பனை மரங்கள் வெட்டப்படுவதை முற்றிலும் தடுக்க வேண்டும்

 

திருப்பூர், நவ.30: பனை மரங்கள் வெட்டி விற்பனை செய்யப்படுவது அதிகரித்துள்ளதால், இதைத்தடுத்து பனை மரங்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் சமூக ஆர்வலர் ஈ.பி.அ.சரவணன் கோரிக்கை மனு அளித்துள்ளார். தொடர்ந்து அவர் கூறியிருப்பதாவது:திருப்பூர் மாவட்ட பகுதிகளிலுள்ள பல்வேறு இடங்களில் பனை மரங்கள் எவ்வித அனுமதியுமின்றி தொடர்ச்சியாக வெட்டப்பட்டு வருகின்றது. அத்தியாவசிய தேவைகளுக்காக பனை மரங்களை வெட்ட நேர்ந்தால் கலெக்டரின் அனுமதி பெற்றே பனை மரத்தை வெட்ட வேண்டுமென பனை மரங்கள் பாதுகாப்பு அரசாணை விதி கூறுகிறது.

ஆனால், திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பனை மரங்கள் அழிக்கப்படுவது தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. தற்போது வெவ்வேறு இடங்களில் செழிப்பாக விளைந்திருந்த மிகவும் பழமையான பனை மரங்கள் வெட்டப்பட்டு வருவது வேதனைக்குரியது. பனை மரங்களை வெட்டி திருப்பூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள சாயத்தொழிற்சாலைகளுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. இது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு மரத்துக்கு ரூ.200 வீதம் விலை கொடுத்து வியாபாரிகள் வாங்கிச் செல்கிறார்கள். சுற்றுச்சூழலுக்கு பல வகைகளிலும் பெரும் துணையாக உள்ள பனை மரங்களைப் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

The post பனை மரங்கள் வெட்டப்படுவதை முற்றிலும் தடுக்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: