. 2வது நாளான இன்று சின்னாறு அருகே மழையேற்றம் மற்றும் வன காட்டு விலங்குகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட உள்ளது. நாளை திருமூர்த்தி நீர்வீழ்ச்சி மற்றும் பறவைகள் கண்காணிப்பு குறித்த விளக்க உரை அளிக்கப்படுகிறது. தினந்தோறும் மாலை அறிவியல் தொடர்பான வகுப்புகள் மாணவ, மாணவிளுக்கு ஆசிரியர்கள் மூலம் எடுக்கப்படவுள்ளது. இந்த பயணத்தில் மாணவ, மாணவிகள் பாதுகாப்பிற்காகவும் 8 ஆசிரியர்கள் உடன் சென்றுள்ளனர். தொடக்க நிகழ்ச்சியில் ஜெய்வாபாய் பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா அமலோற்பவ மேரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
The post அரசு பள்ளி மாணவர்கள் கானக சுற்றுலா பயணம் appeared first on Dinakaran.